TNPSC Thervupettagam

மருந்து

February 16 , 2019 2149 days 1842 0
  • மத்திய  மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இரண்டு ஆண்டுகள் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், இந்தியாவில் பிரபல மருந்து நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் மருந்துகளில் தரக் குறைபாடு உள்ளதைக் கண்டுபிடித்து, அறிக்கை வெளியிட்டு அதை தன் இணையதளத்திலும்  வெளியிட்டுள்ளது.

ஆய்வறிக்கை

  • தரமில்லாத மருந்துகளுக்கு இந்தியர்கள் அதிக விலை கொடுக்கின்றனர்; தரமற்ற மருந்துகள் காரணமாக நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு நீடிக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.
  • மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் நடத்திய சோதனையில், 572 மாவட்டங்களில் மொத்தம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 525 பதிவு செய்யப்பட்ட மருந்து விற்பனைக் கடைகள் உள்ளது தெரியவந்துள்ளது. டிரக் இன்ஸ்பெக்டர்கள் என்று அழைக்கப்படும் மருந்து ஆய்வாளர்கள் மொத்தம் 47,954 மருந்து மாதிரிகளைச் சேகரித்தனர். இதில் அரசு மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டமாதிரிகளும் அடங்கும். இவ்வளவு மாதிரி மருந்துகளும் 1,719 தயாரிப்பு மையங்களில் இருந்து வெளிவந்துள்ளன. இவற்றில் 80 சதவீத மருந்துகள் 197 பெரிய நிறுவனங்கள் தயாரிப்பவையாகும்.

புள்ளிவிவரம்

  • சோதனைக்கு எடுக்கப்பட்ட மருந்துகள் 183 மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டு தயாரித்து சந்தைக்கு வந்தவை. இதில் வியப்பான இன்னொரு செய்தி, 47,000 மாதிரிகளில் 80 சதவீத மருந்துகளுக்கு 46 மூலக்கூறுகளே அடிப்படையாக இருந்தது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதில் பட்டியலில் முதலில் இடம்பெறும் முறைகேடு காலாவதியான மருந்து. இரண்டாவதாக, மருந்துகளை வேறு சிறு நிறுவனங்களில் தயாரித்து வாங்கி, அதை தங்கள் வணிக இலச்சினையில் பாக்கெட்டில் அடைத்து விற்பது.
  • இந்தியாவில் மற்ற துறைகளைவிட பொது மக்களின் உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது மருந்தியல் துறைதான். இந்தத் துறை மற்ற துறைகளைவிட ஆண்டுக்கு 17  சதவீத வளர்ச்சி என்ற பிரமாண்டத்தைக் காட்டுகிறது. கடந்த 2005-இல் ஆண்டுக்கு 600 கோடி டாலர்களாக (ரூ.46,150 கோடி)  இந்திய மருந்துச் சந்தை விற்பனை இருந்தது; இந்த விற்பனை மதிப்பு  2016-ஆம் ஆண்டின் இறுதியில் 3700 கோடி டாலர் (ரூ.2,62,700 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மருந்துகளில் தரம் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய பிரச்னை.
  • பொதுமக்களின் உயிருடன் மருந்து தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை இந்த ஆய்வறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. பிரச்னை என்னவென்றால், தரம் குறைந்த மருந்துகளை விநியோகம் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அது முடிவடைய 5 ஆண்டுகள் வரை ஆகிறது.

2006 ஆம் ஆண்டில்....

  • 2006-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளைச் சோதனை செய்த போது, தரமற்ற மருந்துகள் இருப்பது உறுதியானது; மேலும், தரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் மருந்துகள் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
  • மருந்துத் தரக் கட்டுப்பாட்டு சோதனை என்பது பொது சுகாதாரத் துறையுடன் இருந்த காலகட்டங்களில் தரமான மருந்துகள் சந்தைக்கு வந்தன. எப்போது தனித் துறையாகப் பிரிக்கப்பட்டதோ, அப்போது முதல் சிக்கல்கள் தொடங்கிவிட்டன.
  • மேற்படி ஆய்வில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மருந்துக் கடைகள் உள்ளது தெரியவந்துள்ளது; ஆனால், இவ்வளவு லட்சம் கடைகளையும் கண்காணிப்பதற்கு உரிய மருந்து ஆய்வாளர்களின் எண்ணிக்கை 900 மட்டுமே. இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விற்பனையைக் கொண்ட மருந்தியல் துறையை முழுமையாகக் கண்காணிப்பதற்குத் தேவைப்படும் முழுமையான நடவடிக்கையை இதுவரை அரசு எடுக்கவில்லை.
  • உலகில் மருந்து தரக் கட்டுப்பாட்டில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத் துறை  அமைப்பு மட்டுமே. இந்த அமைப்பைக் கண்டு அமெரிக்காவில் பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் பிரம்மாண்ட நிறுவனங்கள் நடுங்கும் நிலை உள்ளது. ஏனெனில் அங்கு தவறு நிரூபணமானால் தண்டனை, தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தல்  என நடவடிக்கைகள் துரிதமாக உள்ளன.

மருந்துத் தரக் கட்டுப்பாட்டு மையம்

  • மேலும், அமெரிக்காவில் மண்டலத்துக்கு ஒரு மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மையம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை அல்லது மதுரையில் மட்டுமே மருந்து  தரக் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அப்படியானால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் எப்படி உறுதி செய்ய முடியும்? மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் கருவிகளும் போதுமான எண்ணிக்கையில் இல்லை.
  • இதனால்தான் தரமற்ற மருந்துகளைச் சந்தைப்படுத்துகின்றனர். இந்தத் துறையில் புழங்கும் பெரும் பணமும், குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்ககும்படிச் செய்து விடுகிறது. மருந்தில் தரம் குறைவது என்பது, மருத்துவர் மீது நோயாளிக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும்.
  • எனவே, மாவட்டந்தோறும் மருந்து தரக் கட்டுப்பாட்டு மையங்கள், சரியாக மதிப்பீடு செய்து மருந்துக் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் தரமற்ற மருந்துகளின் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்றார் திருவள்ளுவர்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories