TNPSC Thervupettagam

மர்வான் பர்கௌதி: பாலஸ்தீனத்தின் மண்டேலா

August 20 , 2024 146 days 134 0

மர்வான் பர்கௌதி: பாலஸ்தீனத்தின் மண்டேலா

  • “எனது உடலை நீங்கள் சிறையில் அடைக்கலாம். ஆனால், என் மன உறுதியையோ சுதந்திர தாகத்தையோ உங்களால் ஒருபோதும் கைது செய்ய முடியாது” - மர்வான் பர்கௌதி
  • பாலஸ்​தீனப் போராட்டம் என்றாலே யாசர் அராஃபத் முகம்தான் நினைவுக்கு வரும். ஒரு கையில் துப்பாக்​கியையும் மறு கையில் அமைதிப் புறாவையும் ஏந்தி நின்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அவர். ஆனால், யார் இந்த மர்வான் பர்கௌதி? இவரை ஏன் பாலஸ்​தீனத்தின் நெல்சன் மண்டேலா என்கிறார்கள்?

அமைதிக்​காகப் பாடுபட்டவர்:

  • தென்னாப்​ரிக்க இனவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களின் விடுதலைக்​காகப் போராடி, 22 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் வாடிவரு​கிறார் மர்வான் பர்கௌதி.
  • 1993இல் நடந்த ஒஸ்லோ அமைதிப் பேச்சு​வார்த்​தையில் ஒப்பந்தம் எட்டப்​பட்டு, மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலம் ஆகியவை பாலஸ்தீன நாடாக ஏற்கப்​பட்டன. அதன் நிர்வாகப் பொறுப்பு யாசர் அராஃபத்​துக்குக் கிடைத்தது. அந்தப் பேச்சு​வார்த்​தையில் முக்கியப் பங்காற்றிய மர்வான் பர்கௌதி, புதிய அரசில் நாடாளுமன்ற உறுப்​பினர் ஆனார்.
  • 1987 - 1993 காலகட்​டத்தில் நடந்த முதல் ‘ஐன்டிஃபாடா’ எனும் பாலஸ்தீன மக்கள் எழுச்​சி​தான், இஸ்ரேலை அமைதி உடன்படிக்கையில் கையெழுத்​திட​வைத்தது. அந்த எழுச்​சியின் பின்னணியில் இருந்த முக்கியத் தலைவர்​களில் ஒருவர் மர்வான். அதனால், அவரை நாடுகடத்திய இஸ்ரேல், ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே நாடு திரும்ப அனுமதித்தது.
  • ஒஸ்லோ ஒப்பந்​தத்தை மதித்து ஆயுதப் போராட்​டத்தைக் கைவிட்டு​விட்டு, ஜனநாயக நடைமுறைக்கு வந்தது யாசர் அராஃபத்தின் இயக்கம். ஆனால் ஒப்பந்​தத்தை இஸ்ரேல் மதிக்க​வில்லை. ஒப்பந்தம் கையெழுத்​தானபோது மேற்குக் கரையில் 2 லட்சம் யூதர்கள் குடியேறியிருந்தனர்.
  • அடுத்த சில ஆண்டு​களில் அவர்களது எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்தது. காஸாவை ஆக்கிரமித்​திருந்த இஸ்ரேல் ராணுவமும் வெளியேற​வில்லை. இதெல்​லாம், பாலஸ்தீன மக்களை மீண்டும் ஓர் எழுச்​சிக்கு இட்டுச்​செல்லும் என்பதை உணர்ந்த மர்வான், இஸ்ரேல் அரசியல் தலைவர்​களை​யும், அமைதி ஆர்வலர்​களையும் சந்தித்து நிலைமையைச் சரிசெய்யுமாறு மன்றாடி​னார்.
  • ஆனால், பெரிதாக எதுவும் மாறவில்லை. இந்நிலை​யில், 2000 செப்டம்​பரில் கிழக்கு ஜெருசலத்தில் உள்ள வரலாற்று முக்கி​யத்துவம் வாய்ந்த அல்-அக்சா மசூதியில் எரிச்​சலூட்டும் வகையில் நுழைந்து திரும்​பினார் முன்னணி இஸ்ரேல் அரசியல்​வா​தியான அரியேல் ஷரோன். பாலஸ்தீன மக்களின் இரண்டாவது ஐன்டிஃபாடா எழுச்​சிக்கு இது காரணமானது.

கைதும் விசாரணையும்:

  • ஒஸ்லோ ஒப்பந்​தத்​துக்கு முன்பும் பின்பும், களத்தில் இறங்கிப் போராடும் தலைவராகவே இருந்துள்ளார் மர்வான். யாசர் அராஃபத் அரசில் செயல்பட்ட பலரும் நீண்ட காலம் வெளிநாடு​களில் இருந்து போராடிய​வர்கள். ஆனால் 70-கள் தொடங்கி (சில ஆண்டுகள் தவிர) தொடர்ந்து மேற்குக் கரையிலேயே செயல்​பட்​டவர்; மக்களோடு நெருக்கமாக இருந்​தவர்; அவர்களது மனநிலையை நன்கு புரிந்​து​வைத்​திருந்தவர் மர்வான்.
  • இரண்டாவது ஐன்டிஃபாடா எழுச்​சியில் பங்கேற்ற​தால், 2001இல் இரண்டு முறை அவரைக் கொல்ல முயன்று தோற்றது இஸ்ரேல் ராணுவம். பல முறை முயன்று 2002இல் மர்வானைக் கைதுசெய்து, தங்கள் நாட்டு நீதிமன்​றத்தில் நிறுத்​தியது இஸ்ரேல் ராணுவம். இரண்டாவது எழுச்​சி​யின்போது தற்கொலைத் தாக்குதலுக்கு உத்தர​விட்டார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்​தப்​பட்டு, அவருக்கு 5 ஆயுள் தண்டனைகள் வழங்கப்​பட்டன.
  • இந்த வழக்கை மேற்பார்​வையிட நியமிக்​கப்பட்ட ஃபிரான்ஸின் சர்வதேச வழக்குரைஞர் சைமன் போர்மன், விசாரணை நேர்மையாக நடக்க​வில்லை என்று கூறினார். விசாரணை தொடங்கும் முன்பே, நீதிபதி ஒருவர் மர்வானைத் தீவிரவாதி என்று குறிப்​பிட்டதை அவர் சுட்டிக்​காட்​டி​னார்.
  • சர்வதேச விதிகளின்படி மர்வானை இஸ்ரேல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், இந்த விசாரணையே சட்ட விரோத​மானது என வாதிட்ட மர்வான், வழக்காட மறுத்து, 22 ஆண்டுகளாகச் சிறையில் இருக்​கிறார்.

சிறையி​லிருந்தே அமைதி முயற்சி:

  • பாலஸ்தீன விடுதலைக்​காகப் போராடிவந்த பல இயக்கங்கள் ஒன்றிணைந்து, 1957இல் யாசர் அராஃபத் தலைமையில் பத்தா என்கிற அமைப்பு உருவெடுத்தது. ஒஸ்லோ ஒப்பந்​தத்​துக்குப் பிறகு பாலஸ்​தீனத்தை ஆட்சி செய்த இந்த அமைப்​பில், தன் இளம் வயது முதலே இணைந்து செயல்​பட்டார் மர்வான்.
  • பழைய அமைப்பு​களில் இருந்து மாறுபட்ட கருத்​தி​யலோடு 80களில் தொடங்​கப்​பட்டது ஹமாஸ். ஒஸ்லோ பேச்சு​வார்த்​தையில் பங்கேற்க மறுத்த ஹமாஸ், ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகும் ஆயுதப் போராட்​டத்தைத் தொடர்ந்தது. ஆனால், சிறிது காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுத்த ஹமாஸ் 2006 நாடாளு​மன்றத் தேர்தலில் வென்றது.
  • அப்போது பத்தாவின் முகமது அப்பாஸ் அதிபராக இருந்​தார். தேர்தல் முடிவை அடுத்து பத்தா – ஹமாஸ் இடையே ஆயுத மோதல் மூண்டது. இத்தகைய மோதல்​களைத் தவிர்த்து, ஒற்றுமை​யாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய மர்வான், சிறையி​லிருந்த பிற தலைவர்​களுடன் சேர்ந்து ‘தேசிய சமரச ஆவண’த்தை வெளியிட்​டார்.
  • சிறையில் இருந்தே சர்வேதேச அரசியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், 2012 முதல் 5 பாலஸ்​தீனப் பல்கலைக்​கழகங்​களுடன் இணைந்து, சிறைவாசிகளைத் தொலைநிலை இளங்கலை, முதுகலைப் படிப்பு​களில் சேர்த்துப் படிக்​கவைக்​கிறார். மர்வான் குழுவினர் முயற்​சியால் இதுவரை 600 பேர் பட்டம் பெற்றுள்​ளனர். சிறையில் இருந்து படித்துப் பட்டம் பெறுவது அவர்களுக்கு ஒரு போராட்ட வடிவம்.
  • இப்படி​யாகச் சிறையில் இருந்தபடி நாட்டு விடுதலைக்​காகப் போராடிவரு​கிறார் மர்வான். அவரது மனைவி பத்வா பர்கௌ​தி​யும், தோழர்​களும் அவரை விடுதலை செய்வதற்காக வெளியில் இருந்து போராடிவரு​கிறார்கள்.

மண்டேலாவின் வழியில்...

  • நெல்சன் மண்டேலா நீண்ட காலம் சிறை வைக்கப்​பட்​டிருந்த ராபின் தீவு சிறைக் கொட்டடியில் இருந்து, மர்வானை விடுதலை செய்வதற்கான சர்வதேச இயக்கம் 2013இல் தொடங்​கப்​பட்டது.
  • 1963இல் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்வதற்கான போராட்​டத்தைத் தொடங்கிய மண்டேலாவின் நெருங்கிய நண்பர் அகமது காத்ராடா​வும், பத்வாவும் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்​கினர். இதற்குப் பிறகே ‘பாலஸ்​தீனத்தின் நெல்சன் மண்டேலா’ என்று அழைக்​கப்​பட்டு​வரு​கிறார் மர்வான்.
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், இஸ்ரேலின் முன்னாள் நீதித் துறை அமைச்சர் யோசி பெய்லின், முன்னாள் கடற்படைத் தளபதி அமி அய்லான் போன்றோர் மர்வான் விடுதலைக்​காகக் குரல் கொடுக்​கின்​றனர். சிறையின் மோசமான நிலைமைகளை எதிர்த்து 2017இல் 1,500 பேருடன் இணைந்து மர்வான் மேற்கொண்ட 42 நாள் உண்ணா​விரதம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

சுதந்திர தாகம்...

  • யாசர் அராஃபத்​துக்குப் பிறகு பாலஸ்தீன அதிபராக வருவார் என்று எதிர்​பார்க்​கப்​பட்டவர் மர்வான். அவர் சிறை சென்றதால் அது நடைபெற​வில்லை. 2006க்குப் பிறகு பாலஸ்​தீனத்தில் தேர்தலே நடக்க​வில்லை.
  • ஆனால், எப்போது தேர்தல் நடைபெற்​றாலும் மர்வான் அதிபராவது உறுதி என்று காட்டு​கின்றன, கடந்த 20 ஆண்டு​களில் எடுக்​கப்பட்ட கருத்​துக்​கணிப்புகள். இது தவிர, இன்று பிளவுபட்டுக் கிடக்கும் பாலஸ்தீன இயக்கங்களை ஒன்று​படுத்தும் சக்தியாக, பல்வேறு இயக்கங்​களால் ஏற்கப்​படும் தலைவராக மர்வான் திகழ்​கிறார்.
  • இதனால்​தான், 9 மாதங்களாக காஸாவில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு​வருவதற்கான பேச்சு​வார்த்​தை​யில், மர்வானை விடுவிக்க வேண்டும் என்பதை முக்கியக் கோரிக்கையாக முன்வைக்​கிறது ஹமாஸ். ஆனால், அவர் விரைவில் விடுதலை​யாகும் வாய்ப்பு தென்பட​வில்லை.
  • “நான் தற்போது தீவிரமாக அரசியலில் இயங்கினாலும், சுதந்திர பாலஸ்​தீனத்தில் ஒரு சராசரி வாழ்க்கையை வாழவே விரும்​பு​கிறேன்” என்று தன் திருமணத்​துக்கு முன்பு தன் வருங்கால மனைவி​யிடம் வாக்குறுதி தந்தார் மர்வான். அந்த நாள் மலரும் என்ற நம்பிக்கை​யுடன் காத்திருக்​கிறார் மர்வானின் மனைவி பத்வா!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories