TNPSC Thervupettagam

மறுகுடியமர்வு அறிக்கை – மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்துமா?

October 26 , 2021 1124 days 766 0
  • தமிழ்நாடு அரசின் ‘மறுகுடியமர்வு - மறுவாழ்வுக் கொள்கை வரைவு அறிக்கை’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகி, அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர், தமிழ் அறிக்கை இணையத்தில் பதிவேற்றப் பட்டது.
  • கொடுத்த வாக்குறுதிப்படி நீர்நிலைகள் உள்ளிட்ட அரசின் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடிசையமைத்து வாழ்வோரை மறுகுடியமர்த்தும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வரைவு அறிக்கையாக அரசு வெளியிட்டுள்ளது பாராட்டத் தக்கது.
  • ‘தமிழ்நாடு 2-வது சாலை வசதித் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கும் நகர ஏழைகளுக்கான பேரிடரைத் தாங்கும் நீடித்த வீட்டுவசதித் திட்டம்’ போன்றவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள மறுகுடியமர்வு நடைமுறைகள், நீதிமன்றங்களின் அவ்வப்போதைய வழிகாட்டும் தீர்ப்புகள், மறுகுடியமர்வு செய்யப்படும்போது நிலையாக செயல்படுத்தப்படும் வழிமுறைகளை வெளியிட்டு - இவற்றில் உள்ள அம்சங்களையும் மறுகுடியமர்வு செய்வதற்கான நடைமுறைகளாகக் கருதப்படும் என வரைவு அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இதிலிருந்து வரைவு அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவற்றைத் தாண்டியும் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிய வருகிறது.
  • ஆக வரைவு அறிக்கையின் நோக்கமே, வரைவு அறிக்கையை உருவாக்கியவர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
  • ‘ஆக்கிரமிப்பில் இருப்பவர்கள்’, ‘தன்முயற்சியின்றி மேற்கொள்ளப்படும் மறுகுடியமர்வு’, ‘திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பம்’, ‘மறுகுடியமர்வு’, ‘எளிதில் பாதிக்கக்கூடிய குடும்பங்கள்’ ஆகிய வார்த்தைகளுக்குப் பொருள் விளக்கங்கள் அறிக்கையில் வரையறுக்கப் பட்டுள்ளன.
  • ஆனால், இந்த வார்த்தைகள் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இல்லை. உதாரணத்துக்கு, ‘ஆக்கிரமிப்பில் இருப்பவர்கள்’ என்கிற வார்த்தைக்கு எந்த கால கட்டத்திலிருந்து என்று குறிப்பிடப்படவில்லை.
  • மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் ‘தன்முயற்சியின்றி செய்யப்படும் மறுகுடியமர்வு’ என்று குறிப்பிட்டு, வார்த்தை ஜாலத்தில் வரைவு அறிக்கை மூழ்கியுள்ளது.

மூன்று கட்டங்கள்

  • ‘மக்களை அடையாளம் காண்பது’, ‘மறுகுடியமர்வின்போது மனிதாபிமானத்தோடு நடத்துவது’, ‘மறுவாழ்வு என்பது நீண்டகாலச் செயல்முறை என்பதால், அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு செயல்படுத்துவது’ என மறுகுடியமர்வை மூன்று கட்டங்களில் செயல்படுத்தப் போவதாக வரைவு அறிக்கை பேசுகிறது.
  • ஆனால், ‘எந்த அளவுக்கான மனிதாபிமானம்’ என்பதை அறிக்கை வரையறுக்கவில்லை. கடந்த ஆண்டு சென்னை சத்தியவாணிமுத்து நகர் கூவம் கரையோரக் குடியிருப்புகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயாரானபோது, கழிவுகளைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கும் கூவம் ஆற்றில் இறங்கி அப்பகுதியைச் சேர்ந்த 11 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
  • மக்களோடு எந்தவித உரையாடலையும் மேற்கொள்ளாமல், எந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அவர்களின் வீடுகள்தான் முதலில் புல்டோசரால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன.

வார்த்தை விளையாட்டுகள்

  • ‘மறுகுடியமர்வு மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, மறுகுடியமர்வுக்கான முடிவு மிக கவனத்தோடு எடுக்கப்பட வேண்டும்.
  • எந்தக் காரணத்துக்காக மறுகுடியமர்வு மேற்கொள்ளப்படுகிறதோ, அதை சம்பந்தப்பட்ட மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.’ ‘மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டும்’ என்பன போன்ற வார்த்தைகள், அதைச் செயல்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது முரணாக அமைந்துள்ளது.
  • முதலாவதாக, ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்துவது, வரையறுப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்பது, புதிதாகக் குடியேறவுள்ள மாற்று இடங்கள் போன்ற முடிவெடுக்கக்கூடிய, எவ்விடத்திலும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை வரைவு அறிக்கை நிராகரித்துள்ளது.
  • இரண்டாவதாக, மறுகுடியமர்வு செய்யப்படக்கூடிய இடமானது 3 முதல் 5 கிலோமீட்டருக்குள் அமைய வேண்டுமென மக்கள் இயக்கங்கள் வலியுறுத்திவருகின்றன.
  • ஆனால், வரைவு அறிக்கையோ ‘அருகமை நகரப் பகுதிக்குப் பேருந்து அல்லது ரயில்கள் மூலம் செல்லும் பயண நேரம் அரை மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறது.
  • வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், அருகமை நகரப் பகுதியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் முப்பது நிமிடப் பயணத்தில் மாற்றுக் குடியிருப்பு என்பது முரணானது.
  • தற்போது சென்னை மாநகரத்தின் மையப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு இந்த விதி அதிகாரிகளின் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர எல்லையான சோழிங்கநல்லூருக்கு வருவதற்கு 10 நிமிடங்கள்தான் பயணம்.
  • மேலும் 30 நிமிடப் பயண நேரம் என்பது நள்ளிரவிலா நடுப்பகலிலா? ஏனென்றால், எப்படிப் பார்த்தாலும் அரை மணி நேரத்தில் சென்னை மாநகருக்கு வருவது சாத்தியமில்லை.
  • மூன்றாவதாக, ஒரு குடியிருப்புப் பகுதியை ஆக்கிரமிப்புப் பகுதியென வரையறுக்கும் உரிமையை ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்மானிக்கக்கூடிய வகையில் வரைவு அறிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளை வரையறுப்பது சரியாக இருக்கும். அத்துடன் ஆக்கிரமிப்புப் பகுதி குறித்து பாதிக்கப்படும் மக்கள், பொதுச் சமூகம் கருத்துத் தெரிவிக்கும் வகையில் வழிவகைகளை உருவாக்க வேண்டும்.
  • நான்காவதாக, ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்துவது, கணக்கெடுக்கும் பணி, மறுகுடியமர்த்துவது போன்றவற்றுக்கான காலவரையறைகள் அவசரக் கோலத்தில் செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு வரைவு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளன.
  • பாதிக்கப்படும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி குறித்துக் கேட்கப்பட்டாலும், கல்வியாண்டின் இடையில் மறுகுடிமயர்வு நடத்தப்படாது என உறுதியளிக்கவில்லை.
  • ஐந்தாவதாக, மறுகுடியமர்வை மேற்கொள்ள 2 பேர் கொண்ட மாநில வாழ்விட மேம்பாட்டுக் குழு, 22 பேர் கொண்ட சென்னை பெருநகர வாழ்விட மேம்பாட்டுக் குழு, 21 பேர் கொண்ட மாவட்ட வாழ்விட மேம்பாட்டுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
  • இக்குழுக்களில் தன்னார்வலர் குழு, தொண்டு நிறுவனம், தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் உறுப்பினர்களாகப் பரிந்துரைத்துள்ள வரைவு அறிக்கை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதிகளைச் சேர்க்காததன் பின்னணி என்ன?

பேசப்படாத சொற்களும், செய்ய வேண்டியவையும்

  • ஆக்கிரமிப்புகள் என வரையறுக்கப்பட்ட இடத்திலிருந்து நகரத்துக்கு வெளியே மறுகுடியமர்வை உருவாக்குவது என்ற இலக்கை மையமாக வைத்தே வரைவு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு மாறாக, அப்புறப்படுத்தப்படும் இடங்களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்குவது அல்லது அகற்றப்படும் இடத்துக்கு அருகிலேயே குடியிருப்புகளைக் கட்டுவது குறித்து எவ்விதமான ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரைவு அறிக்கையில் பேசப்படவில்லை.
  • பொதுநல வழக்குகளில் நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகள் மூலமும் ஆக்கிரமிப்புகள் வரையறுக்கப்படும் என வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வாழ்விடம் பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு நீதிமன்ற வழக்குகளும் தீர்ப்புகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்கு வாய்ப்பற்ற மக்களின் வாழ்வுரிமையை மக்கள்நல அரசு பறிக்கலாமா?
  • மறுகுடியமர்வுக்கு உள்ளாக வேண்டிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அரசின் பொதுச் சேவைகளும், வேலைவாய்ப்புகளும் பறிபோகாமல் இருப்பதற்கான வழிவகைகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் உரிய அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.
  • இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைபெற்ற மறுகுடியமர்வுப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அதனடிப்படையில், புதிய மறுகுடியமர்வுக்கான திட்டமிடல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories