TNPSC Thervupettagam

மலக்குழி மரணங்கள்: சாதிய சமுதாயத்தின் சாபக்கேடு

June 23 , 2023 568 days 530 0
  • ‘கையால் மனிதக் கழிவு அகற்றுவோர்’ (Manual scavengers) என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஏன் இந்தத் தனிப்பெரும் ‘பெருமை’? இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர் கொண்டிருப்பதால், சாதியம் ஆயிரம் ஆண்டுக் கால ‘மாண்பு’ என்பதால், தீண்டாமை நம் தனித்துவம் என்பதால், மனித கண்ணியத்தைக் குத்திக் கிழித்துச் சிதைத்து எறியும் ‘சமூக நெறி’களில் நாம் இணையற்றவர் என்பதால்!

தொடரும் இறப்புகள்:

  • ஐந்து நாள்களுக்கு ஒருவர், சாக்கடைகளைச் சுத்தம்செய்யும்போது இறந்துபோகிறார் என்கிறது தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் (National Commission for Safai Karamcharis). 1993 முதல் 2022 வரை 1,054 பேர் மலக்குழியில் இறந்திருக்கின்றனர் என ஆணையத்தின் புள்ளி விவரம் சொல்கிறது. இந்த எண்ணிக்கை ஆணையத்தைச் சென்றடைந்த புள்ளி விவரம் மட்டுமே. இதில் அடங்காத மலக்குழி மரணங்கள், ஊர்-பேர் தெரியாத, சாதி மட்டும் சந்தேகமின்றித் தெரிந்தவை எத்தனையோ!
  • இத்தகைய கொடிய மரணங்கள் சமீபத்தில் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்துவருகின்றன. 2023 மே 1 தொடங்கி 18 நாள்களில், 5 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். மத்திய அரசின் கணக்கில் 2017-2022 வரை இறந்தவர்களின் எண்ணிக்கையில், உத்தரப் பிரதேசத்துக்கு (61) அடுத்து தமிழ்நாடு (56) இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் ஈடுபடுத்தப் பட்டிருப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியாது; இதில் ஈடுபடுவதால் இறப்பவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதால், அரசு அளிக்க வேண்டிய நிவாரணமும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. சட்டம் நிர்ணயித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை, மரிக்கும் பலரின் குடும்பங்களுக்குக் கிடைப்பதில்லை.
  • பல மாவட்ட ஆட்சியாளர்கள் தங்கள் மாவட்டங்களில் இது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பொய் அறிக்கை அளித்திருக்கிறார்கள். இந்தக் கேவலத்துக்கு எதிராக வாழ்நாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெஸவாடா வில்சன், “இது அரசு செய்யும் கொலைக் குற்றம்” எனச் சாடுகிறார்.

சட்டம் என்ன செய்கிறது?

  • இந்தியாவில் இதை ஒழிப்பது அவ்வளவு கடினமானதா? இயந்திரங்கள் மூலம் சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் 80 ஆண்டுகள் பழமையானது. உலகெங்கும், மிகவும் பின்தங்கிய நாடுகளிலும்கூட அது பயன்படுத்தப்படுகிறது. லட்சம் கோடிகளை அடையாள ஆடம்பரங்களுக்குக் கொட்டும் இந்தியாவில், இந்த மக்களுக்கான மீட்சி இயலாத ஒன்றா? இல்லை, அதைத் தடுப்பது ‘தாழ்ந்தோருக்குத் தாழ்ந்தோர்தானே மடிந்தால் என்ன’ என்கிற சாதிய சமுதாயத்தின் அலட்சிய மமதையா?
  • கைகளால் கழிவு அகற்றுவோர் பணி நியமித்தல், உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம், 1993 [Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition Act)]; பின்னால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டம் - கையால் கழிவு அகற்றுவோரைப் பணியமர்ப்புத் தடை மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 [Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act] என இரண்டு சட்டங்கள் இந்த இழிவைத் தடைசெய்வதற்காக இயற்றப் பட்டிருக்கின்றன.
  • ஆனால், ஒடுக்கப்பட்டோருக்கான பல சட்டங்கள்போல், இவையும் செயலிழந்து கிடக்கின்றன. சட்டத்தை மீறி ஒருவரை இப்பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு கிரிமினல் குற்றம், பிணை கொடுக்கப்படக் கூடாத குற்றம். எனினும், சட்டம் நடைமுறைக்கு வந்த கால் நூற்றாண்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும், ஆத்திரமூட்டும் விவரம்.

மீட்பும் பொறுப்பும்:

  • இந்தியாவின் பெரும் அவமானமான இது தொடர்வதற்கு முக்கியக் காரணம், சாதிய மனோபாவம்தான். முதலில் சட்டத்தை மீறி, இவர்களைப் பணியமர்த்துவோர் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும். சட்டப்படி முதல் கட்டமாக ரூ.50,000 அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும். இந்த இழிவை ஒழிக்கச் சட்டம் மட்டும் போதாது. இத்தொழில்கள் தேவையில்லை என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும்:
  • முதல் முன்னுரிமையாக, மற்ற நாடுகளைப் போல், சாக்கடை, கழிவுநீர்த் தொட்டி, கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்படும் முறை முழுமையாக இயந்திரமயமாக்கப்பட வேண்டும்.
  • இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்களை அரசு முழுப் பொறுப்பேற்று மீட்டவுடன், அவர்களை மாற்றுத் தொழில்களில் பணியமர்த்த வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்புக்கு வழியின்றி மீண்டும் அதே நரக வாழ்வுக்குத் திரும்பும் நிலை ஏற்படும்.
  • இத்தகைய வேலைகளைச் செய்வதற்கு யாரும் கிடைப்பதில்லை என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். இத்தொழிலில் தள்ளப்பட்டிருப்போருக்கு மறுவாழ்வை உறுதிப்படுத்தும் கல்வி, தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, கண்ணியமான பணிகளில், முன்னுரிமையின் அடிப்படையில் மீட்கப்பட்டோர் பணியமர்த்தப்பட வேண்டும். மீட்கப்படுவோர் மட்டுமின்றி, அவர்களின் சாதிகளைச் சேர்ந்தோர் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியும் பல் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, பணி அமர்த்தலும் நடைபெற வேண்டும். இல்லையெனில், ஒருவர் மீட்கப்பட்டால் அவர் இடத்துக்கு உடனடியாக இன்னொருவர் கிடைப்பார்.
  • அரசு அந்தச் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த தரமுடைய இலவசக் கல்வி அளிக்க உயர்தரப் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளை நிறுவ வேண்டும். பிற கல்வி நிறுவனங்களைவிட உயர் தரமுடையவையாக இவை இருக்க வேண்டும். வரலாறு முழுவதும் கல்வியும் கண்ணியமும் மறுக்கப்பட்ட இவர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியை அப்போதுதான் கொஞ்சமாவது குறைக்க இயலும்.

தேவையான முன்னெடுப்பு:

  • மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டங்களையும் உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் பாடுபட்டு ஓயாது உழைத்தவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஐ.ஏ,எஸ். அதிகாரியான பி.எஸ்.கிருஷ்ணன். இச்சட்டங்களை வகுப்பதற்கு அவர் அளித்த பல பரிந்துரைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை தவிர, விடுபட்ட சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:
  • நாடு முழுதும் பால் விநியோகம் செய்யும் தொழிலில், அரசின் பால் நிலையங்களில் இவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். மறுவாழ்வு பெற்ற இம்மக்கள், அவர்கள் சாதிகளைச் சேர்ந்தோர் ஆகியோரின் கைகளிலிருந்து மட்டும்தான் இந்நாட்டு மக்கள் பால் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
  • இத்தொழிலாளர்களை மிக அதிகமாகச் சுரண்டுவது ரயில்வே துறைதான். அதற்குப் பரிகாரமாக ரயில் நிலையங்களில், வண்டிகளில் அனைத்து சமையல், உணவு விநியோகம், டீ, தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் இம்மக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். இவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ரயில்வே நிலையங்களில் உணவகம், உணவு விற்பனை ஆகியவற்றைத் தனியாருக்கு ஒப்பந்தத்துக்கு விடும்போது, இத்தொழிலாளர்களும் அவர்கள் சாதிகளைச் சேர்ந்தவர்களும் மட்டுமே அனைத்துப் பணிகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டும்.
  • இவை சில எடுத்துக்காட்டுகள்தாம். பல தொழில்களிலும் இம்மக்களுக்கு இத்தகைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் இவர்களுக்கான பணி ஒதுக்கீடு அல்ல. நமது அரசமைப்பு வலியுறுத்தியிருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கான அடிப்படைக் கடமைகள்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்பணியில் ஈடுபடுவோரைத் தொழில்முனைவோராக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியது. அத்துடன், மேற் குறிப்பிட்ட பி.எஸ்.கிருஷ்ணனின் பரிந்துரை களையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றில் பல மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பவை. அவற்றை ஏற்கச் சொல்லி மத்திய அரசுக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும். சமூக நீதியே தன் பதாகை என்று கூறும் தமிழக அரசு, நம் சமுதாயத்தின் கடைக்கோடி மக்களுக்கு மனித கண்ணியத்தை நிலைநிறுத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (23  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories