TNPSC Thervupettagam

மலைவளம் காப்போம்

December 28 , 2023 203 days 176 0
  • சமீபத்தில், துபையில் நடைபெற்ற .நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய . நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ' பனிப்பாறைகள் உருகும் பிரச்சனைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பனிப்பாறைகள் முழுமையாக மறைந்து விட்டால் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாக குறைந்துவிடும். இது சம்பந்தபட்ட  பகுதி மக்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும்',என எச்சரித்துள்ளார். . நா. பொதுச்செயலாளரின் எச்சரிக்கை, புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் உலக நாடுகளின் நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.
  • உலகின் மொத்த நிலப்பரப்பில் மலைப்பிரதேசங்களின் பரப்பளவு 24 சதவீதம் ஆகும். உலக மக்கள்தொகையில் சுமார் 100 கோடி மக்களுக்கு மலைகள் வாழ்விடமாக அமைந்துள்ளதோடு, அம்மக்களின் வாழ்வாதாரத் தேவைகளையும் மலைகள் பூர்த்தி செய்கின்றன.
  • வடக்கில் இமயமலைத் தொடர், தென்மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள்,தென்கிழக்கில், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றோடு விந்திய, சாத்புரா மலைத்தொடர், ஆரவல்லி மலைத்தொடர் என பல மலைத் தொடர்கள் அமையப் பெற்றுள்ள நம்நாடு, மலைகளால் பெறும் பயன்கள் ஏராளம்.
  • மேற்குத்  தொடர்ச்சி மலைகள் உலகில் உள்ள பல்லுயிர் வளங்கள் நிறைந்த எட்டு இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அரபிக் கடலில் இருந்து வீசும் காற்றினை மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுத்து நிறுத்துவதால் கர்நாடக, கேரள மாநிலங்கள் மழைவளம் பெறுகின்றன.கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி தென்னிந்திய மாநில மக்களின் குடிநீர் தேவை, விவசாய தேவைகளுக்கான தண்ணீரைத் தருவதோடு மின் உற்பத்திக்கும் உதவுகின்றன .
  • மலைச்சரிவுகளில் பயிரிடப்படும் தேயிலை, காபி போன்ற பணப்பயிர்கள் நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிழக்குத்  தொடர்ச்சி மலைகள், ஒடிஸô, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வடகிழக்குப் பருவ மழை பெய்விப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
  • மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்களை எடுப்பதற்காக தோண்டப்படும் சுரங்கங்கள், சுரங்கங்கள் தொடர்பாக இயங்கும் தொழிற்சாலைகள் உருவாக்கும் மாசு, மலைவளத்தை மட்டுமல்லாது அப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தையும்  பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
  • வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக, ரயில் பாதைகள் அமைக்கவும், சாலைப் போக்குவரத்திற்காகவும் மலைகளைக் குடைவதால் மலைகளின் இயற்கைத் தன்மை சீரழிகிறது.மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான  கற்களை உடைத்து எடுப்பதற்காக மலையடிவாரங்களில் அமைக்கப்படும் கல்குவாரிகளால் ஏற்படும் வெடிச்சத்தம், நச்சுபுகை, அதிர்வுகள் ஆகியவற்றால்  மலைப்பிரதேசங்களில் உள்ள  அரியவகைத் தாவரங்களும், உயிரினங்களும் அழியும் நிலை ஏற்படுகிறது.
  • மலைப்பிரதேசங்களில் கட்டுமானப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதால் பெருமழைக்  காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரிய அளவிலான உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுகின்றன. பெருகி வரும் மக்கள்தொகையால் விளை நிலங்களும், காடுகளும், குடியிருப்புப் பகுதிகளாக மாறி வருவதைப் போன்று  மலைப்பிரதேசங்களும் மக்கள் குடியேறும் பகுதிகளாக மாறி வருகின்றன.
  • இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் போதுமான திட்டமிடலின்றி அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. இதனால் அந்நகரின் பெரும்பாலான கட்டடங்கள் நிலத்தில் புதையுண்ட விபரீதத்தை இவ்வாண்டின் தொடக்கத்தில் நாம் காண நேர்ந்தது.
  • மேலும், இம்மாநிலத்தில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை இணைக்க "சார்தாம்' என்ற நெடுஞ்சாலைத் திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இது போன்ற இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் அம்மாநிலம் நிலச்சரிவு, பெருவெள்ளம் என இயற்கைப்  பேரிடர்கள் ஏற்படுத்தும் பெருந்துன்பத்தை அவ்வப்போது சந்தித்து வருகிறது.             
  •  நாடெங்கிலுமுள்ள மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்களால் வீசியெறியப்படும் நெகிழிக் கழிவுகளால் மலைப்  பிரதேசங்கள் மிக மோசமாக மாசடைகின்றன.
  • உதாரணமாகசுமார் 40,000 மக்கள்தொகை கொண்ட கொடைக்கானல் நகருக்கு ஆண்டொன்றுக்கு 65 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இந்நகரில் நாள் ஒன்றுக்கு 20 டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இக்கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது.
  • பொதுமக்களின் முழுமையானஒத்துழைப்பினால் மட்டுமே  கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில்  அமைந்துள்ள சுற்றுலாத்  தலங்களின் சுற்றுச்சூழல்  மாசடைவதை தவிர்க்க இயலும். தென்னமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஆண்டீஸ் மலைத்தொடர், ஆசிய கண்டத்திற்கு வெளியில் உள்ள உலகின் மிகப்பெரிய மலைத் தொடராகும்.
  • கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் எப்பொழுதும் பனி மூடிய சிகரங்களுடன் காட்சி தந்த இம்மலைத் தொடர், தற்போது வறண்டு போயுள்ளது.
  • இதன் விளைவாக இம்மலைத்தொடரையொட்டி அமைந்துள்ள பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா, பராகுவே, சிலி, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வெடார்,போன்ற நாடுகளில் மழைவளம் குறைந்து மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • நம் நாட்டின் அரசியல் சாசனத்தின்படி இந்தியக்  குடிமக்களின் அடிப்படை கடமைகளில், நாட்டின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதும் ஓர் கடமையாகும். அவ்வகையில் இயற்கைச்  சூழலின் ஓர் அங்கமாக விளங்கும் மலைகளைப் பாதுகாப்பதில் நம் அனைவரின் பங்களிப்பும் இருத்தல்  அவசியமாகும்.

நன்றி: தினமணி (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories