TNPSC Thervupettagam

மழைக்காலக் கூட்டத்தொடர்: தேவை முழுமையான செயல்பாடு

July 21 , 2023 412 days 262 0
  • நாட்டின் பதினேழாவது மக்களவையின் 12ஆவது கூட்டத்தொடராக, நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) தொடங்கியிருக்கிறது. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கிய கூட்டத்தொடர், ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது; 23 நாள்களில் மொத்தம் 17 அமர்வுகளாக நடைபெறவுள்ள கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதானி குழுமம் பற்றி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய விவாதப் பொருளானது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் தொடர்ந்து குரலெழுப்பினர். அவதூறு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்ததும், அந்தக் கூட்டத்தொடரின்போதுதான் நடந்தது.
  • அவை தொடர்ந்து முடங்கியதால் முக்கிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களைப் பொறுத்தவரை, 2014 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்களைவிட மழைக்கால/ குளிர்காலக் கூட்டத்தொடர்களே மிகக் குறைவான செயல்பாடுகளுடன் இயங்கியதாக பிஆர்எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தப் பின்னணியில், தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • டெல்லி அவசர சட்ட மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், “மாநிலக் கூட்டாட்சி அமைப்புமீது ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு தாக்குதல் நடத்தும் பிரச்சினை, இந்தக் கூட்டத்தொடரில் எழுப்பப்படும்” என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
  • டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மறுபுறம், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 31 மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2024 மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ளும் விதமாக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ (INDIA) கூட்டணியை உருவாக்கியுள்ளன. மறுபுறம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 40 கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 34 கட்சிகளைச் சேர்ந்த 44 தலைவர்கள் கலந்துகொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். மணிப்பூர் கலவரம், ஒடிஷா ரயில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் பின்னணியில் நாடாளுமன்றம் கூடியிருக்கும் நிலையில், அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
  • மணிப்பூரில், பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் குக்கி பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காணொளி வெளியாகி நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின. இந்த முடக்கம் தொடரக் கூடாது. மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதேவேளையில், எதிர்க்கட்சிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories