TNPSC Thervupettagam

மழைநீர் சேகரிப்பு: சென்னையில் ஒரு முன்மாதிரி

June 17 , 2019 2021 days 1197 0
  • சென்னை கொரட்டூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் மழைநீரைச் சேகரித்துவரும் ஆர்.ரமணி குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, தோட்டத்தைப் பராமரிக்க என வீட்டின் அனைத்துத் தேவைகளுக்கும் மழைநீரையே பயன்படுத்திவருகிறார். சென்னைப் பெருநகரமே தண்ணீருக்காக அல்லல்படும் இந்த நேரத்திலும், ரமணியின் வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வெளியிலிருந்து வாங்கவில்லை. மிக முக்கியமாக, மழைநீர் சேகரிப்பின் விளைவாக வெறும் 20 அடி ஆழத்தில் இந்தக் கோடையிலும் சுவையான குடிநீர் தாராளமாகக் கிடைக்கிறது ரமணியின் வீட்டுக் கிணற்றில்!
  • ஆர்.ரமணி ஓஎன்ஜிசியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி. அவரது மனைவி எஸ்.வசந்தா, சுகாதாரத் துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி. வீட்டிலேயே மழைநீர் சேகரிக்கும் அமைப்பை உருவாக்கியது பற்றிப் பகிர்ந்துகொண்டனர். ‘சென்னையில் 1988-ல் கடும் வறட்சி ஏற்பட்டபோது பெரும் அவதிக்கு ஆளாக நேர்ந்தது. அந்த நேரத்தில்தான் மழைநீர் சேகரிப்பு குறித்து யோசிக்க ஆரம்பித்தோம். தாமதிக்காமல் உடனடியாக அதைச் செய்துமுடித்தோம். வீட்டுவசதி வாரியம் வழங்கிய எங்கள் வீட்டு மொட்டை மாடியில், மழைநீரைச் சேகரிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினோம். தொடக்கத்தில் சேகரித்த மழைநீரில் உப்புத்தன்மையும், இரும்புச்சத்தும் இருந்தது. பின்னர், மழைநீரை முறையாகச் சுத்திகரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, சுவையான குடிநீர் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விலை கொடுத்து வாங்கவில்லை’!
இலவச ஆலோசனை
  • ரமணி - வசந்தாவின் வீட்டு மொட்டைமாடியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டியும், அதைச் சுத்திகரித்துச் சேமித்து வைப்பதற்கு 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொட்டிகளிலும் சேமித்தது போக மீதமுள்ள மழைநீர், வீட்டுக் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. இதன்மூலம் வீட்டுக்குத் தேவையான குடிநீர் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.
  • மழைநீர் சேகரிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தைத் தொடர்ந்து ‘ரெமெடிஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கிய ரமணி, அதுகுறித்து பொதுமக்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இலவச ஆலோசனைகளை வழங்கிவருகிறார். இதுவரை வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். ஒவ்வொருவரும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கி, முறையாகப் பராமரித்தால் தண்ணீர்த் தேவைகளைச் சுயமாகவே பூர்த்திசெய்துகொள்ள முடியும் என்கிறார் ரமணி. ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் என்று தமிழக அரசு வலியுறுத்திய பிறகும்கூட, இன்னும் அதன் அவசியத்தை அனைவரும் உணரவில்லை. தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், ரமணியின் வீடு மழைநீர்ச் சேகரிப்புக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. மேலும், மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்பதற்கு இணங்க ஏராளமான மரங்களையும் வளர்த்துள்ளார். சொல்லப்போனால், மரங்களுக்கு மத்தியில்தான் அவர் வீடு அமைந்திருக்கிறது.
அலட்சியம் கூடாது
  • ‘மழைநீர் உயிர் நீர்’ என்ற வாசகத்தை பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இப்போதுதான் அது நம் மனதிலும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று 2003-ல் உத்தரவிட்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதற்குப் போதிய வரவேற்பு இல்லாத நிலையில் சென்னை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிசை வீடு முதல் மாளிகை வரை அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு கட்டாயம் என்று சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது.
  • தொடர்ந்து, 2004-ல் சென்னைக் குடிநீர் வாரியம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சில நடைமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி, புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, அதில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டது. 300 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்படும் வீடுகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களுக்கும் புதிதாகக் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு அந்தக் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  • மழைநீரால் நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் மேம்பட்டிருப்பதை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 759 கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட நீர்மட்டம் மற்றும் நீரின் தரம் பற்றிய ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பரிசோதித்து, அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்யவும், தேவைப்பட்டால் மேம்படுத்தவும் சென்னைக் குடிநீர் வாரியம் இலவசமாக ஆலோசனை வழங்கிவருகிறது. தொடக்கத்தில் சென்னையில் 12% கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அரசு உத்தரவின்படி, ஏறத்தாழ பெரும்பாலான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் அவசியம்?
  • பருவமழை தவறுவதாலும் மழையளவு குறைவதாலும் அடிக்கடி தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதனால், நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து நீரின் தரமும் குறைகிறது. கடல்நீர் உட்புகும் அபாயமும் ஏற்படுகிறது. இதைத் தடுத்து, நீர்வளத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், மழைநீர் சேகரிப்பே எளிமையான வழிமுறை.
  • மழைநீரைத் தொட்டிகளில் சேர்த்துவைத்து தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். மழைநீரைப் பூமிக்குள் செலுத்தி நீர்வளத்தையும் அதிகரிக்கலாம். சென்னை மாநகரின் சராசரி மழையளவு 1,200 மில்லி மீட்டர். ஒரு சதுர அடியில் ஓராண்டில் 113 லிட்டர் அளவுக்கு மழைநீர் கிடைக்கிறது. இதுபோல ஒரு கிரவுண்டில் (2,400 சதுர அடி) உள்ள வீட்டில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 200 லிட்டர் வரை கிடைக்கும். இதில், 60% என்ற அளவில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 லிட்டர் மழைநீரை பூமிக்குள் செலுத்தினாலே போதும். தண்ணீர்த் தட்டுப்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். சென்னை போன்ற கடலோர நகரங்களில் நீர்மட்டத்தைப் பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு முறைக்கு மாற்றாக எதுவும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (17-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories