- தலைநகரம் சென்னை எதிர்கொள்ளும் மழை மொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் திருப்பியிருக்கிறது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு தலைநகரம் எதிர்கொள்ளும் பெருமழை இது. ஒரே நாளில் மழை அள்ளிக்கொட்டிடவில்லை. நிதானமாகப் பெய்யும் மழையே நிலைகுலைய வைத்திருக்கிறது.
- மழை வேண்டாம் என்று எந்தச் சமூகமும் வெறுக்க முடியாது. நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாடும், சென்னையும் மழை எப்போது வந்தாலும் கொண்டாடவே வேண்டும். கள நிலை அப்படி இல்லை. என்ன காரணம்? மழை கொஞ்சம் கூடினாலும், நகரங்களில் சாலைகளும், கிராமங்களில் வயல்களும் தத்தளிக்கின்றன. அதேசமயம், கோடையில் வறட்சியையும், கடும் நீர்த் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்கிறோம். வேகமாக நகரமயமாகிவரும் ஒரு பிராந்தியமானது, நகரக் கட்டமைப்புக்கு உரிய கவனத்தை அளிக்காதபோது அதற்கான விலையை அடிக்கடி இடர்நீக்கப் பணி வழியாகக் கொடுக்கிறது.
- இதே காலகட்டத்தில் மதுரையில் நடந்திருக்கும் ஒரு நிகழ்ச்சி நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. ‘இந்தியாவின் தண்ணீர்க்காரர்’ என்று புகழப்படும் ராஜேந்திர சிங் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஆற்றியிருக்கிற உரை முக்கியமானது. “தமிழகத்தில் உள்ள எல்லா நதிகளும், தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கின்றன; இந்த விஷயத்தைக் கவனிப்பது மிக முக்கியம். நதிகளைக் கவனிக்காவிட்டால் நம் வாழ்வை நாம் நிம்மதியாகத் தொடர முடியாது” என்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
- ராஜேந்திர சிங் கூறுகிறார், “ஒவ்வொரு நதிக்கும் மூன்று வகையான உரிமைகள் இருக்கின்றன - நிலவுஉரிமை, நீரோட்டவுரிமை மற்றும் தூய்மையுரிமை. நிலவுரிமை என்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நதிக்கும் அதனுடைய உரிமையில் மூன்று வகையான நிலப் பகுதிகள் வருகின்றன - வழக்கமாக நதி பாயும் பகுதி, வெள்ளம் ஏற்பட்டால் நதி விரியும் பகுதி, கடும் வெள்ளம் ஏற்பட்டால் நதி பரவும் பகுதி.
- தமிழ்நாட்டின் நதிகள் அனைத்துமே மூன்று வகையான நிலவுரிமையையும் பறிகொடுத்திருக்கின்றன; இதுபோலவே நீரோட்டவுரிமையையும், தூய்மைவுரிமையையும் பறிகொடுத்திருக்கின்றன!”
- இப்படி நதியிடமிருந்து பறிக்கப்பட்ட இடங்களை நாம் ஆக்கிரமித்துக்கொண்டுதான், தண்ணீர் சூழ்ந்திருப்பதாக இன்று குற்றஞ்சாட்டுகிறோம். நதியின் ஓட்டத்தை மறிக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு இந்தப் பிரச்சினையில் பிரதான பங்கு உண்டு. அப்படியென்றால், நகரின் நடுவே உள்ள எல்லாக் கட்டமைப்புகளையும் இடித்துவிட்டு, நதிகளுக்குப் பழையபடி பாதை வகுத்திட வேண்டுமா?
- அப்படியில்லை. நகரங்களில் அதற்கான மாற்று ஏற்பாட்டுக்கு நகரக் கட்டமைப்பு நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள். ஒரு பெருமழை தொடர்ந்து நீடிக்கும்போது, தடையின்றி அது வெளியேறுவதற்கு ஏற்ப நீர் அளவைக் கணக்கிட்டு எப்படி வடிகால்களையும், கால்வாய்களையும், மழைநீர் சேகரக் கட்டமைப்புகளையும் அமைப்பது என்பதற்கு சிங்கப்பூர் நமக்கு ஓர் உதாரணமாக இருக்க முடியும். அதேசமயம், நதிகள் தொடர்ந்து உயிர்ப்போடு இருப்பதற்கும், நதிகள் உருவாகிவரும் பாதையும், நதிகளின் கரைகளும் உயிர்ப்போடு இருப்பதற்குமான சூழலோடு இயைந்த வழிமுறையை ராஜேந்திர சிங் நமக்கு அளிக்கிறார்.
- நதிகளை நாசமாக்குவதில் அரசின் அமைப்புகள் பிரதானமான குற்றவாளியாக இருப்பதையும் சரியாக ராஜேந்திர சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார். “அனைத்து நகராட்சிகளும் அரசின் ஓர் அங்கம். அவற்றின் துணையுடன்தானே இவ்வளவும் நடக்கிறது? சொல்லப்போனால், சாக்கடை நீரை கலக்கவிடுவதன் மூலம் நதிகளை மாசுபடுத்துவதில் அரசுதான் பிரதான குற்றவாளியாக இருக்கிறது” என்கிறார் ராஜேந்திர சிங்.
- நதிகள் மாசாகும்போது, அதோடு மனிதர்களுக்கு உள்ள புழக்க உறவையும், பராமரிப்பையும் அவை இழந்துவிடுகின்றன. கழிவுநீரை நதிகளிடமிருந்து அப்புறப்படுத்த தனி வடிகால் அமைப்புகளை உருவாக்கினாலே நதிகள் சுத்தமாக ஆரம்பித்துவிடும் என்கிறார் ராஜேந்திர சிங்.
- நதிகளை மீட்டெடுக்க சமூக நலக் குழுக்களை அமைக்கச் சொல்லும் அவர், பல அடுக்கு நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார். முக்கியமாக, நதிகளின் கரைகள் உயிர்த்திருப்பதற்கு மரக்காப்பு ஒரு நல்ல வழிமுறை என்று கூறுகிறார்.
- “கரையோரங்களில் மரங்களை வளர்த்தெடுக்க மருத மரங்களை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். நன்கு வளர்ந்த, வயதான ஒரு மருத மரம் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டது. அதேபோல, தண்ணீர் அதிகம் தேவைப்படும் வணிகப் பயிர்களுக்குச் செல்வதற்கு மாற்றாக, தண்ணீர் வளத்துக்கேற்ப சூழலோடு இயைந்த பயிர்களை நோக்கி விவசாயிகள் கவனம் திரும்ப வேண்டும்; நதிகள் புத்துயிர் பெற வேண்டும் என்றால், பயிர்முறைக்கும் பருவமழைக்கும் இடையில் ஒத்திசைவு வேண்டும்” என்றும் பேசியிருக்கிறார்.
- சென்னை பெருநகர மேலாண்மையை சிந்திக்கும்போது, கேசாவரத்தையும், செம்பரம்பாக்கத்தையும் தவிர்த்து சிந்திக்க முடியாது என்பது வெளிப்படை. நகர மேலாண்மையை நகரங்களுக்கு வெளியில் உள்ள சுழலோடும் இணைந்து சிந்திக்க ஒருங்கிணைந்த பார்வை இன்று அவசியம் ஆகிறது.
- சென்னையை மழை சூழ்ந்ததுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பல்வேறு அங்கத்தினரும் சுழன்றடித்து, இடர்நீக்கப் பணிகளில் ஈடுபட்டுவருவது பாராட்டுக்கு உரியது. 2015 சென்னை பெருவெள்ளப் பெருஞ்சேதத்துக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அப்போதைய அலட்சியமான அணுகுமுறை முக்கியமான காரணம் என்பதை மறந்துவிட முடியாது.
- அதேசமயம், இடர்நீக்கப் பணியோடு இன்றைய முதல்வரின் பணி முடிந்திடக் கூடாது. பருவநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவரும் நிலையில், இதுவரை மழையை நாம் அணுகிய பார்வையில் பெரும் மாற்றம் அவசியம் ஆகிறது. மழையை எதிர்கொள்வதற்கான நிரந்தரமான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். சூழலோடு இயைந்த மரபார்ந்த அறிவும், உலகளாவிய நவீனப் பார்வையும் இணைந்ததாக அந்தச் செயல்திட்டம் அமைய வேண்டும்!
நன்றி: அருஞ்சொல் (09 – 11 – 2021)