TNPSC Thervupettagam

மாடம் வழியே விரிந்த பறவை உலகம்

January 6 , 2024 316 days 297 0
  • மூன்று வருடங்களுக்கு முன்னால் யாராவது என்னிடம், “உனக்குத் தெரிந்த பறவைகளைப் பற்றிச் சொல்என்று கேட்டிந்தால்காக்கா, கோழி, புறா, மயில், கிளி, கழுகுஎன்று ஐந்தாறு பறவைகளின் பெயர்களை மட்டும் சொல்லி இருப்பேன். ஆனால், இன்றோ ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின்பெயர்கள், அவற்றின் வாழ்க்கை முறை என்றுநிறையதெரிந்துவைத்திருக்கிறேன். ஒவ்வொன்றின் அழைப்பொலியை வைத்தே என்ன பறவை என்பதைச் சொல்லிவிடுவேன்.
  • பறவைநோக்குதலே’ (Bird Watching) நான் படித்த பாடம். ஆனால், அதற்கென்று வீட்டை விட்டு எங்கும்செல்லவில்லை. இருந்தும் நான்சொன்னதெல்லாம்எப்படிச் சாத்திய மானது? நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டு உப்பரிகை/மாடம் (பால்கனி) தான் காரணம்‌. பறவைகளின் அழகிய, அதிசய உலகினுள்இப்படித்தான் நுழைந்தேன்.
  • கரோனா பொதுமுடக்கத்தின்போது, இந்த அற்புத உலகம்தான் எனக்குப் பெரிதும் ஆறுதல் அளித்தது. தினமும் பால்கனியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு நாற்காலியில் அமர்ந்துவிடுவேன். வண்டிச் சத்தம் எதுவும் இல்லை என்பதால் மிகவும் அமைதியாக இருக்கும். சுற்றியிருக்கும் மரங்களில், புதர்களில் வசிக்கும் பறவைகள், அணில்கள், பல்லிகள், பச்சோந்திகள், தவளைகள், பாம்புகள் எனப் பல உயிரினங்களைக்கவனிக்க ஆரம்பித்தேன்.
  • இருகண்ணோக்கி (Binoculars) வாங்கிவைத்துக் கொண்டேன். நான் பார்த்துக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய விஷயங்களையெல்லாம் ஒருஇயற்கைக் குறிப்பேட்டில் (Nature Journal) எழுதி வைத்துக்கொண்டேன்.‌ பறவைகளைப் பற்றியபுத்தகங்களைப்‌‌ படிக்க ஆரம்பித்தேன்.
  • ஒவ்வொரு நாளும் அவை கிட்டத்தட்ட ஒரே வேலையைச் செய்யும். காலையில் இரை தேடிப் பக்கத்து வீட்டுச் சுவரின் மேல் உள்ள சோற்றைச் சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, குளித்து (ஒரு டப்பாவில் அதற்கென்றேவைக்கப்பட்டிருக்கும்), ஒன்றோடு மற்றொன்று கொஞ்சி விளையாடி, சில நேரம் சண்டையும் போட்டுக்கொள்ளும். மதியம் இரண்டு மணிக்குமேல் மறுபடியும் இது நிகழும். இரவில் எல்லாம் அடங்கிவிடும், ஆந்தைகளைத் தவிர.

புதிய நண்பர்கள்

  • நான் இதுவரை ஆந்தைகளை விலங்குக்காட்சியகத்திலும், தொலைக் காட்சியிலும்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், என் பால்கனிவழியாக ஒரு ஆந்தைக் குடும்பத்தைப் பார்த்து, அவற்றின் வாழ்க்கையில் அன்றாடம் நடப்பவற்றைக் கண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.
  • என் பால்கனிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில்தான் மூன்று ஆந்தைகள் (புள்ளி ஆந்தை வகை - Spotted Owlet) குடியிருந்தன. பகலில் ஆந்தைகளுக்குக் கண் தெரியாது‌‌என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ஆந்தைகளைப் பார்த்தபோது, அது உண்மை‌‌யில்லைஎன்றுதெரிந்துகொண்டேன். பகலில் மூன்றும் ஆளுக்கோர் இடத்தில் உட்கார்ந்து நன்றாகத் தூங்கும்.
  • ஆனால், வேறு ஏதாவது பறவை, பூனை, பாம்பு வந்தால் இவை உடனேவிழித்துக்கொண்டு தாக்கத் தயாராகிவிடும். ஒரு சில வாரங்களில் அவற்றின் பழக்கவழக்கங்கள் எனக்குப் பரிச்சயமாகிவிட்டன. ஆந்தைகளும் என்னைப்பார்த்துப் பழகியிருக்கும் போலும்! நான் எப்போதெல்லாம்‌‌ பால்கனிக்குப் போகிறேனோ, அப்போதெல்லாம் என் பக்கம் திரும்பி ஒரு பார்வைப் பார்த்துவிட்டு பின் தூக்கத்தைத் தொடரும்!
  • பகலில் அவற்றின் சத்தம்பெரிதாகக் கேட்காது. ஆனால், திடீரென ஒரு நாள் பயங்கர அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அடித்துப் பிடித்துப் போய்எட்டிப்பார்த்தால் மூன்று‌‌ ஆந்தைகளுக்குப்பதிலாக ஐந்து ஆந்தைகள் உட்கார்ந் திருந்தன! தன் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களை எனக்கு அறிமுகப் படுத்தவே என்னை அவ்வளவு நேரமாகக் கூப்பிட்டுக்கொண்டுஇருந்திருக்கின்றன போலும்.
  • அந்த நொடி என்வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று. அந்த அழகிய குடும்பத்தை தினமும் பார்த்து மகிழ்ந்தேன். ’போண்டாஎன்றுச் செல்லப்பெயர் வைத்துக் கூப்பிட ஆரம்பித்தேன். ஆந்தைகளுடன் இப்படி ஒன்றிப்போன என்னை, என்குடும்பத்தார் ’Owl Girl’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்!

https://static.hindutamil.in/hindu/uploads/common/2024/01/06/17045188282006.jpg

புள்ளி ஆந்தை

  • பாம்புடன் மோதல்: ஒரு நாள் பாம்பு ஒன்று பாதையைக் கடந்துகொண்டிருந்தது. அது வரை அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் சட்டென்று விழித்துக் கொண்டன. அதில் ஓர் ஆந்தை மரத்தின் மேல் இருந்து அதிவேகத்தில் பாம்பைக் தாக்கக் கீழேபாய்ந்தது. பாம்பும் சட்டெனத் தலையைத்தூக்கிச் சீறியது.
  • அடுத்த நொடி அதிவேகமாக நகர்ந்து பாம்பு புதருக்குள் மறைந்தது. அப்படியேஅனிமல் பிளானட்டில்பார்க்கக்கூடிய நிகழ்வுபோலஇருந்தது! ஓரிரண்டு நிமிடத்தில் இந்த மோதல் முடிந்து விட்டது. அந்த நேரத்தில் நான் சரியாகப் பால்கனியில் இருந்ததால்தான், அதைப் பார்க்க முடிந்தது.
  • மற்றொரு நாள் ஓர் ஆந்தை வாயில் நீளமாக எதையோ வைத்துப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. மழை பெய்யும்போது, இந்த ஆந்தைகள் மரத்தின் மேற்கிளையில் தங்கள் பெரிய இறக்கைகளை விரித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்.
  • மயில்கள் நிறைய உலா வரும். ஒரு முறை அம்மா மயிலின் பின்னே குஞ்சுகள் அழகாகச் செல்வதைப் பார்த்தேன். செம்போத்தின் அழைப் பொலியும், குயிலின் அழைப்பொலியும் தினமும் காலையில் கேட்கும்.‌
  • பச்சைக் கிளிகள் நிறையவரும்.‌ அருகில் உள்ள ஸ்பத்தோடியா (Spathodia - African Tulip) மரத்தின் பூ, காயின் பட்டை ஆகியவற்றை குனிந்தும், தலைகீழாகத் தொங்கிக்கொண்டும் சாப்பிடும்.‌ கொஞ்சும் குரலில் கீச்சிட்டுக்கொண்டே பறக்கும்.
  • இரண்டு கௌதாரிகள் சாலை ஓரத்தில் இருக்கும் மண்ணில்மண்குளியல்போட்டுவிட்டு, உரக்கக் கத்திவிட்டுகுடுகுடுவென்று புதருக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும். வெண்மார்புக் கானாங்கோழி தன் நீண்ட ஒல்லிக் கால்களோடு அங்கும் இங்கும் ஒடுவதைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
  • மூன்று மரங்கொத்திகள் அடிக்கடி பக்கத்து வீட்டின்‌‌ சுவரில் உள்ளசோற்றையும் அங்கு உள்ள பப்பாளி மரத்தின் பழத்தையும் சாப்பிட வரும். அப்படி ஒரு முறை ஒன்று மட்டும் வழிதவறி என் பால்கனியின் கதவில் வந்து தட்டிக்கொண்டிருந்தது!

இன்னும் பல நண்பர்கள்

இவற்றைத் தவிர நான் கண்ட மற்ற‌ பறவைகள்

  • பஞ்சுருட்டான், செம்மார்பு குக்குறுவான், கரிச்சான் குருவி, வால் காக்கை, மாங்குயில், வெண்மார்பு மீன்கொத்தி, வல்லூறு, கரும்பருந்து, செம்மூக்கு ஆள்காட்டி. தவிர கண்ணாடி விரியன், சாரைப் பாம்பு, நல்ல பாம்பு, கீரிப்பிள்ளை ஆகியவற்றையும் பால்கனியில் இருந்துகொண்டே பார்த்திருக்கிறேன்.
  • பல வேலைகளைப் பால்கனியில் இருந்துகொண்டே செய்யும்படி அமைத்துக்கொண்டேன். அப்போதுதானே மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளைப் போல பல இயற்கையின் அதிசயங்களைத் தவறவிடாமல் பார்க்க முடியும்! என்பால்கனியில் இருந்து நான் கண்ட பறவைகளின் உலகம் என்னை வியப்படைய வைத்தது. இத்தனை நாள்களாக நான்ஏன் இவற்றையெல்லாம் கவனிக்கவே யில்லை என்கிற எண்ணமும் எழுந்தது.‌
  • நாம் வசிக்கும் வீடு, செல்லும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள பறவைகளைப் பார்க்க ஆரம்பித்தாலே போதும். நீங்களும் பறவை உலகத்திற்குள் நுழையத் தயார் ஆகலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories