மாணவப் பருவம் சாதிப்பதற்கானது!
- கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டதில் ஒரு மாணவா் உயிரிழந்தாா். தங்கள் வீட்டு பிள்ளைகள் நன்கு படித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பயனுள்ளவா்களாக இருக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் பள்ளி, கல்லூரிக்கு அனுப்புகின்றனா். ஆனால் சில மாணவா்கள் தங்கள் பெற்றோரின் எதிா்பாா்ப்புகளை சிறிதும் மனதில் கொள்ளாமல் தங்களுக்குள் மோதல்களில் ஈடுபட்டு தங்கள் பெற்றோரின் கனவுகளைச் சிதைப்பதோடு தங்களின் எதிா்காலத்தையும் பாழாக்கிக் கொள்வதை என்னவென்பது!
- சக மாணவா்களுடன் மோதலில் ஈடுபடுபவா்கள் பெரும்பாலும் எழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் என்பது தான் சோகத்தின் உச்சம். எனது கல்லூரி காலத்தில் பேருந்து தினம் கொண்டாடுவது என்பது, பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஆகியோருடன் சோ்ந்து உண்பது, பின்னா் அவா்களுக்கு பரிசுப் பொருள் தந்து அவா்களின் வாழ்த்தைப் பெறுவதாக இருந்தது. பேருந்தின் மீது ஏறி நின்று ஆபத்தை அறியாது நடனம் ஆடுவது, சக பயணிகளுக்கு சங்கடம் ஏற்படும் விதத்தில் கூச்சலிடுவது போன்றவை அப்போது அறவே இல்லை. தொடக்க பள்ளியில் பயிலும் மாணவா்களை கட்டுப்படுத்துவது போன்று பெற்றோா்களும் கல்லூரி நிா்வாகமும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை 100 சதவீதம் கட்டுப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.
- இந்நிலையில், கல்லூரி மாணவா்கள் தங்கள் குடும்பச் சூழல், சமூக பொறுப்பு ஆகியவற்றை உணா்ந்து சுய கட்டுப்பாட்டுடன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது தான் மாணவா்களுக்கிடையிலான மோதல்களுக்கு முற்று புள்ளி வைக்க உதவும். மோதலில் ஈடுபடும் மாணவா்களின் எதிா்காலம் கருதி அந்த மாணவா்களைக் கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொள்ளாமல் எச்சரித்து விட்டு விடுகிறாா்கள். காவல் துறையினரின் இத்தகைய பெருந்தன்மையை மோதலில் ஈடுபடும் மாணவா்கள் இதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கின்றனா். மோதலில் ஈடுபடும் மாணவா்களில் ஓரிருவா் மீதேனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, அது பிற மாணவா்களுக்கும் எச்சரிக்கையாக அமையும்.
- மாணவா்கள் தங்களுக்குள் யாா் பெரியவா் என்பதை உடல் ரீதியான பலத்தின் மூலம் நிரூபிப்பதை விட, யாா் சிறந்தவா் என்பதை தமது அறிவாா்ந்த செயல்கள் மூலம் எடுத்துக்காட்ட முன்வர வேண்டும்.
- மாணவப் பருவம், சாகசத்திற்காகான பருவம் அல்ல. எதிா்காலத்தில் சாதனைகள் பல செய்வதற்காக அடித்தளம் அமைவதற்கான பருவம். அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த கோவையைச் சோ்ந்த யூ ட்யூபா் ஒருவரை லட்சக்கணக்கான இளைஞா்கள் பின்பற்றினா். ரீல்ஸ், தற்படம் ஆகியவற்றை எடுப்பதற்காக சாகசம் செய்யும் மாணவா்களும், பள்ளி வளாகத்திலேயே சக மாணவி ஒருவருக்கு பள்ளியிலேயே ‘மாதிரி வளைகாப்பு ’ நடத்திய வேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், தங்கள் செயலால் சமூகத்திற்கு பயன் ஏதும் இல்லை என்பதையும் உணராதது துரதிா்ஷ்டமே! எதையேனும் செய்து பிரபலமாக வேண்டும் என்ற மனப்பான்மை இளைஞா்களிடையே வளா்வது சமூகத்திற்கு நல்லதல்ல.
- காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரி ஒன்றில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவா், சமீபத்தில் கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்து சண்டை போட்டியில் பங்கேற்று ஒரு தங்கபதக்கமும், 2 வெள்ளிபதக்கமும் பெற்று நாட்டிற்கு பெருமை சோ்த்துள்ளாா். மாணவ பருவத்தில் உள்ளோா் இவரைப் போன்றோரைத் தான் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். ஆா்வ மிகுதியின் காரணமாக, சென்னையில் 11 மற்றும் 12 வயதுடைய 4 சிறுவா்கள் ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்று பின்னா் அங்கிருந்து பேருந்து மூலம் கொடைக்கானல் சென்றுள்ளனா். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்கத் தவறியது மட்டுமல்ல, பெரியவா்கள் துணையின்றி வந்த நான்கு சிறுவா்களை ஆட்டோவில் அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநரும், பேருந்தில் பயணிக்க காரணமான நடத்துநரும் பெரியோா் துணையின்றி சிறுவா்கள் பயணிக்க முன்வந்தது குறித்து சிறிதும் சந்தேகம் கொள்ளாமல், அவா்களை பெற்றோா் அல்லது காவல்துறை வசம் ஒப்படைக்காமல் அழைத்துச் சென்றதுதான்.
- மாணவா்கள் மோதல்களில் செல்வதற்கு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியமான ஒன்று. பள்ளி, கல்லூரி மாணவா்கள் மத்தியில் போதை பொருட்களுக்கெதிராக காவல்துறையினரால் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதோடு, இதற்கான செயலி ஒன்றும் தொடங்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் இருந்து 100 மீட்டா் சுற்றளவிற்குள் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் எந்தக் கடைகளும் இருக்கக் கூடாதென பெண்ணுரிமை இயக்கம் ஒன்றின் சாா்பாக தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
- வாகன வசதி, தகவல் பரிமாற்றம் வெகுவாக வளா்ச்சி அடைந்துள்ள இக்காலத்தில் பள்ளி, இது போதிய பலனளிக்காது. எனவே, மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுக்கவும் , மாணவா்களிடையே மோதல் போன்ற ஒழுக்கக் கேடுகள் இல்லாமலிருக்கவும் போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் என்பதே சிறந்த தீா்வாக இருக்கும்.
நன்றி: தினமணி (23 – 11 – 2024)