- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி தரக் கூடியது. மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகமாகத் தேர்ச்சிபெற்றிருப்பது பெண் கல்வி மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்திருக்கின்றனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி எஸ்.நந்தினி முழு மதிப்பெண்களை (600/600) எடுத்திருக்கிறார். இவை ஆக்கபூர்வமான அம்சங்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்களைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல், அவர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த கல்லூரிகளில் சிறந்த படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் தேர்வில் தோல்வியடைந்தவர்களும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடரப்பட வேண்டும்.
- மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற கல்வித் துறை, கற்றல் அடைவுகளிலும் பாடத்தைத் தாண்டி சிந்திக்கக்கூடிய திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் கல்விக் கனவு தடைபடக் கூடாது என்பதற்காக எட்டாம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி என்கிற நடைமுறை தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
- படித்தாலும், படிக்கவில்லை என்றாலும் தேர்ச்சி பெறத்தானே போகிறோம் என்கிற சிந்தனை, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் சுணக்கத்தை ஏற்படுத்திவிடுவது இயல்பு. இதனாலேயே மாணவர்களில் பலர் தங்கள் வகுப்புக்குத் தகுந்த கற்றல் திறனோடு இருப்பதில்லை. தமிழ், ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாமலும் எளிய கணக்குகளைத் தீர்க்கும் திறனின்றியும் இருக்கிறார்கள். கல்வி நிலையின் வருடாந்திர ஆய்வறிக்கை 2022 (ASER) இதை உறுதிப்படுத்துகிறது.
- தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களைச் சேர்ந்த 3–16 வயதுக்கு உள்பட்ட கிராமப்புற மாணவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 50% பேரும் எட்டாம் வகுப்பு மாணவர்களில் 30% பேரும் இரண்டாம் வகுப்புத் தரத்திலான தமிழ்ப் பாடத்தைக்கூட வாசிக்க இயலாத நிலையில் இருக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களின் கல்வித் தரத்தையும் கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் அரசு அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும்.
- கற்றல் என்பது பாடங்களை மனனம் செய்து மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல; வாழ்க்கைக்கான திறன்களை வெளிக்கொண்டுவருவதாகவும் அது இருக்க வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தெளிவையும் சிந்தனையையும் அது வளர்த்தெடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டிய உலகத்தை, அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எந்தச் சூழலையும் தயக்கமின்றி எதிர்கொள்ளும் துணிவைத் தருவதே கல்வியின் பயனாக அமைய வேண்டும்.
- செயல்வழிக் கற்றல் தொடங்கி மாணவர் நாடாளுமன்றம், வானவில் மன்றம், கலைத் திருவிழா, உயர்கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டி என அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தவும் எதிர்காலத்தை வளப்படுத்தவும் அரசு மேற்கொண்டுவரும் பல திட்டங்கள் பாராட்டத்தக்கவை. இவையெல்லாமே பெயரளவுக்கான திட்டங்களாகச் சுருங்கிவிடாமல் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கியதாக, அர்த்தபூர்வமாகச் செயல்படுத்தப்படும் போது தான் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்கள் அனைவரும் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும்.
நன்றி: தி இந்து (12 – 05 – 2023)