- ஒவ்வோர் ஆண்டும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், படிப்பு - தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகவே இருப்பது வேதனைக்குரிய விஷயம். முன்பெல்லாம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வரும் நாளில், தோல்வியடைந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளைக் கடந்து வந்திருக்கிறோம். இப்போது, எதைப்படிக்க வேண்டும் என்கிற பெற்றோரின் வற்புறுத்தலால் தற்கொலைகள் நடப்பதைப் பார்க்க முடிகிறது.
- 15 வயது மாணவன் ஒருவன் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டான். 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் வேளையில், மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு ஏற்ற பாடப்பிரிவை பிளஸ் 1 சேர்க்கையில் எடுக்க வேண்டும் என அம்மாணவனின் பெற்றோர் அவனை வற்புறுத்தியதுதான் இந்த முடிவுக்குக் காரணம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அவலங்களைத் தவிர்க்க, கல்வி விஷயத்தில் குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி வழி நடத்த வேண்டிய பொறுப்பு பொதுச் சமூகத்துக்கு இருக்கிறது. கூடவே, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைக் களைய வேண்டிய பொறுப்பும் உள்ளது.
மாறிப்போன கனவு:
- கடந்த 75 ஆண்டு காலச் சுதந்திர இந்தியாவில், கல்வி இன்று வந்து நிற்கும் இடம் கவலையளிக்கக்கூடியது. 1948இல் அன்றைய கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தலைமையில் ஒரு சிறப்புக் கருத்தரங்கை அகில இந்திய வானொலி நடத்தியது.
- புகழ்பெற்ற ஆய்வறிஞர்களும், ஜவாஹர்லால் நேரு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஜே.பி.கிருபளானி போன்ற அரசியல் தலைவர்களும் அந்நிகழ்ச்சியில் கட்டுரை வாசித்தனர். அக்கட்டுரைகளைத் தொகுத்து ‘Future Education of India’ என்கிற புத்தகமாக வெளியிட்டது மத்திய அரசின் பதிப்பகப் பிரிவு (Publications Division). அதில் கல்வி குறித்த தங்கள் கனவுகளைத் தலைவர்கள் விவரித்திருந்தனர்.
- அவர்கள் அனைவரும் வலியுறுத்தியது இதுதான்: ‘வேலைவாய்ப்புக்கான ஏணியாக மட்டுமே கல்வி சுருங்கிவிடக் கூடாது; அது குழந்தைகளை மையப்படுத்தியதாகவும் அவர்களுடைய குழந்தைமை மேலும் துலங்கும்படியாக மகிழ்ச்சியானதாகவும் இருக்கவேண்டும். தேசிய உணர்வூட்டிப் பொறுப்பான குடிநபர்களாகக் குழந்தைகளை வளர்ப்பதாக இந்தியாவின் கல்வி அமைய வேண்டும்.’
- ஆனால், அந்தக் கனவுகளுக்கு நேரெதிர் திசையில்தான் நம் கல்விப் பயணம் அமைந்துவிட்டது. 1968இல் கோத்தாரி ஆணையம், ‘கல்வி போகும் திசை சரியில்லை’ என்று எச்சரிக்கை மணி அடித்தும் நாம் திருத்திக்கொள்ளவில்லை. அதே மனப்பாடம், அதே தேர்வு முறை என்று பயணத்தைத் தொடர்ந்தோம்.
- முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர் கொண்டாடப்பட்டார். அதிக மதிப்பெண் எடுக்காதவர்களை, தேர்வில் தோல்வி அடைந்தவர்களைச் சமூகம் இழிவுடன் பார்த்தது. ஆனால், குழந்தைகள் உளவியலில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றி சமூகம் கவலைப்பட்டதே இல்லை.
விழிப்புணர்வு அவசியம்:
- பல பெற்றோர், தாங்கள் அடைய முடியாத கல்வி இலக்கைத் தம் குழந்தைகள் மனதில் ஏற்றி மருத்துவம்... மருத்துவம் என்று வேப்பிலை அடித்து அருள் ஏற்றிக்கொண்டிருக்கையில், நீட் தேர்வு வந்துசேர்ந்தது. அது பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே போதும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது.
- பள்ளிக் கல்வியைவிடவும் நீட் பயிற்சிதான் முக்கியம் என்றாகிவிட்டது. நீட் தேர்வு குறித்த அச்சத்தைக் குழந்தைகள் மனதில் விதைத்துவிட்ட பிறகு, பெற்றோரும் அதையே வற்புறுத்தும்போது குழந்தைகள் கையறுநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மதிப்பெண்… மதிப்பெண் எனக் குழந்தைகளை விரட்டும் இக்கல்வி முறை, வாழ்க்கையில் எது ஒன்றையும் எதிர்கொள்ளும் துணிவையும் பக்குவத்தையும் நம் குழந்தைகள் மனதில் விதைக்கத் தவறியுள்ளது.
- மருத்துவம், பொறியியல் தவிர்த்த பல நூறு உயர் கல்விவாசல்கள் திறந்திருக்கின்றன. அவற்றை நம் பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது அவையெல்லாம் மதிப்பு இல்லாதவை என்று கருதுகிறார்கள். இப்படியான சூழலில், எல்லாப் பள்ளிகளிலும் பெற்றோரை வரவழைத்து, எண்ணற்ற உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், குழந்தைகளின் உரிமைகள் பற்றியும் சொல்லித்தர வேண்டும்.
கரைசேரட்டும் குழந்தைகள்:
- 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வி குறித்த யுனெஸ்கோ ஆவணமான ‘The Treasure Within’, கல்வியின் நான்கு தூண்கள் என அறிவதற்குக் கற்றல், வாழ்வதற்குக் கற்றல், செயலாற்றுவதற்குக் கற்றல், சேர்ந்து வாழ்வதற்குக் கற்றல் என்பனவற்றை முன்வைத்துள்ளது.
- நம் நாட்டின் கல்விப்புலத்திலோ குழந்தைகள் உயிர்வாழவே கற்றுக்கொள்ளவில்லை. என்ன கல்வியோ,என்ன கொள்கையோ? எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, குழந்தைகளுக்கு மேலும் மேலும்ஒற்றைத் தேர்வுகளை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை கூடுதலான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
- இந்தக் கொடுமைகளை எல்லாம் கணக்கில் கொண்டு, நம் குழந்தைகள் மகிழ்ச்சியாகத் தம் குழந்தைப் பருவத்தையும் பதின்பருவ வாழ்க்கையையும் கழிக்கும் வண்ணம் ஒரு சரியான கல்விக் கொள்கையைத் தமிழக அரசு உருவாக்கி, நம் குழந்தைகளைக் காக்க வேண்டும்.
- மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் நிலவும் சலனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி வேறு எதையுமே கொடுக்க வேண்டாம்; பிள்ளைகளைக் காவு வாங்காமல் விட்டாலே போதும். நம் பிள்ளைகள் தாமே வாழ்வைக் கற்றுக்கொண்டு எப்படியாவது நீந்திக் கரை சேர்ந்து விடுவார்கள்.
நன்றி: தி இந்து (15 – 05 – 2023)