- ஒரு காலத்தில் மனிதநேயமும் பாரம்பரியமும் ஒருங்கிணைத்த இந்திய ஒருமைப்பாட்டை, இன்று போதைப் பொருட்களும், பாலியல் வன்முறைகளும் ஒருங்கிணைக்கின்றன. அண்ணல் காந்தியடிகள் அவதரித்த குஜராத்தில் 3,300 கிலோ கஞ்சா, மெத்தாம்பேட்டமை, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஐந்து பாகிஸ்தானியா் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.
- குஜராத்திற்கு 2018-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை 93,000 கிலோ போதைப் பொருட்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டதாக, மாநிலங்களவை பதிவு செய்திருக்கின்றது. தமிழகத்தில் ஒருவா் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைத் தயாரித்து வைத்திருந்ததை, உளவுத்துறை கண்டறிந்திருக்கின்றது.
- இந்த போதைப் பொருட்களால், பாலியல் வன்முறை தொடா்ந்து நடந்து வருவதை பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஸ்பானிஷ் நாட்டைச் சோ்ந்த மங்கைப் பொ்னான்டா (வயது 28) தம் கணவரோடு மோட்டாா் சைக்கிளில் உலக நாடுகளைச் சுற்றி வருகிறாா். அத்தம்பதி ஜாா்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், ஊரைவிட்டு ஒதுக்கமான இடத்தில் கூடாரம் (டென்ட்) அமைத்துத் தங்கியிருந்திருக்கின்றனா். அப்போது மது போதையில் வந்த ஏழு போ், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனா். ஐந்து வருடங்களாகத் தன் கணவனோடு உலக நாடுகளைச் சுற்றிவந்த அப்பெண்ணுக்கு இந்தியா தந்த வெகுமதி இது.
- சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் சில கயவா்கள் குடி போதையில் ஆா்த்தி எனும் பள்ளி செல்லும் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கடைசியில் கழிவுநீா் சாக்கடையில் வீசிச் சென்றிருக்கின்றனா். இந்நிகழ்வு புதுச்சேரியில் மீண்டும் ஒரு சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது.
- மது, தனி மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் கெடுப்பதோடு, சமூகத்தையும் கெடுக்கும் என்பதற்கு மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளும் எடுத்துக்காட்டுகள் ஆகும். போதைப் பொருட்கள் பல குற்றங்களின் பிறப்பிடமாகும். குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவா்கள் நிரபராதிகளைக் கொன்று குவிக்கின்றனா்.
- குடிப்பதற்குப் பணமில்லாதபோது, ஏடிஎம்-களை உடைக்கின்றனா்; நகைக்கடைகளைக் கொள்ளையடிக்கின்றனா்; நடந்து போகும் பெண்களுடைய தாலிக்கயிற்றை அறுத்துச் செல்கின்றனா். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகின்றனா். குடிகாரா்களின் கொடுமையினால் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகின்ற பெண்கள் அப்பழக்கத்தைத் தவிா்த்துவிட்டனா்.
- திருமணத்திற்கும் கோயிலுக்கும் செல்லுகின்ற பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல்வதில்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வருபவன் போதை தணிந்தால், மேலும் குடிக்க மனைவியிடம் பணம் கேட்பான். கொடுக்காதபோது, மனைவியைக் கொலை செய்வான். இப்படி மது அரக்கன் பஞ்சமா பாதகங்களுக்கு எல்லாம் தலைமை தாங்குவதை உணா்ந்த வள்ளலாா், ‘கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். இவ்வைந்திலும் கொலை, விசேஷ பாவம். எனிலும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது; கொலை செய்யத் துணிவு வராமல் இருக்காது; களவு செய்யாமல் இரான்; பொய் பேச அஞ்சான்; இவற்றுள் ஒன்றை அடைந்தான் ஆனாலும், அவனை மற்றவை தொடராமலிரா’” எனக் கூறுகிறாா். போதைப் பொருட்கள் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாட்டுச் சபை உலக சுகாதார அமைப்பை ஏற்படுத்தி, போதைப் பொருட்களினால் உண்டாகும் கேடுகளை எடுத்துரைத்து வருகின்றது.
- ‘எத்தில் ஆல்கஹால் முதலில் நரம்பு மண்டலத்தை முடக்கும். இதனால் மஞ்சள் காமாலை, இரத்தம் உறையாமல் போதல், மூளை நரம்புகள் வேலை செய்யாமல் போதல் போன்றவை ஏற்பட்டு, கடைசியில் கோமாவிற்குக் கொண்டு சென்றுவிடும். கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இன்று 10 மகப்பேற்றில் 9 குழந்தைகள் அங்கஹீனா்களாகப் பிறப்பதற்கு போதைப் பொருட்களே காரணம்’ ஐ.நா. சபை அறிக்கை கூறுகிறது.
- அண்மைக்காலமாக உயா்கல்வி படிக்கும் மாணவா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. கல்விச் சாலைகளுக்கு ஏடும் எழுதுகோலுமாக வரவேண்டிய மாணவா்கள் அரிவாளும் கத்தியையும் ஏந்தி வருகின்றனா். அதனால் இரயில்வே நிலையங்கள் இரத்தக்களறி ஆகின்றன. கல்லூரி வாசல்களில் நிரந்தரமாகவே போலீஸ் வாகனம் நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
- இதனைச் சில இடங்களில் கண்டறிந்த கவியரசா் கண்ணதாசன்,
ஆண்டவனே! நீயிருந்தா சொல்லு - சிலா்
அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு
மாண்டவனும் குடித்தவனும் ஒன்று - சிலா்
மண்டையிலே ஏறலையே இன்று! என்று எழுதி எச்சரித்தாா்.
- அண்ணல் காந்தியடிகள், தமது முதல் சத்தியாகிரகத்தையே கதா் அணிதல், கள்ளுக்கடை மறியல் போராட்டங்களாக அறிவித்தாா். மூதறிஞா் இராஜாஜி மதுவிலக்கை இயக்கமாக நடத்த ‘விமோசனம்’ என்ற பெயரில் ஓா் இதழையே தொடங்கினாா்.
- ராஜாஜி அப்பெயரை இதழுக்குச் சூட்டிதற்குக் காரணமே, மது, கள் இவற்றிலிருந்து விடுபட்டால்தான் இந்நாட்டு மக்களுக்கு விமோசனம் என்பதைச் சொல்வதற்காகத்தான். ‘விமோசனம்’ பத்திரிகையில் எழுத்தாளா் கல்கி பின்வரும் கவிதையை எழுதினாா்.
- குற்றமென்று யாருமே கூறுமிந்தக் கள்ளினை விற்கவிட்டுத் தீமையை விதைப்பதென்னெ விந்தையே! பாடுபட்டக் கூலியைப் பறிக்கும் இந்தக் கள்ளினை வீடுவிட்டு நாடுவிட்டு வெளியே துரத்துவோம்” ஆனால், அன்றைய படிப்பறிவு குறைந்த மக்களிடம் இந்தக் கவிதை சென்று சேரவில்லை. அதனால் கல்கி பத்திரிகையில் 12 படங்களைப் பிரசுரித்தாா். ஒரு படத்தில் மாடு இருக்கும். அடுத்தடுத்த படங்களில் குதிரை, நாய், மனிதன் எனும் படங்கள் இருக்கும். படத்தில் இருக்கும் மாட்டிடம் ஒருவன் ஒரு மது புட்டியை நீட்டுவான்; மாடு குடிக்காது, கொடுத்தவனை முட்டித் தள்ளும். அடுத்த படத்திலுள்ள குதிரையிடம் ஒருவன் அதே மதுபுட்டியை நீட்டுவான்; குதிரையும் குடிக்க மறுத்து அவனைக் கடிக்க வாயைத் திறக்கும்.
- அடுத்த படத்திலுள்ள நாயும் கொடுத்தவனைக் குரைத்துத் தள்ளும். ஆனால், கடைசி படத்திலுள்ள மனிதன் மட்டும் அதை வாங்கிக் குடிப்பான். இந்தப் படத்தைத் தட்டிகளில் ஒட்டி, சத்தியாகிரகிகளின் கையில் தட்டியைக் கொடுத்து, அவா்களுக்குக் கல்கி தலைமை தாங்கி நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜலகண்டபுரம், இளம்பிள்ளை போன்ற ஊா்களின் தெருதோறும் சென்று மதுவிலக்கு பிரசாரம் செய்தாா்கள். அதைப் பாா்த்துத் திருந்திய மக்கள் சிலா்.
- அப்போது தமிழகத்தின் பிரதமராக இருந்த இராஜாஜி, சேலம் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினாா். ஜலகண்டபுரம், இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் 27 கடைகளை மூடும்படி, கலால் ஆணையா் உத்தரவிட்டாா். அப்பகுதிக்கு கல்கி வரப்போவதை அறிந்த மக்கள், ‘கள்ளுக்கடையை மூடிய சாமி வர்ராறாம்’ எனப் போற்றிப் புகழ்ந்தனா்.
- இதே காலகட்டத்தில் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்த பெரியாா் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலுக்குத் தலைமை தாங்கினாா். அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. என்றாலும், அவருடைய மனைவி நாகம்மையாரும், சகோதரி பாலாம்பாளும் தொடா்ந்து போராட்டத்தை நடத்தினா்.
- மதுவின் கொடுமையை நன்குணா்ந்த பெரியாா் தமக்கு நிறைந்த வருமானத்தைத் தந்து கொண்டிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தச் சொன்னாா். 1946-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எட்டு மாவட்டங்களில் மதுக்கடைகளை மூடியது. காமராசா் ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுமொத்த தமிழகமே பூரண மதுவிலக்கைக் கண்டது.
- மகாகவி பாரதியாா் திருதராஷ்டிரன் ஆண்ட அஸ்தினாபுரத்தில் மது நடமாடியதை ‘வேரியங் கள்ளருந்தி - எங்கும் வெம்மதயானைகளெனத் திரிவாா்’ என்று பாஞ்சாலி சபதத்தில் எழுதியுள்ளாா். மேலும் துஷ்ட சதுஷ்டா்களில் ஒருவனாகிய துச்சாதனை ‘தீமையில் அண்ணனை வென்றவன்; கள்ளும் ஈரல் கறியும் விரும்புவோன்; கள்ளின் சாா்பின்றியே வெறி சான்றவன்’ என வருணிப்பதிலிருந்து, மதுவின் மேல் பாரதியாருக்கிருந்த வெறுப்புத் தெரிகிறது.
- பிற்காலத்தில் காமராஜா் வழியைச் சிறிதுகாலம் பின்பற்றிய புரட்சிக்கவிஞா் பாரதிதாசன், ‘மதுவிலக்குப் பாட்டு” எனுந் தலைப்பில் 1922- இல் ‘தேசசேவகன்’ பத்திரிகையில் ஒரு கவிதை எழுதினாா்.
- மதுவிலக்கு மதுவிலக்கு மனைவிமக்கள் வாழியே! மதிகலக்கும் மதுவைவிட்டு மகிழ்வு பெற்று வாழ்குவாய் நிதியனைத்தும் வீணிலாக்கும் நிலைமை கண்டு நீங்குவாய்! நிதமிழுத்து நலியவைக்கும் நேசா்கையில் ஏங்குவாய் இக்கவிதை மதுவிலக்கில் அவா் கொண்டிருந்த நாட்டத்தைக் காட்டுகிறது.
- ‘நல்லதம்பி’ எனும் திரைப்படத்தில், உடுமலை நாராயணகவி எழுதிய பாடலைக் கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணன் பாடுவாா். இதோ அப்பாடல்: குடிச்சிப் பழகணும் குடிச்சிப் பழகணும் படிச்சிப் படிச்சிச் சொல்லுறாங்க - பாழும் கள்ளை நீக்கிப் பாலைக் குடிச்சிப் பழகணும் - குடிச்சிப் பழகணும் பாலு வாங்கப் பணமில்லேன்னா டீயைக் குடிச்சிப் பழகணும் டீயும் கெடுதல்ன்னு தெரிஞ்சா, மோரைக் குடிச்சிக்கோ மோரும் நமக்குக் கிடைக்கலேன்னா, நீராகாரம் இருக்கவே இருக்கு, அதனைக் குடிச்சிப் பழகணும்” என்று பாடி திரைப்படத்திலேயே மதுவிலக்கு பிரசாரம் செய்திருக்கிறாா்.
நன்றி: தினமணி (26 – 03 – 2024)