TNPSC Thervupettagam

மாண்பை இழக்கிறதா மக்களாட்சி?

June 11 , 2019 2040 days 1333 0
  • உலகம் முழுவதும் மிக வேகமாக மக்களாட்சி வியாபித்துள்ளது. 1896-இல் உலகில் 10 நாடுகளில் மட்டும்தான் மக்களாட்சிக் கூறுகள் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டன. 1987-ஆம் ஆண்டில் கணக்கிட்டு ஆய்வு செய்தபோது, மக்களாட்சி அரசாங்கத்தை 66 நாடுகள் நிறுவியிருந்தன. மக்களாட்சி விரிவாக்கத்தை 1996-இல் கணக்கிட்டபோது, 100 நாடுகள் பின்பற்றத் தொடங்கியிருந்தன. 2001-ஆம் ஆண்டில் ஆய்வு செய்தபோது உலகில் உள்ள 192 நாடுகளில், 121 நாடுகள் மக்களாட்சியின் கட்டமைப்புக்குள் வந்துவிட்டன. 2015-ஆம் ஆண்டு மதிப்பீடு செய்தபோது, உலகில் வாழும் மக்களில் ஏறத்தாழ 80 சதவீத மக்கள் மக்களாட்சியின் கீழ் வந்துவிட்டனர்.
மக்களாட்சியின் மாண்புகள்
  • பல சமூகங்கள், மக்களாட்சியின் மாண்புகள் என்ன என்று அறிவதற்கு முன்பாகவே அந்தச் சமூகத் தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களாட்சி என்ற அமைப்பின்கீழ் அந்தச் சமூகங்கள் வந்துவிட்டன. இவ்வாறு மக்களாட்சிக்குள் சமூகங்கள் வருவது தவறில்லை. மக்களாட்சியை சமூகம் கைக்கொண்ட பிறகு, அதை ஜனநாயகப்படுத்த முயற்சிக்காமல் இருப்பதுதான் தவறு. உலகில் பல நாடுகள் மக்களாட்சிக்குள் வந்துவிட்டோம் என்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக மக்களாட்சியில் இருக்கும் ஒருசில நாடுகள் தங்கள் நாட்டில் மக்களாட்சி தரம் கெட்டு சீரழிகின்றதே என ஆழ்ந்த கவலையில் தோய்ந்துள்ளன.
  • உலகில் மக்களாட்சி என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, இதன் உட்பொருள் விரிவடைந்து கொண்டு வருவதைப் பார்த்து வருகிறோம். மக்களாட்சிக்குப் பொருள் கொள்ளும்போது, அதை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில், "இது ஆளுகைக்கான ஓர் அமைப்பு முறை' என்று பொருள் கூறி முடித்துக் கொள்கிறோம். அந்த அமைப்பு தேர்தல் மூலம் உருவாக்கப்படுகிறது என்று விளக்கி, மக்களாட்சி என்பது அரசும், தேர்தலும் என்று முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறோம்.
  • அரசியல், தேர்தல், ஆட்சி என்பதுடன் மக்களாட்சி நின்றுவிடவில்லை. மக்களாட்சி என்பது ஒரு கலாசாரம், ஒரு நடத்தையியல், ஒழுக்க நியதிகளின் ஒரு தொகுப்பு, ஒரு பார்வை என்பதை யாரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
  • அதன் விளைவுதான் இன்று உலகத்தில் பல மக்களாட்சி நாடுகள், தங்கள் நாட்டில் அரசாங்கத்தில் மக்களாட்சி இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், சமூகத்தில் மக்களாட்சிப் பண்புகள் தகர்க்கப்படுகின்றன என்று கவலை கொண்டுள்ளன. மக்களாட்சி என்பது அரசாங்கம் மட்டும் கடைப்பிடிக்கக்கூடிய கூறுகள் அல்ல.
மக்களாட்சி
  • அரசாங்கமும் மக்களும் மக்களாட்சிக்கூறுகளைக் கடைப்பிடித்தால்தான் மக்களாட்சி என்பது மாண்புறும். மக்களாட்சி வளர்ந்த வரலாற்றைப் பார்க்கும்போது, சுதந்திரத்தில் ஆரம்பித்து, சமத்துவம், சகோதரத்துவம், நேர்மை, நியதி, நீதி, நியாயம், எதிர்கருத்துகளுக்கு மதிப்பளித்தல், மானுட உரிமைகளை நிலைநாட்டல், பொறுப்புணர்வுடன் குடிமக்களை உருவாக்கல் என்ற உட்கூறுகளையும், விழுமியங்களையும் கொண்டதாக மக்களாட்சி விரிவுபட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
  • நவீன காலத்தில் மக்களாட்சி அமெரிக்காவில் 1776-இல் உருவாக்கப்பட்டு, 1789-ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி மூலம் விரிவாக்கப்பட்டு இன்று உலகை ஈர்க்கக்கூடிய மாபெரும் இயக்கமாக மாறியிருக்கிறது.
  • மக்களாட்சியை உலகில் ஆய்வு செய்கின்ற "பிரிடம் ஹவுஸ்' என்ற நிறுவனம் தொடர்ந்து உலகில் மக்களாட்சி எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த ஆய்வுகளில், எப்படி ஒரு மக்களாட்சி நாட்டில் அரசாங்கமும், சமூகமும் மக்களாட்சியின் கூறுகளைக் கடைப்பிடிக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடுகளைத் தரம் பிரிக்கின்றன.
  • குறைந்தபட்ச மக்களாட்சியிலிருந்து, உச்ச நிலை மக்களாட்சி வரை பகுத்து நாடுகளின் தரத்தை வெளியிடுகின்றன.
  • அப்படி ஆய்வு செய்யும்போது, அந்த ஆய்வில் அரசாங்கத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சமூகத்தில் எந்த அளவுக்கு மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் வழக்கத்தில் சமூகச் செயல்பாடுகளில் இருக்கின்றன என்பதை வைத்துத்தான் தரம் பிரிக்கின்றன. அப்படிக் கணக்கிட்டுப் பிரிக்கும்போது இந்தியா என்பது குறைந்தபட்ச மக்களாட்சியில் இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன அந்த ஆய்வு அறிக்கைகள்.
  • நம் மக்களாட்சி என்பது நிறுவனங்களாகவே இருக்கின்றன. அதன் செயல்பாடுகளில் மக்களாட்சியின் உட்கூறுகள் வெளிப்படுவதில்லை என்பதையும் காட்டுகின்றன இந்த அறிக்கைகள்.
  • இதற்குமேல் ஒரு படி சென்று சமூகத்தில் மக்களாட்சியின் கூறுகள் செயல்படுவதையும் ஆய்வு செய்து, நம் சமூகம் மக்களாட்சியை நிறுவனங்களுக்குத்தான் என நினைத்து, தங்கள் சமூக வாழ்க்கையில் மக்களாட்சியின் கூறுகளாகிய சமத்துவம், சகோதரத்துவம், நியாயம், நேர்மை, நியதி, நீதி, எதிர்கருத்தை மதித்தல் போன்றவற்றைப் பின்பற்றி வாழத் தவறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை இந்த அறிக்கைகள். இந்தியாவைப் பொருத்தவரை தேர்தல் நடத்துவது, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைப்பது என்ற வகையில்தான் முன்னிலையில் இருக்கிறது. இவற்றைத் தாண்டி, அரசு செயல்பட உருவாக்கப்பட்ட நிறுவனங்களையும், சமூகத்தை ஜனநாயகப்படுத்தி இருக்கின்றனவா என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கூற இயலாத நிலையில்தான் நம் அரசு நிறுவனங்களும், சமூகமும் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்திய நாட்டில் சமூகச் செயல்பாடுகளில் மக்களாட்சிக்கு எதிர்மறையான காரணிகள் தென்படுவதால் தொடர்ந்து மக்களாட்சிக்கு சவால்கள் வந்த வகையில் இருக்கின்றன. இவற்றைச் சமாளித்து மக்களாட்சிக் கட்டமைப்பில் குறைந்தபட்சம் இந்தியாவை மக்களாட்சியில் வைத்திருப்பதையே சாதனையாகத்தான் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
தேர்தல்
  • எனவே, மக்களாட்சியில் நாம் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நம் சமூகமும், நம் சமூகத்திற்கு வழிகாட்டும் தலைவர்களும் உணர்ந்திருக்கிறார்களா என்பதுதான் இன்று எழும் கேள்வி. இதைவிட நமக்கு ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. குறைந்தபட்ச மக்களாட்சிக்குத் தேவையான தேர்தலை நம்மால் நேர்மையாக நடத்துவதற்குச் சிக்கல் வந்திருக்கிறது. ஓர் ஆட்சி தேர்தலின் மூலம் உருவாகும்போதே, மக்களாட்சிக் கூறுகளை அழித்துத்தான் உருவாக்கப்படக்கூடிய சூழல் என்று வரும்போது, நம் மக்களாட்சியின் நிலை எங்கே உள்ளது என்பதை உணர முடிகிறது.
  • "தேர்தலில் தவறுகள் நடக்கின்றன' என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றன. முறைகேடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. இந்த நாட்டில் மக்களாட்சியைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக விளங்கும் அரசியல் கட்சிகள்தான் செய்கின்றன.
  • மக்களாட்சிக்கு அடிப்படை சுயக் கட்டுப்பாடு, நேர்மை, நியதி, நியாயம், இவற்றை பெரும்பாலான அரசியல் கட்சிகள் மீறும்போது தேர்தல் ஆணையத்தைக் குறை கூறி பயன் என்ன? ஊர் கூடி திருட ஆரம்பித்து விட்டு, திருடனை போலீஸ் பிடிக்கவில்லை என்று கூறுவதுபோல் அல்லவா இருக்கிறது இன்றைய தேர்தல் சூழல். அரசியல் கட்சிகள் மூட்டை மூட்டையாக பணத்தைச் சேகரித்து, வாக்கு பெற விநியோகித்து விட்டு, "மக்கள் காசு வாங்க ஆரம்பித்துவிட்டார்கள், நாங்கள் என்ன செய்வது?' என்று கூறுவது, மக்களாட்சியை ஊனம் மிக்கதாக மாற்றுவதற்குத்தான் உதவுமேயன்றி, மாண்புறச் செய்யாது. இந்த நாட்டில் பொதுமக்களை, பொறுப்புள்ள குடிமக்களாக்குவதற்குப் பதில் பயனாளியாக, மனுதாரராக, வாக்காளராக, நுகர்வோராக மாற்றி அவர்களின் சுயமரியாதையைப் பறித்து கையேந்தி வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது; "பொறுப்புள்ள குடிமக்களாக, அரசியல் கட்சிகள் தரும் பணத்தை நிராகரித்து அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள்' என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதானே.
வழிகள்
  • இதிலிருந்து விடுபட என்ன வழி எனப் பார்க்க வேண்டும். இன்றைய அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தலை நோக்கித்தான் இருக்கின்றன. அது அதிக பொருள் செலவு மிகுந்ததாக உள்ளது. இந்தச் செலவுகள் குறையாத சூழலில், ஊழல் குறையப் போவதில்லை. ஊழல் செய்வது மக்களுக்குத் தொண்டு செய்வதற்கு அல்ல. எனவே, இந்தச் சூழலை மாற்ற கடுமையான தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதில் தேர்தல் செலவினங்களைக் குறைக்க வழிவகை காணப்பட வேண்டும். அடுத்து தேர்தலுக்காக மக்களை லட்சக் கணக்கில் கூட்டப்படுவதை முற்றிலுமாகத் தவிர்த்து, தலைவர்களை தொலைக்காட்சி மூலம் மக்களைச் சென்றடைய வைக்க வேண்டும். பெரும் செலவில் அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் அறக்கட்டளைகளைத் தடுக்க வேண்டும். கட்சிகளின் சொத்துகளுக்கும் வருமானத்துக்கும் உச்சவரம்பு கொண்டுவர வேண்டும். மேலும், அரசியல் கட்சி பதவிகளும், சட்டப்பேரவை பதவிகளும், நாடாளுமன்ற பதவிகளும் ஒருவர் இரு முறைக்கு மேல் வகிக்கக் கூடாது என்று உச்சவரம்பு கொண்டுவர வேண்டும். இவற்றைச் செய்தால் மக்களாட்சியில் குறைந்தபட்ச அளவாவது மாண்புகள் பாதுகாக்கப்படும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories