TNPSC Thervupettagam

மாதத்துக்கு 5 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் முந்த்ரா துறைமுகம்

November 6 , 2023 432 days 423 0
  • இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் முந்த்ரா. நாட்டின் மிகப்பெரிய கன்டெய்னர் துறைமுகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும் இது விளங்குகிறது. இதனை அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. முந்த்ரா துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.
  • குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அமைந்துள்ளது முந்த்ரா நகரம். 25 ஆண்டுகளுக்கு முன்பு முந்த்ரா பகுதி தரிசு நிலமாக உப்பங்கழி போல் காட்சியளித்தது. முந்த்ராவுக்கு அருகே உள்ள நாட்டின் முக்கியமான கண்ட்லா துறைமுகத்தை கவுதம் அதானி இளம் வயதில் பார்வையிட்டார். அப்போது அதைவிட பெரிய துறைமுகத்தை முந்த்ராவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
  • இதற்கான முயற்சிகளை மேற்கொணடதன் பலனாக, 1998-ம் ஆண்டு அவரது எண்ணம் நிறைவேறியது. ஆம் அந்த ஆண்டில்தான் முந்த்ரா துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, தற்போது நவீன கட்டமைப்பு வசதிகளுடன் நாட்டின் மிகப் பெரிய வர்த்தக துறைமுகமாக மாறியுள்ளது முந்த்ரா.
  • இங்கு ஆண்டுக்கு 4,000-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இதன் முதல் முனையத்தில் திரவ நிலை சரக்குகளை கையாள்வதற்கு, 4 கப்பல் நிறுத்தும் இடங்கள் உள்ளன. இந்த முனையத்தில் கப்பல் நிறுத்தும் இடங்களில் இருந்து 13 விதமான பைப்லைன்கள் சேமிப்பு கிடங்குகளுக்கு செல்கின்றன. சமையல் எண்ணெய், ரசாயனம், கச்சா எண்ணெய் ஆகியவை தனித்தனி சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. இங்கு 4.26 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவு திரவ பொருட்களை சேமிக்க 97 சேமிப்பு தொட்டிகள் உள்ளன.
  • சமையல் எண்ணெய் பைப்லைன்கள் மூலமாக துறைமுகத்திலிருந்து, அதானி சுத்திகரிப்பு நிலையத்துக்கு நேரடியாக செல்கின்றன. இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கான கச்சா எண்ணெய், தற்போது கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பைப்லைன்கள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றம் செய்யப்படு கின்றன. இதன் செலவை குறைக்க கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு தனி முனையம் அமைக்கும் பணிகளை அதானி போர்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
  • இதன் 2-வது முனையம் 2 கி.மீ. தூரத்துக்கு நீள்கிறது. உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களை இங்கு கையாள முடியும். சரக்கு கன்டெய்னர்களை மின்னல் வேகத்தில் கையாளும் கிரேன் வசதிகள் இங்கு உள்ளன. இங்குள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்தில் மாதத்துக்கு சுமார் 5 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களின் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் முந்த்ரா துறைமுகம் மூலமாகத்தான் நடைபெறுகிறது. இதேபோல் இதர சரக்குகளை கையாள தனி முனையங்கள் உள்ளன. எல்பிஜி காஸ் இறக்குமதி செய்வதற்கும் தனி முனையம் மற்றும் சேமிப்பு வசதி இங்கு உள்ளது.
  • திட சரக்குகள், வேளாண் பொருட்கள், உரங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்க திறந்தவெளி மற்றும் மேற்கூரையுடன் கூடிய தனி சேமிப்பு கிடங்குகளும் உள்ளன. இங்கு 6,30,000 மெட்ரிக் டன் சரக்குகளை சேமித்து வைக்க முடியும்.சரக்குகளை கையாள முந்த்ரா துறைமுகத்தில் சாலை, ரயில் மற்றும் விமான நிலைய இணைப்புகள் உள்ளன. முந்த்ரா துறைமுகத்தில் உள்ள விமான நிலையத்தில் தற்போது 900 மீட்டர் நீளத்தில் ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 4,500 மீட்டர் நீளத்துக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. இப்பணி முடிந்தவுடன் இது சர்வதேச சரக்கு விமான நிலையமாக மாறும்.

சூரிய மின்சக்தி தகடுகள்

  • சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ள முந்த்ராவில், நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிக்கும் ஆலையையும் அதானி சோலார் நிறுவனம் அமைத்துள்ளது. இங்கு முற்றிலும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிக்கப்படுகின்றன. 14 வினாடிக்கு ஒரு சூரிய மின் சக்தி தகடு வீதம் நாள் ஒன்றுக்கு 10,400 சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிக்கப்படுகின்றன. 335 வாட், 345 வாட், 435 வாட், 540 வாட் திறனுடன் கூடிய நான்கு விதமான சூரிய மின்சக்தி தகடுகள் இங்கு தயாராகின்றன.
  • இங்கு தயாராகும் சூரிய மின்சக்தி தகடுகளில் 80% அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 20% மட்டும் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சூரிய மின்சக்தி தகடுகள் 30 ஆண்டுகள் செயல்படக் கூடியவை. இதில் உள்ள சூரிய மின்சக்தி செல்களும் முந்த்ராவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மேகமூட்டம் நிலவும் காலங்களிலும் இந்த தகடுகள் 60 சதவீத மின் உற்பத்தியை செய்கின்றன.
  • காற்றாலை இயந்திர உற்பத்தி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தீவிரம் காட்டும் அதானிகுழுமம், காற்றாலை இயந்திரத்தின் பிளேடுகள் தயாரிப்பு ஆலையையும் முந்த்ராவில் நிறுவியுள்ளது. நாட்டின்மிகப் பெரிய காற்றாலை இயந்திர தயாரிப்பில் முந்த்ரா விண்ட்டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
  • அதானி குழுமத்தின் முதல் காற்றாலை இயந்திரம் முந்த்ராவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை ஒரு மணி நேரத்தில் 5.2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. நம் நாட்டில் மற்ற காற்றாலை இயந்திரங்களின் திறன் மணிக்கு 3 மெகா வாட் மட்டுமே. இந்த காற்றாலை இயந்திரத்தின் உயரம் 200 மீட்டர். இறக்கையின் நீளம் 78.

6 மீட்டர்.61 கிராம மக்களுக்கு உதவி

  • அதானி குழுமம் தனது பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியில் இருந்து, முந்த்ரா பகுதியில் உள்ள 61 கிராமங்களில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சாலை வசதி இல்லாத ஜர்பாரா என்ற தொலைதூர கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவர் களது நிலத்தில் மழைநீர் சேமிப்பு வசதி, மாட்டுத் தொழுவம், சாண எரிவாயு போன்ற வசதிகளுடன் வீடு கட்டி கொடுத்துள்ளது. சொட்டு நீர் பாசனம் மூலம் பேரீட்சை மரங்கள் வளர்க்கவும், சோளம் போன்ற பயிர்களை ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யவும் அதானி அறக்கட்டளை உதவியுள்ளது.
  • இதுதவிர பத்ரேஸ்வர் என்ற மீனவ கிராமத்தில் அதானி வித்யா மந்திர் என்ற இலவச பள்ளியை நடத்தி வருகிறது. கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அதானி பப்ளிக் பள்ளி செயல்படுகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்ட பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ரூ.4 லட்சம் கோடி மூதலீடு

  • முந்த்ராவில் இதுவரை ரூ.70,000 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. முந்த்ராதுறை முகம் மூலம் குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு இதுவரை ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. முந்த்ராவில் அடுத்த 6 ஆண்டுகளில் துறைமுகம், சூரிய மின்சக்தி, காற்றாலை, தாமிர ஆலை போன்ற திட்டங்களை தொடங்க சுமார் ரூ.4 லட்சம் கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளது.
  • முந்த்ரா துறைமுகம் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு புதிய திட்டங்களை விரிவுபடுத்தும் போது, கூடுதலாக 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories