TNPSC Thervupettagam

மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை

May 6 , 2020 1718 days 892 0
  • கரோனா எதிர்கொள்ளல் நடவடிக்கையால் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிற நிலையில், ‘கரோனா எதிர்கொள்ளல் சிறப்பு நிதி’ என்ற பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு என்று இந்திய அரசு அளிக்க வேண்டும்.

மானியங்களுக்காகக் கையேந்தும் நிலை

  • கரோனாவை எதிர்கொள்ளும் செலவுகளும், ஊரடங்கு உண்டாக்கியிருக்கும் பொருளாதாரத் தேக்கமும் சேர்த்து மாநில அரசுகளின் வரி வருவாயை ஏறக்குறைய துடைத்தெறிந்துவிட்டன.
  • தமிழ்நாட்டில் வழக்கமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 கோடி வரி வருவாய் கிடைக்கும். தன்னுடைய செலவுகளில் ஏறக்குறைய 60% நிதியாதாரத்தை இந்த வரிகளிலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு.
  • ஆனால், ஊரடங்கு காரணமாக வழக்கமான வரி வருவாயில் 10% கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் ரூ.12,000 கோடி; ஆனால், ஏப்ரலில் மாநில அரசின் மொத்த வருமானம் ரூ.2,284 கோடியாகச் சுருங்கிவிட்டது. கட்சி பேதமின்றி எல்லா மாநிலங்களுமே ஒன்றிய அரசின் மானியங்களுக்காகக் கையேந்தி நிற்கின்றன.

வரி சுதந்திரம்

  • பொதுவான சராசரிக் கணக்கீடுகளின்படி, மாநிலங்களின் நிதியாதாரங்களில் நேரடி வரிகளிலிருந்து அவை பெறுகிற வரி வருவாய் 46% மட்டுமே; எஞ்சிய 54% தொகை ஒன்றிய அரசிடமிருந்து வரும் வரிப் பகிர்வு 26%, மானியங்கள் 20%, வரியல்லாத வருவாய் 8% என்று பிரிகின்றன. வரி அதிகாரத்தில் ஒன்றிய அரசின் கைகளே ஓங்கியிருக்கும் நிலையில், மாநிலங்களுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைவு; ஜிஎஸ்டிக்குப் பிந்தைய காலகட்டம் மாநிலங்களின் வரி சுதந்திரத்தை மேலும் சுருக்கிவிட்டது.
  • இன்றைக்கு மாநிலங்களுக்கு உள்ள வரி வருவாயில், முக்கியமான ஒரு பகுதி பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மது விற்பனையின் வழி கிடைக்கிறது. விளைவாகவே, இந்த இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளை உயர்த்தி, மதுக் கடைகளைத் திறக்கும் மோசமான நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • மாநிலங்களின் நிதி நெருக்கடியைப் போக்க ஒரு சிறப்பு நிதியை ஒதுக்குவதுடன், ‘பட்ஜெட் பற்றாக்குறைக்கான உச்ச வரம்பை 3% என்பதிலிருந்து 5% ஆக உயர்த்த வேண்டும்’ என்ற மாநிலங்களின் கோரிக்கைக்கும் ஒன்றிய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். ஏனைய பல கூட்டாட்சி நாடுகளில் உள்ளதுபோல மாநிலங்களுக்கான வரிப் பகிர்வும் வரி விதிப்பு அதிகாரமும் இந்தியாவில் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (06-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories