- கேரளத்துக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட, ஒன்றிய அரசு ஏற்படுத்தும் தடைகளை எதிர்க்கவே கேரள முதல்வர் பினரயி விஜயன் புதுதில்லியில் இன்று (பிப்.8) போராட்டம் நடத்துகிறார். வெளிச் சந்தையில் கடன் வாங்க முடியாமல், உச்ச வரம்பை வலியுறுத்துவதன் மூலம் கடுமையான நிதி நெருக்கடியில் கேரள மாநில அரசைத் தள்ளுகிறது ஒன்றிய அரசு என்பது முக்கியமான குற்றச்சாட்டு.
- எந்த வழியிலும் கேரளம் மேற்கொண்டு கடன் வாங்கிவிடாமலிருக்க, ‘நிகர கடன் உச்ச வரம்பு’ (என்பிசி) என்பதை விதித்து, அரசமைப்புச் சட்டத்தின் 293வது பிரிவை மீறுகிறது ஒன்றிய அரசு என்று கேரளம் உச்ச நீதிமன்றத்திடம் வழக்கே தொடுத்துள்ளது. அரசமைப்புச் சட்டம் தொடர்பாக இப்படிப் பரவலாக பல (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்களிலிருந்து எழுந்துள்ள கண்டனக் குரல்கள், பொதுநிதி நிர்வாகத்தில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்பட்டுவரும் பெருங்கேடு எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நிகர கடன் வாங்கலுக்கு தடை என்றால் என்ன
- நிகர கடன் வாங்கலுக்குத் தடை என்றால், வெளிச் சந்தையிலிருந்துகூட மாநிலம் கடன்தொகையைத் திரட்டக் கூடாது என்பதாகும். இதை ‘ஒன்றிய அரசு’ விதிக்கிறது. ‘பொதுக் கணக்கில்’ மாநிலத்துக்கான நிதிப் பொறுப்புத் தொகை முழுவதையும் கூட்டி, அதன் வருவாயிலிருந்து கழித்து ‘நிகர கடன்பெறலுக்கான உச்ச வரம்பை’ (என்பிசி) ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது.
- மாநில அரசுகள் தங்களுடைய செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்குகின்றன. அந்தக் கடனுக்கான அசலில் ஒரு தொகையையும் - வட்டியையும் ஆண்டுதோறும் பொது வரவு - செலவுத் திட்ட அறிக்கை (பட்ஜெட்) மூலம் செலுத்துகிறது அல்லது மாநில அரசுக்கு வரும் வருவாயில் ஏதோவொரு வரித் தொகை, அல்லது கூடுதல் வரித் தொகை (செஸ்) மூலம் இந்தக் கடனை அடைக்கிறது.
- மாநில அரசுத் துறை நிறுவனங்கள் (அரசுக்குச் சொந்தமானவை) வாங்கும் கடனையும், மாநில அரசின் நிதிக் கணக்கில் சேர்த்துவிடும் ஒன்றிய அரசின் செயல்தான் கேரளத்துக்கு இப்போதும் பெரிதும் கோபத்தை ஊட்டியிருக்கிறது. கேரளத்தில் அரசு மேற்கொள்ளும் அடித்தளக் கட்டமைப்பு செலவுகளை, ‘கேரள அடித்தளக் கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்’ (கேஐஐஎஃப்பி) என்ற அரசுத் துறை நிறுவனம்தான் மேற்கொள்கிறது.
- மாநில அரசின் பட்ஜெட் நிதி ஒதுக்கல் மூலம் அல்லாமல், தனியாகத்தான் இதற்கான நிதி திரட்டப்படுகிறது. இந்த வாரியத்தின் கடனையும், மாநில அரசின் நிதிப் பொறுப்பில் சேர்த்துவிடுவதால் மாநில அரசு தர வேண்டிய ஓய்வூதியங்களைத் தர முடியவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுக்கான செலவுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் கேரள அரசு சுட்டிக்காட்டுகிறது.
மாநில நிதியைத் தீர்மானிப்பது
- ஒன்றிய அரசு முன்பு அளித்த கடனுக்காக, மாநிலம் திருப்பித் தர வேண்டிய நிலுவைத் தொகை இருந்தால், புதிதாகக் கடன் வாங்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 293(3)வது பிரிவு கூறுகிறது. இந்தச் சட்டப் பிரிவை அடிப்படையாக வைத்துத்தான், ‘நிகர கடன் பெறலுக்கு; உச்ச வரம்பு விதித்துள்ளது ஒன்றிய அரசு.
- இந்த அம்சத்தைத் தீவிரமாக ஆராய்ந்தால், அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறுவதற்கு அப்பால், வேறு வகையில் (வெளிச் சந்தையில் கடன் திரட்டல் உள்ளிட்ட) வாங்கும் கடனை மாநிலத்தின் கடன் பொறுப்பில் சேர்ப்பது சரியல்ல என்பது புரியும்; அரசமைப்புச் சட்டம் கூறுவதற்கேற்பத்தான் ஒன்றிய அரசு நடந்துகொள்கிறது என்பது ஏற்கும்படியாகவும் இல்லை, இச்சட்டத்துக்குப் பொருந்துவதாகவும் இல்லை.
- பதினைந்தாவது நிதி ஆணையத்தின் வழிகாட்டலின்படி ஒன்றிய அரசு இப்படி உச்ச வரம்பு விதிப்பது சரிதான் என்று நியாயப்படுத்துகிறார் ஒன்றிய நிதியமைச்சர். “அரசு அனைத்து அடுக்குகளிலும் நிதி நிர்வாகத்தில் கடுமையான ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்; வரவு – செலவு நிதிநிலை அறிக்கைக்குப் (பட்ஜெட்) புறம்பாக கடன் வாங்குதல் போன்ற நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும்; இப்படி பட்ஜெட்டுக்கு அப்பால் கடன் வாங்குவது, பொதுநிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நியதிக்கு முரணானது, தொடர்ச்சியான நிதி நிர்வாக மேலாண்மைக்குத் தீமை விளைவிப்பது; ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ அதிகபட்சம் எவ்வளவு கடன் வாங்கலாம் என்று உச்ச வரம்பு அவசியம் என்று நாங்கள் (பதினைந்தாவது நிதி ஆணையம்) பரிந்துரைப்பதற்குக் காரணமே, வெளிப்படையான நிர்வாகம் நிலவ வேண்டும், கண்ணுக்குத் தெரியாத கடன்சுமை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்” என்று ஆணையப் பரிந்துரை கூறுகிறது.
- அரசுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்பையும் மாநில அரசின் கடன் பொறுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆணையம் இதில் பரிந்துரைக்கவில்லை.
- மாநில அரசுகள் பொதுச் சந்தையிலிருந்து கடன் திரட்டுவது தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை, காரணம் ‘மாநிலங்களின் பொதுக் கடன்’ என்பது மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரமுள்ள விஷயங்களின் பட்டியலில் 43வதாக இடம்பெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக சட்டம் இயற்றவும், தீர்மானிக்கவும், அதில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்யவும் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமை இருக்கிறது.
- கேரள அரசு முன்வைக்கும் இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. பொதுக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையை ‘நிகர கடன் உச்ச வரம்பு’க்கு கொண்டுசெல்லக் கூடாது என்பதே அது. அரசமைப்புச் சட்டத்தின் 266(2)வது பிரிவின் அடிப்படையில் கேரளம் இதை வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் வசூலிக்கும் பணம், ‘ஒருங்கிணைந்த நிதித் தொகுப்பில்’ சேராது என்றால், அதை ‘பொதுக் கணக்கின்’ கீழ் கொண்டுவந்துவிடலாம்.
- அரசுகள் விதிக்கும் நேர்முக – மறைமுக வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாயும் இதர வகை வருவாயும் மட்டும்தான் ஒருங்கிணைந்த நிதித் தொகுப்பில் வரும். இவையல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் தொகை பொதுக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுக் கணக்கு சார்ந்த அனைத்தும் மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வரும், ஒன்றிய அரசுக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை. பொதுக் கணக்கிலிருந்து தொகையை நிகர கடன் வரம்புக்குள் மாநிலம் கொண்டுசென்றாலும் ஒன்றிய அரசால் கேள்விக் கேட்க முடியாது என்பதே கேரளத்தின் வாதமாகும்.
மாநில அதிகார வரம்பு
- கேரள சட்டமன்றம், ‘கேரள நிதிப் பொறுப்புச் சட்டம் - 2003’ என்பதை இயற்றியிருக்கிறது. அது கேரளம் தனது செலவுக்கும் வருமானத்துக்கும் இடையிலான பற்றாக்குறை அதிகபட்சம் எந்த அளவுக்குப் போகலாம் என்று அறுதியிட்டு நிர்ணயித்திருக்கிறது. கேரள அரசு தன்னுடைய செலவுக்கும் – வருமானத்துக்கும் இடையிலான பற்றாக்குறையை 2025-26 நிதியாண்டுக்கு மாநிலத்தின் மொத்த ஜிஎஸ்டிபி மதிப்பில் 3% அளவுக்குக் குறைத்தால் போதும் என்கிறது.
- வரவு – செலவு மேலாண்மைக்கும் நிதி நிர்வாக கட்டுப்பாட்டுக்கும் மாநிலச் சட்டமே வகை செய்யும்போது ஒன்றிய அரசு அதை, வெளியிலிருந்து கண்காணிப்பது தேவையற்றது என்பது மாநிலத்தின் வாதம்.
- அரசமைப்புச் சட்டத்தின் 202வது பிரிவின்படி, மாநில அரசின் மொத்த வருவாய் அளவையும், அந்த வருவாய் எந்தெந்த இனங்களில் எவ்வளவு வர வேண்டும் என்பதையும், அதை எந்தெந்த இனங்களுக்கு அல்லது துறைகளுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் அதிகாரமும் பொறுப்பும் மாநில நிதிநிலை அறிக்கை காரணமாக, மாநில அரசுக்கு உரியது. அரசின் வரவு – செலவை எப்படி நிர்வகிப்பது என்பது மாநிலத்தின் விருப்ப அதிகாரத்துக்கு உள்பட்டது.
- நிதி மேலாண்மை என்ற பெயரில், மாநில அரசுக்கும் சட்டமன்றத்துக்கும் உள்ள அதிகாரத்தையும் உரிமைகளையும் நாடாளுமன்றத்திடமோ, ஒன்றிய அரசிடமோ விட்டுவிட முடியாது. உள்ளபடியே பார்த்தாலும், கேரள மாநில அரசின் பொது நிதிப் பற்றாக்குறையானது மாநிலத்தின் ஜிஎஸ்டிபியில் 2.44% மட்டுமே, மாநில அரசின் உத்தேச வருவாய் எதிர்பார்ப்புக்கும் உண்மையில் வசூலான தொகைக்கும் இடையிலான வருவாய் பற்றாக்குறையும் ஜிஎஸ்டிபியில் 0.88% மட்டுமே. 2023-24இல் ஒன்றிய அரசின் பொது நிதிப் பற்றாக்குறையோ 5.8% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- கேரள அடித்தளக் கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கேஐஐஎஃப்பி) என்பது மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்ட மேற்கொள்ளப்பட்ட புதுமையான முயற்சியாகும். மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லாத இன வருவாயை மட்டும் நம்பியிராமல் வேறு இனம் மூலமாகவும் நிதி திரட்டும் தன்னிறைவுக்கான புது முயற்சியாகும். வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவது முக்கியம்; அந்த நடவடிக்கை ஓய்வூதியர்களுக்குச் சேர வேண்டிய தொகையைத் தருவதற்கும், நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் இடையூறாக இருக்க முடியாது.
- கேரள நிதியமைச்சர் சொல்வதைக் கேட்டால், கடன் வாங்க அனுமதி மறுத்தால் அதன் நலவாழ்வு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வருவாய் பற்றாக்குறை தொடர்கதையாக இருக்கும் மாநிலத்தில் இப்படி அனுமதி மறுப்பது பெருங்கேட்டை ஏற்படுத்திவிடும். ‘கூட்டுறவு கூட்டாட்சி முறைமை’ என்பதிலிருந்து ‘அழித்தொழிப்புக் கூட்டாட்சி’யாகவும், ‘நிர்மூலக் கூட்டர’சாகவும் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு உச்சவரம்புகள் மூலம் தடை விதிப்பது ‘அழித்தொழிப்புக் கூட்டரசு’ ஏற்பட்டுவிட்டதையே காட்டுகிறது.
நன்றி: அருஞ்சொல் (08 – 02 – 2024)