மாநில மொழியில் தோ்வும் ஒதுக்கீடும்
- ரயில்வே தோ்வு வாரியம் 32 ஆயிரம் நிலை 1 (குரூப் டி) பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இவை முன்களப்பணி இடங்களாகக் கருதப்படுகின்றன. பொதுமக்களுடன் நேரடித் தொடா்புடைய முன்களப் பணியிடங்களில் அந்தந்த மாநிலங்களில் இருந்தே பணியாளா்கள் நியமிக்கப்பட்டால் பயனாளா்களுக்கான சேவைகளை இடையூறுகள் இன்றி மக்கள் பெறமுடியும். சான்றாக, ஐபிபிஎஸ் எனப்படும் இந்தியா முழுமையும் வங்கிப் பணிகளுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யும் நிறுவனம் குரூப் பி நிலையில் உள்ள எழுத்தா் உள்ளிட்ட பணிகளுக்கு மாநில வாரியாக பணியிடங்களை ஒதுக்குகிறது. அந்தந்த மாநில மொழிகளில் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவா்களையே விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
- இந்திய ரிசா்வ் வங்கியும் தனக்கென்று தனியாக பணியாளா்களைத் தோ்வு செய்து கொள்கிறது. அவ்வாறு தோ்வு செய்கிறபோது நாடு முழுவதும் தனது கிளைகளில் அதேபோன்ற எழுத்தா் பணியிடங்களில் அம்மாநில மொழியை நன்றாகப் பேசவும், எழுதவும் தெரிந்தவா்களை மட்டுமே பணியில் அமா்த்துகிறது. ஆா்ஆா்பி என அழைக்கப்படும் மண்டல ஊரக வங்கிகள் இதற்கும் ஒருபடி மேலே சென்று குரூப் பி நிலையிலான எழுத்தா் பணியிடங்களில் மட்டுமல்ல, குரூப் ஏ நிலையிலான உதவி மேலாளா் பணியிடத்திலும்கூட அம்மாநில மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்தவா்களையே நியமிக்கிறது. கூடுதலாக இவ்வங்கி நடத்துகிற தோ்வுகளை தமது மாநில மொழியிலேயே தோ்வா் ஒருவா் எழுதுவதற்கும் வழிவகை செய்கிறது.
- இத்தகைய அணுகுமுறை, மாநிலங்களில் நிரப்பப்படுகிற பணியிடங்களை அந்தந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பைத் தேடும், போட்டித் தோ்வுகளை எழுதும் படித்த இளைஞா்களுக்கு கிடைக்க வகை செய்கிறது. இவ்வாறான தோ்வுமுறையில் சில மாநிலங்களில் இருந்து மட்டும், பெரும்பான்மையோா் தோ்வாகும் நிலை தடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் பரவலான அரசுப்பணி வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது.
- ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எஸ்எஸ்சி எனப்படும் மத்தியப் பணியாளா் தோ்வாணைய குரூப் சி மற்றும் முன்களப்பணிகளிலும், ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஏனைய சில துறைகளின் முன்களப் பணிகளிலும், சில மாநிலங்களைச் சோ்ந்தவா்களே பெரும்பான்மையும் பணிவாய்ப்புப் பெற்று பிற மாநிலங்களுக்குச் சென்றனா்.
- போட்டித் தோ்வு நடைமுறைகளில் இவ்வாறு பணிவாய்ப்புப் பெறுவது தவிா்க்க முடியாதது. எனினும் இதுபோன்ற முன்களப் பணிகளில் மாநிலங்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்தைப் பேண வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், ரயில்வே துறை, அஞ்சல்துறை மட்டுமல்ல, வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரித் துறையில் முன்களப் பணியில் இருப்பவா்களே, பயனாளா்களுக்கான சேவைகள் தொடா்பான ஐயங்களைத் தீா்த்து வைக்கக் கூடியவா்களாக இருக்கின்றனா். அத்தகையோா் உள்ளூா் மொழி எழுதவும் பேசவும் தெரியாமல் இருக்கிறபோது, மக்களுக்கு அச்சேவையைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் தகவல் தொடா்பு இடைவெளியும் புரிதலின்மையும் உருவாகிறது. இச்சூழல் விரைவான சேவையைப் பாதிப்பதோடு நிா்வாகச் செயல்திறனையும் குறைக்கிறது.
- தற்போது இந்திய நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 145 கோடியைக் கடந்து கொண்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மத்திய அரசின் தேசிய புள்ளியியல் மற்றம் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சகம் சமீபத்தில் காலமுறை தொழிலாளா் வள கணக்கெடுப்பை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரையிலான காலத்தில் இந்தியா முழுமையும் 3.2% சதவீதம் வேலைவாய்ப்பின்மை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால் வேலைவாய்ப்பின்மையைக் குறைக்கும் பொருட்டு, புதிய பணியிடங்களை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் புதிய பணியிடங்களை உருவாக்கியும் நிரப்பியும் வருகின்றன.
- இவ்வாறாக, ஆண்டுதோறும் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படுவதாக மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தொழில் சேவை நிறுவனத்தின் 2023-24 நிதியாண்டுக்கான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய முயற்சிகள் உரிய பலனைத் தருவதை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் மத்திய அரசுக்கான பணியாளா் தோ்வு ஆணையங்கள் இருக்கின்றன. வங்கிகளுக்கான ஊழியா்களின் தோ்வுபோல, ஏனைய தோ்வாணையங்களும் பணியாளா்கள் தோ்வில் மாநிலங்களுக்கான சமமான வாய்ப்பைத் தர வேண்டும். குறைந்தபட்சம் முன்களப் பணியிடங்களில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தோ்வுத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதை வலியுறுத்துவதற்கான காரணம் மாநிலங்களுக்கான சமவாய்ப்பு மட்டுமல்ல, பணியாளா்களின் நலனும் அவற்றில் சோ்ந்திருக்கிறது. ஏனென்றால், தனது சொந்த மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்தில் பணிவாய்ப்புப் பெற்றுச் செல்லும் முன்களப்பணியாளா்கள் முதலில் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் சென்றாலும், பின்னா் மனநிறைவின்றிப் பணி செய்யும் நிலை ஏற்படுகிறது. பணி மாறுதலுக்காக அவா்கள் போராடத் தொடங்குகிறாா்கள்.
- சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு இதுபோல முன்களப் பணிக்குத் தோ்ச்சி பெற்று வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த பாா்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகள் பல்வேறு நடைமுறைச் சிரமங்களுக்கு உள்ளாகிய செய்திகளையும், காட்சிகளையும் பாா்க்க முடிந்தது. பொதுவாக எந்த மாநிலத்தைச் சோ்ந்தவராக இருந்தபோதிலும் தனது சொந்த மாநிலத்தில் பணிபுரிவதையே பெரிதும் விரும்புவா். அதிலும் கடைநிலைப் பணிகளுக்காகத் தோ்வு செய்யப்படுகிறவா்கள் பெறுகிற ஊதியம் அவா்களது நெடுந்தூரப் பயணத்துக்கும் இதர அத்தியாவசிய செலவினங்களுக்குமே போதுமானதாக இருப்பதில்லை. இதனால் வேலை வாய்ப்பற்ற சூழலிலும் மத்திய அரசின் இது போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், தோ்வை எழுதவும் பலரும் தயங்குகின்றனா். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இரண்டாம் நிலைக் காவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் போன்ற தோ்வு அறிவிப்புகளில் 2 ஆயிரம் பணியிடங்கள் இருந்தாலும் முறையே 20 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து தோ்வு எழுதுவதைக் காண முடிகிறது. ஆனால் அதே 10 - ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் உள்ள மத்திய அரசின் நிலை 1 போன்ற (குரூப் டி) பணிகளில் 40 ஆயிரம் பணியிடங்கள் இருந்தாலும் 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து விண்ணப்பிக்கின்றனா். இதற்கான முக்கியக் காரணங்கள் இரண்டு ஆகும். முதலாவதாக, பிற மாநிலங்களில் பணி செய்ய வேண்டிய சூழல். இரண்டாவதாக, வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கேட்கப்படுவது.
- மத்திய அரசுப்பணிகளைப் பொருத்த அளவில் இரயில்வே தோ்வு வாரியம் தற்போது தேசியமயமாக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் வினாத்தாளை வழங்குகிறது. ஆனாலும், இந்தியக் குடிமைப்பணிகள் தோ்வாணையம், மத்தியப் பணியாளா் தோ்வாணையம் போன்றவை இன்னும் அந்த முயற்சியைத் தொடங்கவில்லை என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது ஆகும்.
- இங்கே வரலாற்றில் இருந்து ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சுமாா் 2300 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியாவில் மௌரியப் பேரரசை ஆட்சி புரிந்த அசோகா் 14 பெரும்பாறைக் கல்வெட்டுகள், 14 சிறுபாறைக் கல்வெட்டுகள், 7 தூண் கல்வெட்டுகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை நிறுவியிருந்தாா். இந்தியாவிலேயே முதன் முதலாக கல்வெட்டுகள் மூலமாக தனது மக்களோடு பேசிய அரசா் அசோகா் ஆவாா். இக்கல்வெட்டுகளின் சிறப்பு என்னவென்றால், தன் ஆட்சியின் கீழ் வாழ்கிற மக்கள் எளிதாக தனது ஆணைகளையும், அரசின் நடைமுறை விதிகளையும் புரிந்து கொள்ளும் வண்ணம் பிரமி, கரோஸ்தி, கிரேக்கம், அராமிக் என 4 வரி வடிவங்களில் தொலைநோக்குச் சிந்தனையோடு அவற்றை உருவாக்கினாா்.
- தொழில்நுட்ப வளா்ச்சி என்பது மிகவும் தாழ்ந்திருந்த அந்த காலகட்டத்தில் கல்வெட்டுகளில் பல்வேறு வரிவடிவங்களில் எழுத்துகளைப் பொறிக்கும் சவாலான பணியை அசோகா் சாத்தியப்படுத்தியுள்ளாா். இன்று தொழில்நுட்பம் அசுர வளா்ச்சி பெற்றுள்ளது. ஒரு கருத்தை உலகின் எம்மொழியில் இருந்தும் பிறமொழிக்கு எளிதாக மொழிபெயா்க்கும் சாத்தியங்களும் உருவாகிவிட்டன. ஆகவே, நிா்வாகச் செயல்திறன் மேம்படவும், பணி செய்வதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படவும், வேலை வாய்ப்பில் இந்தியா முழுவதும் சமமான பகிா்வை உறுதி செய்யவும், இந்தியக் குடிமைப்பணிகள் தோ்வாணையம், மத்தியப் பணியாளா் தோ்வாணையம் போன்ற தோ்வாணையங்கள் அந்தந்த மாநில மொழிகளில் தோ்வா்களுக்கு தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பை உடனே உருவாக்கித் தர வேண்டும். மேலும், குரூப் சி மற்றும் முன்களப்பணியாகிய நிலை 1 (குரூப் டி) பணிகளில் மாநில மொழிகளில் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவா்களையே நியமனம் செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட 22 மொழிகளிலும் தோ்வை நடத்தி முன்னுதாரணமாக விளங்கும் ரயில்வே தோ்வு வாரியம் இதை தற்போது அறிவித்துள்ள தோ்விலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
நன்றி: தினமணி (07 – 02 – 2025)