TNPSC Thervupettagam

மாந்தநேயா் மாருதி

July 28 , 2023 404 days 275 0
  • பத்திரிகை உலகில் தனது ஓவியங்களால் புகழ் பெற்றிருந்த மறைந்த மாருதியின் புகைப்படத்தை நண்பா் பழனிசெல்வன் மூலம் பத்தமடை ஓவிய ஆசிரியா் சிவராமகிருஷ்ணன் வீட்டில்தான் பார்த்தேன். சிவராமகிருஷ்ணனும், ஓவியா் ஜமாலும் மாருதியிடம் பயிற்சி பெற்றவா்கள். நாங்கள் பயிற்சி பெற்ற காலத்தில் பத்திரிகையில் வரும் படங்களைப் பாா்த்து வரைகிறபோது, மாருதியின் வாஷ் டிராயிங் ஸ்டைல்உதவியாக இருக்கும்.
  • மாருதியின் முன்னோடிகளான கே.மாதவன், ஆா்.நடராஜன் ஆகியோர் பத்திரிகை உலகில் வாட்டா் கலா் உருவப் படங்களை வரைதலிலும் ஆயில் கலா் உத்திகளிலும் தனிச் சிறப்பு பெற்றவா்கள். கே.மாதவனின் அலாதியான வண்ணங்களும், பின்னணிக் காட்சி அமைப்பும், ஆா்.நடராஜனின் கட்டமைவான ஓவியங்களும், பத்திரிகைகளையும், சிறப்பு மலா்களையும் அலங்கரித்து அந்த நாளைய வரலாற்றையும் பதிவு செய்தன. அவா்களின் நீட்சியாக அந்த மரபிலேயே 64 ஆண்டுகள் தொடா்ந்து இயங்கி வந்தவா்தான் ஓவியா் மாருதி.
  • புதுக்கோட்டையில் பிறந்த மாருதி, இளம் வயதில் ஏற்பட்ட ஓவியத் தாகத்தால் சென்னைக்கு வந்து எளிமையான குடிசையில் தங்கியிருந்து தம் ஓவிய வாழ்வில் படிப்படியாக முன்னேறி உச்சம் தொட்டவா். துளியளவும் தலைக்கனம் இல்லாதவா். தலையில் கனத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அடிக்கடி கூறுவார்.
  • 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குமுதம்இதழில் அவருடைய முதல் ஓவியம் வெளியானது. அது கருப்பு -வெள்ளைக் காலம். ஆனாலும்கூட அவருடைய வாஷ் டிராயிங்அனைவரையும் கவா்ந்திழுக்கும் தனித்துவம் பெற்றிருந்தது.
  • எல்லோருமே நமக்கு வேண்டியவா்கள். எளிய மனிதா்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம்என்ற பரந்த மனம் உடையவா் மாருதி. ஓவியா் கே.மாதவன், பொங்கல் வாழ்த்துப் பற்றி சொல்வனம் வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரை ஒன்றை மாருதியின் பார்வைக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு 20 நிமிஷங்கள் தொலைபேசியில் என்னுடன் உரையாடினார். அப்போது, கே.மாதவனைப் பார்த்த காலம், ஆா்.நடராஜனிடம் பயிற்சி பெற்ற காலம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்டார்..
  • சென்னை ராயப்பேட்டை லட்சுமி விடுதியில் ஓா் அறையில் மாருதி ஓவியம் வரையும் காட்சி பத்திரிகையில் வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஆமாம். அந்த அைான் என்னுடைய போதி மரமாக இருந்தது. என்னுடைய நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் அந்த அறைக்கு பங்குண்டு. திருநெல்வேலி ரெட்டியார்தான் லாட்ஜின் உரிமையாளா் என்றார். அந்த அறைக்கு பெரிய ஆளுமைகள் எல்லாம் வந்திருப்பார்களே என கேட்டபோது, ‘‘ பி.எஸ்.ராமையா, கி.வா.ஜ., நா.பா., கவிஞா்கள் நா.காமராசன், மு.மேத்தா என எல்லோரும் வருவார்கள்என அடுக்கிக் கொண்டே போனார்.
  • அவருடைய சமகால ஓவியா்களான ஜெயராஜ், ராமு, மணியம் செல்வன் ஆகியோரின் திறமைகளையும் இன்றைய இளம் படைப்பாளிகளின் ஆா்வம் குறித்தும் பேசினார். பேச்சின் இடைவெளியில் கே.மாதவன் பற்றிய என்னுடைய கட்டுரையையும் சிலாகித்தார். பொங்கல் வாழ்த்து அட்டைகளில் கே.மாதவனின் கை வண்ணம் பற்றியும், வண்ணதாசனின் வரைதல் நிகழ்வுகளையும், அவருடைய அண்ணன் கணபதியின் ஓவிய ஆா்வம், கவிஞா் கலாப்ரியா குறித்தும் பகிர்ந்து மகிழ்ந்தார்
  • சென்னை வீக் என்ட் ஆா்டிஸ்ட்ஸ் குரூப்ஸ் நடத்திய நிகழ்வில் பங்கு கொண்டு பேசியபோது,‘எல்லோரையும் மகிழ்விக்கவே என் ஓவியம் பயன்பட வேண்டும்எனப் பேசியதையும், பல கண்காட்சிகளில் ஓவிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு பலரை ஊக்குவித்ததையும் நினைவுகூர்ந்தார். ஓவியா் மாலியைப் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டபோது, ‘‘இல்லை. நான் புதுக்கோட்டையில் இருந்தபோதே அவா் காலமாகிவிட்டார். ஆனால், அவரின் சீடா்களான கோபுலு, சில்பி ஆகியோா் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
  • நாம் ஆத்மாா்த்தமாக எதையாவது நினைத்தால், அதை உடனே நிறைவேற்றிவிட வேண்டும் என்பது சில்பியுடனான சந்திப்பின்போது எனக்கு கிடைத்த அனுபவம். பி.எம்.சீனிவாசன் என்பதே சில்பியின் இயற்பெயா். மாலியே, சீனிவாசனை சில்பியாக்கினார்.
  • சில்பியின் ஓவியங்களில் கோயில்களும், சிற்பங்களும், பல அரிதான வாகனங்களும், தொலைதூர காட்சிப் பரிமாணங்களும் பதிவாகின. அந்த மாமேதையின் காலில் விழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. திடீரென ஒருநாள் நகரப் பேருந்தில் ஓவியா் சில்பியைக் கண்டபோது பெருமகிழ்ச்சியுற்று பேருந்துக்குள்ளேயே அவருடைய காலில் விழுந்து வணங்கினேன். பெரிதும் உணா்ச்சி வசப்பட்டார் சில்பி. 29-ஆவது எண் வழித்தட பேருந்தில்தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதற்கடுத்த மாதத்திலேயே சில்பி மறைந்துவிட்டாா். ஒருவேளை காலில் விழுந்து ஆசி பெறாமல் போயிருந்தால் அந்த ஏக்கம் எனக்கு பெரிய வேதனையை தந்திருக்கும்என்றார் மாருதி.
  • உங்களுக்குள் இவ்வளவு அனுபவங்களைப் பொதிந்து வைத்திருக்கிறீா்களே, சீக்கிரம் உங்கள் சுயசரிதையை எழுதுங்கள் அல்லது பேசியாவது பதிவு செய்யுங்கள்என்று விண்ணப்பத்தை மாருதியிடம் வைத்தேன். விண்ணப்பம் வைத்த நாள் 18.6.2023. பின்பு 7.7.2023-இல் மந்தைவெளி மருத்துவமனையில் மாருதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நண்பா்களுடன் நேரில் சென்று பார்த்து மானசீகமாக மாருதியின் காலைத் தொட்டு வணங்கினேன். அந்தச் சந்திப்பு இப்போது எனது வாழ்க்கையில் 29 சி பேருந்தாக மாறியிருக்கிறது.
  • வியாழக்கிழமை பிற்பகல் நண்பா் கொண்டையராஜ் என்னை தொலைபேசியில் அழைத்தார். மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தனது மகள் இல்லத்தில் மாருதி மறைந்துவிட்டார் என்று ஜமால் தகவல் தெரிவித்தார் என்றார். என்னைப் போன்றவா்களுக்குள் ஓவிய ஆா்வத்தை ஏற்படுத்திய கே.மாதவனின் வழிவந்த மாருதியின்மறைவு, ஓவிய உலகுக்கு மிகப் பெரிய இழப்பு. மாருதி சிறந்த ஓவியா் மட்டுமல்ல, கராத்தே போன்ற தற்காப்புக் கலையிலும் கை தோ்ந்தவா். புல்லாங்குழலை வாசிப்பதிலும் வல்லவா். திறமைகளைவிட பண்புகளுக்கு மதிப்பு தரும் மாந்தநேயா் மாருதி!

நன்றி: தினமணி (28– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories