TNPSC Thervupettagam

மானுடம் காக்க, மனநலம் காப்போம்

July 11 , 2024 184 days 248 0
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் இடையே அவர்களின் சமூக மன எழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும், மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபடவும் பள்ளிக் கல்வித் துறையின் நடப்புக் கல்வியாண்டுக்கான பயிற்சித் திட்டம் வரவேற்கத்தக்கது.
  • உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவுகோலின்படி, "ஒரு தனி நபரின் மனநலம் என்பது தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்க்கை போராட்டங்களை தாங்கி முன்னேறுதல், திறம்பட பணியாற்றுதல், சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பை சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்'. ஒருவர் இவை அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் குறைபாடு உள்ளவராக இருப்பின் அவர் மனநலம் குன்றியவர் ஆகிறார்.
  • தம் குடும்ப உறுப்பினர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவதே அவமானம் என்று கருதும் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் உள்ள மனநலம் குன்றியவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்குப் பதிலாக, நிராதரவாக அவர்களைக் கைவிட்டு விடுவதுதான் மிகப் பெரிய சோகம். சென்னை போன்ற பெருநகரங்களில் நெருங்கிய உறவினர்களால் வெளியூர்களிலிருந்து கொண்டுவந்து விடப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் திரிவதை மிக சாதாரணமாகக் காணலாம். மனநலம் பாதிக்கப்பட்டோரை கிண்டல் செய்து தாழ்வாக நடத்தும் மனப்பான்மை இன்றும் நம் சமூகத்தில் பரவலாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
  • ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தன் பதின்ம வயது மகனின் சிகிச்சைக்காக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பணி மாற்றம் வாங்கி வந்த சகப்பணியாளர் ஒருவர், சென்னையில் வாடகை வீடு கிடைப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். காரணம், அவரின் மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் சிலர், ஆட்டிசம் பாதித்தவர் உள்ள குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு கொடுத்தால் அசௌகரியமும், பிரச்னைகளும் ஏற்படக்கூடும் என்ற தேவையற்ற அச்சத்தால் வாடகைக்கு வீடு கொடுக்கத் தயங்கியதுதான்.
  • ஒருவர் தனக்கு மனநல பாதிப்பு உள்ளதை உணரும்போதே அதைத் தனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. மனநல ஆரோக்கியத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதே நம் சமூகத்தில் இழிவாக பார்க்கப்படுவதால், மனநலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை மேற்கொள்ளத் தயங்குகின்றனர். இவ்வாறு மனநலக் குறைபாட்டிற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதிருப்பது, இதர நோய்களைப்போல மனநல பாதிப்பையும் தீவிரமடையவே செய்யும்.
  • நம் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 8 சதவீதத்தினர் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் என்ற மனநலக் குறைபாட்டால், தற்கொலை செய்துகொள்வோரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களே அதிகம் என்பது வேதனைக்குரிய செய்தி. கடந்த 2020-ஆம் ஆண்டில் 12,526 மாணவர்களும், 2021-ஆம் ஆண்டில் 13,089 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல் கூறுகிறது.
  • 2022, 2023-ஆம் ஆண்டுகளில் காவல் துறை தகவலின்படி, முறையே 15 மற்றும் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் 147 மனநல மருத்துவமனைகளே உள்ளன. மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதல்ல.
  • இந்த நிலையை சமாளிக்க, அரசு பொது மருத்துவமனைகளில் மனநல சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெண்டல் ஹெல்த் அசிஸ்டன்ஸ் நெட் வொர்க்கிங் சர்வீஸ் எனும் தொலைபேசி வாயிலாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கும் தொலைநிலை மனநல ஆலோசனைத் திட்டம் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மனநல ஆலோசனைகள் பெற்று பலனடைந்து வருகின்றனர்.
  • மனநலக் குறைவு, மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க , நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில், காவலர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க "மகிழ்ச்சி' என்ற பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் 6 மாதங்களுக்கு முதல் கட்டமாக ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 18,925 பேர் மனநல பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனர். ஆண்டுதோறும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனினும், மக்களிடையே இந்நாள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய், கர்ப்பம், பிரசவம், மாதவிடாய் நிற்றல் போன்ற உடல் சார்ந்த உபாதைகளால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
  • மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார் வள்ளுவர் - உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வத்தைத் தரும். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்வதற்கு மனிதர்கள் மனநலமுடன் இருத்தல் அவசியம். எனவே, பிறர் மனநலனைப் பாதிக்கும் செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபடுவதைத் தவிர்த்து வாழ்வதோடு, மனநலம் பாதிக்கப்பட்டோரிடம் பரிவுடன் நடப்பது மிக அவசியமானது.

நன்றி: தினமணி (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories