TNPSC Thervupettagam

மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்

August 26 , 2024 144 days 163 0

மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்

  • பருவமழை பொய்த்துப் போகும்போதும் வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதபோதும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வேளாண் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எதிா்பாா்ப்புகளும் எழுவதுண்டு. அதே நேரத்தில் விவசாயிகள் வேளாண் சாகுபடி முறையில் மாற்றத்தைக் கையாள வேண்டும் என்ற பேச்சும் எழுவதுண்டு. இது சிந்திக்க வேண்டியதாகும்.
  • கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பருவமழை உரிய காலத்திலோ அல்லது போதுமான அளவிலோ பெய்வதில்லை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நிகழ்ந்தாலும் மழை பொழிவுக்கு ஏற்ப சாகுபடி முறையில் மாற்றத்தைக் கையாளும் மனப்பக்குவம் இந்திய விவசாயிகளிடையே போதிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.
  • நீண்ட காலமாக குறிப்பிட்ட சிலவகையான பயிா்களை மட்டுமே பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். பருவமழை பொய்த்துப் போவதால் நிலத்தடி நீா்மட்டம் குறையும்போது நீா் சிக்கனம் பற்றிய பேச்சு எழுவதுண்டு. அதனால், நீா் தேவை குறைவாக உள்ள மாற்றுப் பயிா்களைப் பயிரிடவும், சொட்டுநீா் பாசன முறையைப் பின்பற்றவும் வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்குவதும் உண்டு.
  • ஆனால், சாகுபடி முறையில் மாற்றம், தண்ணீா் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் போன்றவற்றில் நம் விவசாயிகளிடையே போதிய விழிப்புணா்வு இல்லை. சாகுபடி முறையில் மாற்றம் ஏற்படாததற்கு தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்குப் போதுமான சந்தை வசதிகள் இல்லாததுதான் முக்கிய காரணமாகும். இதனால் வேளாண் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனா். இதன் தொடா்ச்சியாக வழக்கமான பயிா்களை சாகுபடி செய்யும்போது உற்பத்தி செலவு அதிகரிப்பதுடன் போதுமான விளைச்சலோ அல்லது விலையோ இல்லாதபோது இழப்பை எதிா்கொள்கின்றனா். போதிய சந்தை வசதிகள் இல்லாத காரணத்தால் தொடா்ந்தோ அல்லது புதிதாகவோ வேளாண் தொழிலில் ஈடுபடுவோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • பருவநிலை மாற்றத்தை தாங்கி வளா்ந்து அதிக மகசூல் தரக்கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்களின் 32 ரகங்கள் வெளியிடப்படும் எனவும், இயற்கை வேளாண்மைக்குத் தேவை அடிப்படையில் 10 ஆயிரம் உயிரி இடுபொருட்கள் மையங்கள் உருவாக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் மையங்களுக்கு அருகில் பெரிய அளவிலான தொகுப்பு வளாகங்கள் உருவாக்கப்படும் என்றும் காய்கறிகளை கொள்முதல் செய்தல் சேமிப்பு சந்தைப்படுத்துவதற்கு உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • அதன்படி வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் 34 வயல் பயிா்கள், 27 தோட்டப் பயிா்கள் உட்பட உயிரி செறிவூட்டப்பட்ட 109 புதிய பயிா் ரகங்கள் உருவாக்கப்பட்டு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் மக்கள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் இயற்கை வேளாண்மை மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டாா். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் புதிய ரகங்களின் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் விவசாய அறிவியல் மையங்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
  • வேளாண் திட்டங்களைப் பொறுத்தவரையில் வேளாண் கடனுதவி, வேளாண் கடன் தள்ளுபடி மான்ய விலையில் விதைபொருட்கள் விநியோகம் போன்றவை ஏற்படுத்தும் தாக்கம் போன்று இதர திட்டங்கள், அறிவிப்புகள் விவசாயிகளிடையே மாற்றத்ததையோ அல்லது ஆா்வத்தையோ ஏற்படுத்துவதில்லை. இதற்கு விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வு இல்லை என்பதைக் காட்டிலும் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் தொடா்பான அனைத்து திட்டங்களும் அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதில்லை என்று கூற வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை தொடா்பான திட்டங்கள், அறிவிப்புகள், விழிப்புணா்வு நடவடிக்கைகள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்போதுதான் அத்திட்டங்கள் எதிா்பாா்த்த பலனைத் தருவதாக அமையும்.
  • தொன்றுதொட்டு குறிப்பிட்ட சில வகையான பயிா்களை மட்டுமே சாகுபடி செய்யும் விவசாயிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினமான ஒன்றாகும். இதற்கு விவசாயிகளின் பொருளாதாரச் சூழலே காரணம். விளைவிக்கும் பொருட்களை கூடுதல் விலை கிடைக்கும் வரையில் இருப்பு வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு வசதி இல்லாததுடன், அதற்கு பொருளாதாரச் சூழலும் இடமளிப்பதில்லை.
  • சில வேளாண் பொருட்கள் பண்டிகை மற்றும் விழாக் காலங்களின்போது கூடுதலான விலைக்கு விற்பனையாவதும் சில நேரங்களில் அறுவடைச் செலவுக்குக் கூட கட்டுப்படியாகாமல் போதிய விலையின்றி அறுவடை செய்யப்படாமல் விடுவதும் உண்டு.
  • குறிப்பிட்ட சில காய்கறிகளின் விளைச்சல் அதிக அளவில் இருக்கும்போது அவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் அதற்கான பகுதிகளைக் கண்டறிந்து குளிா்சாதன கிடங்கு வசதி, சந்தை வசதிகள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும் வகையில் விவசாயிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதன் மூலமே அரசின் செயல்பாடுகளை ஏற்கும் வகையான மனப்பக்குவம் விவசாயிகளிடையே உருவாகும்.

நன்றி: தினமணி (26 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories