TNPSC Thervupettagam

மாற்றப்படும் குரங்குகளின் உணவுப் பழக்கம்

October 7 , 2023 462 days 318 0
  • சிறிது நேரப் பொழுதுபோக்குக்காகக் காட்டுயிர்களின் இயல்புகளை மாற்றியமைக்கும் விபரீதச் செயல்பாடுகளில் மனிதர்கள் இன்று அதிகம் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவற்றை ஒளிப்படமாக்குவதும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் களிப்பதும் நவீன நாகரிகமாகக் கருதப்படும் போக்கு அதிகரித்துவருகிறது.
  • ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற வளர்ப்பு உயிரினங்களே மனிதனோடு இயைந்து வாழும் இயல்புடையன. ஆனால், இயல்பாகத் தம் போக்கில் வாழக்கூடிய பறவைகள், பாம்பு, குரங்கு போன்ற உயிரினங்களின் இயல்பை மாற்றுவதால், அவை இயல்பாகக் கொண்டுள்ள சுதந்திரத்தை இழக்கின்றன. அவற்றால் மனிதர்களுக்குச் சில நேரம் மறைமுகமாக ஆபத்துகளும் ஒவ்வாமைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • காடுகளும் குரங்குகளும்: காடுகளில் சுதந்திரமாக வாழும் குரங்குகள் எப்போதும் மரங்களில் தாவி ஓடியாடிக் கொண்டிருக்கும். அவை பழங்கள், காய்கள், கிழங்குகள், இலைகள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. சிலவேளைகளில் சிறிய பூச்சிகளும் விலங்குகளும்கூட அவற்றின் பசிக்கு இரையாகும்.
  • எனவேதான், தங்கள் உணவுக்கான வாய்ப்பு அதிகமுள்ள காடுகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. மலைப்பாங்கான இடங்களில் உள்ள குளிர்ச்சியான சூழல், இவற்றின் விருப்பமான வாழிடங்கள். குரங்குகளின் இயற்கையான பழக்கவழக்கங்கள் மனிதச் செயல்பாடுகளால் இன்று மாற்றத்துக்குள்ளாவது வருந்தத்தக்கது.
  • சுற்றுலாவுக்காக மக்கள் காடுகளையும் மலைப்பாங்கான இடங்களையுமே இன்று அதிகம் விரும்புகின்றனர். அதே நேரம், அவ்விடங்களில் வாழும் குரங்குகள் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற விரும்புவதில்லை. குரங்குகளை மனிதர்கள் ஆவலோடு வேடிக்கைப் பார்க்கின்றனர். டார்வினின் கொள்கைப்படி குரங்குக்கும் நமக்கும் ஒரே மூதாதை எனப் பார்ப்பவர்கள் ஒருசாரர் என்றால், சமய நம்பிக்கையாளர்கள் குரங்குகளைக் கடவுளரின் சாயலாகப் பார்க்கின்றனர்.
  • குரங்குகள் மனிதர்களுக்குப் பெரியளவில் தீங்கு விளைவிக்காத சுபாவம் கொண்டவை. சுற்றுலாத் தலங்களில் குரங்குகளைப் பயமின்றி உற்சாகம் பொங்க வேடிக்கைப் பார்ப்பவர்கள், உணவுப் பொருள்களைக் குரங்குகளுக்குக் கொடுத்து மகிழ்கின்றனர். ஆரம்பத்தில் பழங்களையும் காய்களையும் பெற்று மகிழ்ந்த குரங்குகள் இன்று கேக், பர்கர், சிப்ஸ், குளிர்பானங்கள் வரை விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டன.

முரண்பாடுகள்

  • கடந்த மே மாதம் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது நேர்ந்த அனுபவம் இது. மேட்டுப்பாளையத்துக்கும் கோத்தகிரிக்கும் இடைபட்ட பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசிப்பதும் இளைப்பாறுவதுமாக இருந்தனர்.
  • வழக்கம்போல் குரங்குகளும் உணவுக்காக அங்கு கூடின. சாலை வளைவில் ஒரு நபர் தன் கையிலிருந்த குளிர்பானத்தைத் திறந்து அங்கிருந்த குரங்குகளின் அருகில் சென்று நீட்டினார். அவை அதனைப் பெற்றுக்கொள்ள கையை நீட்டியபோது, அவற்றின் வாயில் பானத்தை ஊற்றுவதைப் போல பாவனை செய்தார்.
  • குரங்குகளும் அதைக் குடிப்பதற்காக வாயைத் திறந்தன. அங்கு நின்றிருந்த அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு அதை ரசித்து, திறன்பேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். ‘காட்டு விலங்குகளுக்கு உங்களது உணவை அளிக்காதீர், அவற்றின் உணவுப் பழக்கத்தை மாற்றாதீர்; அவற்றுக்குத் தேவையான உணவு ‘காடுகளுக்குள்ளேயே உள்ளன' என்று அந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த தகவல் பலகை மக்களின் கவனத்தைக் கோரி நின்றுகொண்டிருந்தது.

தேட மறந்த குரங்குகள்

  • விலங்குகளின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதால் அவை வாழும் சுற்றுப்புறத்தின் மொத்த சமநிலையிலும் சலனம் ஏற்பட்டு பிற உயிரினங்களும் அதனால் பாதிப்படைகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • குரங்குகள் இவ்வாறு மாறுபட்ட சுவையுடைய உணவுக்காகக் காடுகளிலிருந்து வெளியேறி சாலையோரங்களில், மக்கள் கூடும் இடங்களுக்கு வந்து வாழத் தொடங்குகின்றன. அவை தங்களது இயல்பான உணவுத் தேடலை மறந்து, மனித உணவையே எதிர்நோக்கி நிற்கப் பழகிவிட்டன. அவை கிடைக்காத சூழலில் அங்குள்ள கடைகள்/ வீடுகளுக்குள் புகுந்து உணவை எடுத்துச்செல்லத் துணிகின்றன.
  • இந்நிலை ஆண்டாண்டு காலமாகத் தொடர்வதால் அவற்றின் பழக்கவழக்கங்கள் நிரந்தரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்ல காடுகளில் வாழும் தாவர இனங்களும் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

தடைபடும் அம்சங்கள்

  • பொதுவாகக் கனிகள் நிறைந்த மரங்களைத் தேடி குரங்குகள் இடம்பெயர்ந்துச் செல்லக்கூடியவை. பெரிய அளவிலான பழங்களை விரல்களால் தட்டிப்பார்த்து அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்தே, அவை பழுத்துவிட்டனவா என்பதை அறியக்கூடியவை. பழங்களை உண்டு தேவைக்கு அதிகமானவற்றைத் தூரமாக எறிந்துவிடும் குணமுடையவை.
  • அவ்வாறு கீழே விழும் பழங்களை, பறவைகளும் மற்ற எண்ணற்ற உயிரினங்களும் உண்டு உயிர்வாழுகின்றன. குரங்குகளின் உணவு மாற்றத்தால் இந்நிலை பெருமளவு தடைபடுகிறது. விதைகளோடு பழங்களை உண்டு அவற்றைக் கழிவாக வெளியேற்றும் குரங்குகளால் காடுகளில் விதைப்பரவல் ஏற்படுவதும் தடைப்பட்டு, தாவரப் பரவல் தடைபடுகிறது.
  • உயிரினங்களை வேட்டையாடும் இயல்புடைய இரைகொல்லி விலங்குகளை உயரமான மரங்களில் இருந்து தொலைவிலேயே கண்டு, தனது இனத்துக்கு ஒருவித எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தும் இயல்புடையன குரங்குகள். இதனால் உடன் இருக்கும் மற்றஉயிரினங்களும் அதை உணர்ந்துகொண்டுதற்காத்துக் கொள்கின்றன. இத்தகைய நிலைமை குரங்குகளின் இடப்பெயர்வால் மாற்றமடைகிறது.

புரிந்து கொள்வோமா? 

  • அத்தோடு, மக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு ஆண்டின் ஏதோவொரு குறிப்பிட்ட மாதத்தில்தான் வருகின்றனர். இதனால் மற்ற மாதத்தில் அவ்விடங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடித்தான் கிடக்கின்றன. ஆனால், மனிதர்களின் நாள் கணக்கையெல்லாம் அறியாத குரங்குகளோ எப்போதும்போல அவர்களது வரவையே எதிர்பார்க்கின்றன. தனது இரை தேடும் இயல்பை மறந்து சாலையோரங்களில் நடமாடுகின்றன. இதற்கு மனிதர்களது அறியாமையும் மனிதர்களால் தவறாக ஏற்படுத்தப்பட்ட பழக்கமுமே காரணமாகிவருகிறது.
  • சுற்றுச்சூழலை நேசிப்பது என்பது இவ்வாறான தற்காலிக மகிழ்ச்சியை விலங்குகளுக்கு அளித்து, அவற்றின் இயற்கையான சுபாவத்தை மாற்றுவதல்ல என்கிற அறிவார்ந்த எண்ண மாற்றம் நம்மிடையே பரவலாக வேண்டும். இயற்கையின் மீதான மனித இனம் ஏற்படுத்தும் முரண்பாடுகள் நம்முடைய வாழ்க்கை முறையைச் சீரமைக்க முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற முன்னறிதல் அவசியமானது!
  • நன்றி: இந்து தமிழ் திசை (07 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories