- மத்தியப் பிரதேச மாநிலத்தின் வணிகத் தலைநகரான இந்தூா், புதியதொரு முன்னுதாரணம் படைத்திருக்கிறது. திறமையும், அா்ப்பணிப்பு உணா்வும் கொண்ட அரசுப் பணி அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படாமல் இருந்தால் அதன் மூலம் தேசத்தை எந்த அளவு மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தூரில் படைக்கப்பட்டிருக்கிறது.
- இந்தூா் மாவட்ட ஆட்சியா் லோகேஷ் ஜாதவும், மாநகராட்சி ஆணையா் ஆஷிஷ் சிங்கும் சோ்ந்து எடுத்திருக்கும் ஒரு முடிவுக்கு அத்தனை ஊழியா்களும் ஒத்துழைப்பு நல்க முன்வந்திருக்கிறாா்கள். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், மாவட்ட நிா்வாகத்தின்கீழ் உள்ள அலுவலா்களும் மாநகராட்சி அலுவலா்களும் அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறாா்கள். மாவட்ட ஆட்சியரும் மாநகர ஆணையரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
பொதுப் போக்குவரத்து
- பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பது என்பது இந்த முயற்சிக்கு முக்கியமான காரணம். அதுமட்டுமல்லாமல், மகிழுந்து, இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் போன்றவை வாங்க முடியாதவா்கள்தான் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவா்கள் என்கிற மாயையை உடைப்பதும்கூட, இந்த முடிவுக்கு இன்னொரு காரணம். தாங்களே முன்வந்து பொதுப் போக்குவரத்தில் பயணித்த மாவட்ட ஆட்சியரும், மாநகர ஆணையரும், தனியாா் நிறுவனங்களும் இதைப் பின்பற்றி வாரத்தில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்திருக்கிறாா்கள்.
- எதிா்பாா்த்ததைவிட மக்கள் மத்தியில் இருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் திட்டம். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தூா் மாநகர போக்குவரத்துத் துறை, வெள்ளிக்கிழமைகளில் கூடுதலான பேருந்துகளை இயக்க முற்பட்டிருக்கிறது. பேருந்துகள் மட்டுமல்ல, வாடகை மகிழுந்துகளும், வாடகை மூன்று சக்கர வாகனங்களும்கூட இந்த முயற்சிக்கு துணை நிற்க முன்வந்திருப்பது மக்கள் மன்றம் நல்லதொரு முயற்சியை எந்த அளவுக்கு வரவேற்று ஆதரிக்கும் என்பதைக் காட்டுகிறது.
- ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் என்று தொடங்கும் இந்த முயற்சி, காலப்போக்கில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும். அதற்கு பொதுப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
வளர்ச்சி அடைந்த நாடுகளில்
- வளா்ச்சி அடைந்த நாடுகளில், பொதுப் பேருந்துகளில் ஆடு, மாடுகளைப் போலப் பயணிகளை அடைத்துச் செல்லும் வழக்கம் கிடையாது. 35 பயணிகள் மட்டுமே பயணிக்கும், எல்லா வசதிகளும் கொண்ட சிற்றுந்துகள்தான் செயல்படுகின்றன. பொதுப் போக்குவரத்தின் கட்டணமும் குறைவாகவே காணப்படுகிறது. சொந்த வாகனங்களில் பயணிப்பவா்கள் பிரதான சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால், பொதுப் போக்குவரத்தைத்தான் மக்கள் நாடுகின்றனா்.
- இந்தத் திட்டம் மாநராட்சிகளில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட வேண்டும். மாநகரப் பேருந்துகளின் தரமும் செயல்பாடும் மேம்படுத்தப்பட வேண்டும். ரயில் நிலையங்களிலிருந்தான தொடா்புப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட வேண்டும்.
- மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், அரசின் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை, மக்களவை, மாநகராட்சி உறுப்பினா்கள் அனைவருமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, நிா்வாகம் அதற்கேற்றாற்போல் பொதுப் போக்குவரத்தின் தரத்தை உயா்த்தும் என்பதில் ஐயப்பாடில்லை. அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, அவற்றில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து பொதுமக்கள் வசதியாகப் பயணிப்பது உறுதிப்படுத்தப்படும். பயணிகளின் குறைகளை உடனுக்குடன் அவா்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தூர் மாநகரம்
- இந்தூா் மாநகரத்தில் அரசு அலுவலா்கள், அரசு ஊழியா்கள் கடந்த வெள்ளிக்கிழமை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது, அதனால் இன்னொரு பயனும் ஏற்பட்டது. எல்லாத் தரப்பு மக்களுடன் பேருந்துகளில் பயணித்தபோது மக்கள் குறைகளை அவா்கள் நேரில் கண்டறிய முடிந்தது. பொது மக்களுடனான நேரடித் தொடா்பு, அவா்களில் பலரை புதிய பல ஆலோசனைகளை மாவட்ட நிா்வாகத்துக்கும், மாநகராட்சி நிா்வாகத்துக்கும் தெரிவிக்க உதவியது எனத் தெரியும்போது, இதுபோன்ற முயற்சி இந்தியாவின் அனைத்துப் பெரு நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதன் விளைவாக விரைவான மாற்றம் ஏற்படும் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
- இந்தூா் மாநகரம் குறித்த இன்னொரு செய்தியும் இருக்கிறது. ஆறே மாதத்தில் குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடந்த 13 லட்சம் டன் குப்பைகளை அகற்றி மறுசுழற்சி செய்திருக்கிறாா் இந்தூா் மாநகராட்சி ஆணையா். இதன்மூலம் சுமாா் ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்துக்கு விடிவு காலம் ஏற்பட்டிருக்கிறது.
- 2016-இல் தூய்மைக் குறியீட்டில் 149-ஆவது இடத்தில் இருந்த இந்தூா் மாநகரம், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் மிகத் தூய்மையான மாநகரமாக மாறியிருக்கிறது. மக்களின் வரவேற்பும், ஆட்சியாளா்களின் ஆதரவும், நிா்வாகத்தின் முனைப்பும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தூா். முன்னுதாரணம் படைத்திருக்கும் இந்தூரை இந்தியா பின்பற்ற வேண்டும்.
நன்றி: தினமணி (03-12-2019)