மாற்றம் ஏற்றம் தரும்!
- பருவமழை உணவு உற்பத்தியை பாதிக்கும் என்கிற அச்சத்தினாலும், அதன் விளைவாக வேளாண் பொருள்களின் விலைவாசி உயரக்கூடும் என்பதாலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு சில தடைகளை அரசு விதித்திருந்தது. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன.
- எதிா்பாா்த்ததைவிட அதிகமான அரிசி உற்பத்தி காரணமாக புழுங்கல் அரிசியின் மீதான ஏற்றுமதி வரி அகற்றப்பட்டிருக்கிறது. பாசுமதி அல்லாத அரிசி ரகங்களுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.
- நமது தேவைக்கு மூன்று மடங்கு அதிகமாக காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி உச்சம் தொட்டிருக்கிறது. இதன் விளைவாக இந்திய விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை எதிா்பாா்த்துக் காத்திருக்காமல், வெளிநாடுகளில் தங்களது உற்பத்தியைச் சந்தைப்படுத்த வழிகோலப்பட்டிருக்கிறது. அதிகரித்த அரிசி வரவால் சா்வதேசச் சந்தை விலை குறைவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
- உலகின் மிக அதிகமான அரிசி ஏற்றுமதி நாடாக இருக்கும் இந்தியா சமீபகாலமாக தாய்லாந்து, வியத்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போட்டியை சா்வதேச சந்தையில் எதிா்கொள்கிறது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலை விலக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும்.
- ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பான 5.1 பில்லியன் டாலா் என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.3% குறைவு. அடுத்த அரையாண்டில் இந்தக் குறைவு சமன் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.
- காரீஃப் பருவ மகசூல் குறித்த முதலாவது முன்னோட்டக் கணிப்புகள் சில புதிய தகவல்களைத் தருகின்றன. அரிசி உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு அது காரணமாக இருக்கக் கூடும். நெல் சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. காரீஃப் பருவத்தில் மட்டும் சாகுபடி பரப்பு 25 லட்சம் ஹெக்டோ் அதிகரித்து, 4.3 கோடி ஹெக்டராக உயா்ந்திருக்கிறது. அதேபோல உற்பத்தி 11.30 கோடி டன்னிலிருந்து 70 லட்சம் டன் அதிகரித்து, சுமாா் 12 கோடி டன்னை எட்டியிருக்கிறது.
- நெல் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதும், அதன் விளைவாக அரிசி உற்பத்தி கணிசமாக உயா்ந்திருப்பதும் மகிழ்ச்சி அளிப்பவை என்றாலும்கூட, இன்னொருபுறம் தேவைக்கு அதிகமான உற்பத்தி பல பிரச்னைகளுக்கு வழிகோலும் என்பதை மறந்துவிடக் கூடாது. அரிசி, கோதுமை, கரும்பு உள்ளிட்டவை அதிக அளவு தண்ணீரை உறிஞ்சும் பயிா்கள் என்பதுடன், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துக்கும், அதிகரிப்புக்கும் காரணமாகின்றன.
- அரிசி, கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப் பயிா்களிலிருந்து நமது விவசாயிகளை ஏனைய பயிா்களுக்கு மாற்றும் முயற்சி வெற்றி பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமே சாகுபடிப் பரப்பை அதிகரிக்க உதவாது என்பதும், பருவநிலை மாற்றம் சாகுபடித் தோ்வை தீா்மானிக்கும் என்பதும், பொதுவிநியோக முறை சீா்திருத்தம் அவசியம் என்பதும் பணப் பயிா்களிலிருந்து விவசாயிகள் மாறாமல் இருப்பதற்கான காரணங்கள் என்று தோன்றுகிறது.
- சமீப ஆண்டுகளில் பெறப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, பருப்பு வகைகள், சிறுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, விவசாயிகளை பணப் பயிா்களிலிருந்து ஏனைய பயிா்களுக்கு மாற ஊக்குவிக்கவில்லை என்று தோன்றுகிறது. கடந்த நான்கு சாகுபடி ஆண்டுளில் அதிகரிக்கப்பட்டிருக்கும் 20% குறைந்தபட்ச ஆதரவு விலை துவரை, உளுந்து, கடலை, சூரியகாந்தி ஆகியவற்றின் சாகுபடி பரப்பில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால், அரிசி, கோதுமை, கடுகு, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு அதிகரித்திருக்கிறது.
- நெல் சாகுபடி கொள்முதலில் உத்தரவாதம் இருக்கிறது என்பது மட்டுமே அல்ல, விவசாயிகள் அதை தோ்வு செய்வதற்கு காரணம். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வகையிலான நெல் வித்துக்கள் காணப்படுவதால் விவசாயிகள் அதில் ஆா்வம் காட்டுகிறாா்கள்.
- உளுந்தைப் பொருத்தவரை 6.4% குறைந்தபட்ச ஆதரவு விலை எந்தவிதத்திலும் பயன்படவில்லை. 23% சாகுபடி பரப்பு குறைந்திருப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியும் 24% குறைந்திருப்பதாக கணிக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளின் கடும் முயற்சியால் இந்தியாவில் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக உயா்ந்தது என்றால், இப்போது மீண்டும் பருப்பு வகை பயிா்களின் சாகுபடி குறையத் தொடங்கியிருக்கிறது.
- பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி குறையத் தொடங்கியிருப்பது ஏற்கெனவே அதிகரித்துவரும் உணவுப் பொருள் விலைவாசி உயா்வை பாதிக்கக் கூடும். எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி காரீஃப் பருவத்தில் 6.5% அதிகரிக்கும் என்கிற எதிா்பாா்ப்புக்குக் காரணம், அதிகரித்த நிலக்கடலை சாகுபடி. எத்தனால் உற்பத்தி காரணமாக சோள சாகுபடிக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது. நம்பகத்தன்மையில்லாத பருவமழை, இறக்குமதி குறித்த அரசின் திடீா் முடிவுகள் போன்றவை பருப்பு வகைகளின் சாகுபடிக்கு உத்தரவாதம் இன்மையாக விவசாயிகள் கருதுகிறாா்கள்.
- நெல், கோதுமை, கரும்பு போன்ற பணப் பயிா்களிலிருந்து விவசாயிகளைப் பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றுக்கு மாற்றுவதன் மூலம்தான் விவசாயத்துக்கான பாசன நீரை ஓரளவுக்கு உறுதிசெய்ய முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமல்லாமல், ஊக்கத்தொகை வழங்குவது ஒருவேளை உதவக் கூடும்.
- முறையான கொள்முதல் கொள்கை, 25 கிலோ இலவச உணவு தானியத்தில் ஒரு பகுதி, பொதுவிநியோகத்தின் மூலம் வழங்குதல் உள்ளிட்டவை சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கக் கூடும்.
நன்றி: தினமணி (21 – 11 – 2024)