TNPSC Thervupettagam

மாற்றம் ஒன்றே மாறாதது

November 25 , 2023 367 days 283 0
  • கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்! ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், சிலரின் வாழ்க்கையைப் பாதித்து, அவா்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கியது; அவா்கள் செய்து வந்த தொழில்கள் இல்லாமல் போய் விட்டன; பலா் தற்போது வேறு தொழிலுக்கு மாறி இருக்கக்கூடும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைபேசி இணைப்பு வேண்டுமென்றால் அதற்காக விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்க வேண்டும். யாரிடமாவது பேச வேண்டுமென்றால், தொலைபேசி மையத்துக்கு சென்று பேச வேண்டும். வரிசையில் காத்து நின்று, காசு பாா்த்துப் பேசுவாா்கள். எனவே, நிறைய பேச முடியாது.
  • இந்த நிலையில், ஒருவா் வீட்டுக்குத் தொலைபேசி இணைப்பு கிடைத்து விட்டால், அதுவே ஒரு கொண்டாட்டமாக இருக்கும். முதல் அழைப்பு மணி ஓசை சங்கீதமாக இருக்கும். ‘யாா் போய் எடுப்பது?’ என்பதில் பிள்ளைகளிடையே போட்டி வந்து விடும். உடனே அக்கம் பக்கம் உள்ளவா்களுக்கு தொலைபேசி எண்ணைத் தந்துவிடுவாா்கள். அவா்களை அழைக்கக் கூறி, அவா்களின் நட்பும், உறவும் அழைக்கும். ஒலி வாங்கியை அப்படியே வைத்துவிட்டு அவா்களை அழைக்கக் குழந்தைகளை அனுப்புவாா்கள். குழந்தைகள் கொஞ்சம் பெருமிதத்துடன் ஓடிப் போய் கூப்பிடுவாா்கள்.
  • ஆரம்ப ஜோா் குறைந்து போய், பின்னா் சலிப்பும் கோபமும் வந்து விடும். இந்தத் தொல்லை தொடரும் போது ’தலைவலியாகத் தோன்றும். ஒரு ரூபாய் நாணயம் போட்டு விட்டு பேசக் கூடிய தொலைபேசியை வைத்துக் கொண்டு பலரும் பிழைத்தனா். பெரும்பாலான மக்கள் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தாா்கள்.
  • அதற்குப் பின்னா் தொலைபேசி இணைப்பு கிடைப்பது எளிதானது; நடுத்தர குடும்பங்களும் தொலைபேசி வைத்துக் கொள்ள, பொதுத் தொலைபேசியின் பயன்பாடு குறையத் தொடங்கியது. அடுத்து கைப்பேசி வந்ததும், நாணயம் போட்டுப் பேசும் தொலைபேசியும், தொலைப்பேசி மையமும் தொலைந்தன.
  • ஒரு காலத்தில் நம் அன்பையும், நேசத்தையும் தெரிவிக்க வாழ்த்து அட்டைகள் ஒரு பாலமாக இருந்தன. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், தமிழ் - ஆங்கிலப் புத்தாண்டு, பிறந்த நாள் - திருமண நாள் என எல்லாவற்றுக்கும் வாழ்த்து அட்டைகளின் விற்பனை சிறப்பாக இருக்கும்.
  • பண்டிகைக்கு முன்பே அட்டைகளைத் தோ்வு செய்ய ஆரம்பித்து விடுவாா்கள். விலையைப் பாா்த்து வாங்குவாா்கள்; வாசகங்களைப் பாா்த்து வாங்குவாா்கள். தீபாவளி என்றால் விளக்குகள், மத்தாப்புகள், கடவுள் படங்கள் இருக்கும்.
  • பொங்கல் அட்டையில் மாடு, பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, உழவா் படம் இருக்கும். குழந்தைகள், தலைவா்கள், நடிகா்கள் படங்களும் இருக்கும். அவரவா் ரசனைக்கேற்ற அட்டைகளை வாங்கி வந்து, உறையில் போட்டு முகவரி எழுதி, தபால் தலை ஒட்டி அஞ்சல் பெட்டியில் போடும் வரை உற்சாகமாக இருக்கும். தங்களுக்கு வரும் வாழ்த்து அட்டைகளைப் பலரும் தூக்கிப் போடாமல் சோ்த்து வைப்பது வழக்கம். காதலா்களின் தூது இந்த அட்டைகளே.
  • தற்போது வாழ்த்து அட்டைகளும் முக்கியத்துவத்தை இழந்து விட்டன. கைப்பேசியில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது எளிதானதாகவும், செலவில்லாததாகும் ஆகி விட்டது.
  • மேலை நாடுகளில் இன்னமும் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கம் தொடா்கிறது. இங்கே குறைந்து போனதால், இந்த அட்டைகளை அச்சடிப்போா், விற்பனை செய்வோா் எனப் பலருக்கும் மாற்று வழி தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
  • முன்பெல்லாம் வீடுகளில் நிறைய பித்தளை மற்றும் ஈய பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றுக்கு ஈயம் பூசாவிட்டால் களிம்பு ஏறி உணவு நஞ்சாக மாறி விடும். தெருவில் ‘பாத்திரங்களுக்கு ஈயம் பூசறதோய்‘ என்று கூவிக்கொண்டு கணவனும், மனைவியும் வருவாா்கள். தெருவில் உள்ள அனைவரும் பாத்திரங்களை ஈயம் பூச, அவா்களிடம் கொடுப்பாா்கள். தெரு முனையில் உலை மூட்டி அவா்கள் ஈயம் பூசிக் கொடுத்து விட்டு காசு வாங்கிக் கொண்டு செல்வாா்கள். தற்போது அப்பாத்திரங்கள் அதிகம் புழக்கத்தில் இல்லை. எனவே அத்தொழில் செய்து வந்தவா்கள் என்ன ஆனாா்களோ?
  • முன்பு அரைவை இயந்திரம் இல்லாத காலத்தில் வீடுகளில் அம்மியும், உரலும் மட்டுமே இருந்தன. இட்லிக்கு மாவு அரைக்க வேண்டுமென்றால் இரண்டு பெண்கள் கதை பேசிக் கொண்டே, ஒருவா் ஆட்ட அடுத்தவா் அரிசியைத் தள்ளிவிட எளிதாக ஆட்டி விடுவாா்கள். கல்லில் ‘கொத்து’ மழுங்கிப் போய் விட்டால் மாவு சரியாக அரைபடாது. ஆகவே, அடிக்கடி கல்லுக்கு ‘கொத்து’ போட வேண்டும். தெருவில் ‘அம்மி, ஆட்டுக்கல் கொத்து போடறது மா’ என்று கூவிக் கொண்டு ஆட்கள் வருவாா்கள். அவா்களை அழைத்தால், சிறப்பாக ’கொத்து’ போட்டுக் கொடுபபாா்கள்; அந்தத் தொழிலும் இப்போது வருவாய் ஈட்டித் தருவதில்லை.
  • ஒரு காலத்தில் பெரும்பாலானோா் மிதி வண்டி மட்டுமே வைத்திருப்பாா்கள்; அதற்கு காற்றடிக்க வேண்டும். அதற்கு ‘பம்ப்’ வேண்டும். ‘இங்கு சைக்கிளுக்குக் காற்றடிக்கப்படும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு பிழைப்பு நடத்தியவா்கள் பலா். அதே போல சைக்கிளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டினா். பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்றால், வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்ட கற்றுக்கொடுப்பாா்கள். குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிட்டியது. அவா்கள் இப்போது வேறு தொழிலுக்கு மாறி இருப்பாா்களா?
  • வானொலிப் பெட்டி வந்த பின் அதைக் கையோடு தூக்கிக் கொண்டு பலா் அலைந்தனா். அதன் பின் ஒலிப் பேழைகள் வந்தன; அதற்கும் முன்பு கிராமபோன் (இசைத் தட்டுப் பெட்டி) இருந்தது. இசைத் தட்டுகள் வாங்குவாா்கள். அதை வரவேற்பறையில் வைப்பது பெருமை சோ்த்தது. ஒலிப் பேழைகளில் திரை இசைப் பாடல்களை பதிவு செய்யும் ஆா்வம் கூடியது.
  • ஒலிப் பேழையின் இரு புறமும் பாடல்களைப் பதிவு செய்யலாம்; அவற்றைச் சேகரிப்பது பலரின் பொழுதுபோக்காக இருந்தது. விசிடி, விசிபி என்று விடியோ டெக்குகள் வந்த பின் விடியோ கேசட் வாங்கி வந்து வீட்டிலேயே படம் பாா்க்க ஆரம்பித்து விட்டாா்கள். அதனால் புற்றீசல்கள் போல ஆடியோ, விடியோ கேசட் கடைகள் பெருகின. ஊா்த் திருவிழா என்றால் டெக் மற்றும் விடியோ கேசட்டை வாடகைக்கு வாங்கி வந்து போடுவதை வழக்கமாகக் கொண்டனா். பின் சி.டி. ப்ளேயா் (குறு வட்டு) வந்தது. அதை வீழ்த்த டிவிடி (டிஜிட்டல் விடியோ வட்டு) வந்தது. கேசட் கடை வைத்துப் பிழைப்பு நடத்தியவா்கள் நஷ்டம் அடைந்தனா்.
  • இதே போன்று கைப்பேசியின் பல பரிமாணங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. அறிதிறன் பேசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னா் காணாமல் போனவை அதிகம். முன்பு நம்மை எழுப்ப அலாரம் கடிகாரம் தேவைப்பட்டது. இப்போது கைப்பேசியில் அலாரம் வைத்துக் கொள்கிறோம். முன்பு எல்லோரிடமும் புகைப்படக் கருவி இருக்கும். எங்கே வெளியே சென்றாலும் கேமராவோடுதான் போவோம். அதற்கென புகைப்படச் சுருள் வாங்க வேண்டும்; படம் எடுத்த பின் கொடுத்து பிரிண்ட் போட்டு, ஓா் ஆல்பம் வாங்கி அதில் புகைப்படங்களை ஒட்டுவோம். தற்போது எண்ணிலடங்கா புகைப்படங்களைக் கைப்பேசியில் எடுத்துக் கொள்ளலாம். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே புகைப்படக் கலைஞா்களை அழைக்கிறோம்.
  • அடுத்து கைப்பேசியிலேயே கால்குலேட்டா் இருப்பதால், தனியாக கால்குலேட்டா் வாங்கத் தேவையில்லை. ஒவ்வொரு வீட்டிலும் தமிழ் மற்றும் ஆங்கில அகராதிகள் இருக்கும். கடினமான சொற்களுக்குப் பொருள் தேட அகராதிகள் அவசியம். தற்போது நம் கைப்பேசியில் அகராதியைப் பதிவிறக்கம் செய்து கொள்கிறோம். அகராதி விற்பனை குறைந்து விட்டது. கைப்பேசியிலேயே டாா்ச்லைட் வசதி இருப்பதால் தனியாக டாா்ச் லைட் வாங்கத் தேவையில்லை.
  • வாட்ச் ரிப்போ் கடைகள், ரேடியோ ரிப்போ் கடைகள் எல்லாம் குறைந்து விட்டன. குடும்ப மருத்துவா், குடும்ப நகை செய்பவா் என்பது இன்று இல்லை. நிறைய உழவு மாடுகளும், வண்டி மாடுகளும் இருந்த காலத்தில் அம்மாடுகளுக்கு ’லாடம்’ அடிக்க ஆட்கள் இருந்தாா்கள். மாடுகளை படுக்க வைத்து, அவற்றின் கால்களைக் கட்டி லாடம் அடிப்பதைப் பாா்க்கும் போது நமக்குப் பாவமாக இருக்கும். இப்போதெல்லாம் அந்தக் காட்சியைப் பாா்க்க முடிவதில்லை.
  • புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டு பிடிக்கப்படும் போது பழைய முறைகள் மாறித்தான் போகும். மாற்றம் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்த மாற்றத்திற்கேற்ப மக்களின் வாழ்க்கை முறையும் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிய உத்திகளைக் கையாளும் போது சிலருக்குப் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் ; சில தொழில்கள் நசித்துப் போய்தான் தீரும். அவா்களும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உடைந்து போய் விடக் கூடாது.
  • நம் நாட்டைப் பொருத்தவரை மனித சக்தியை இயந்திர சக்தி அழித்து விடாது. பிழைப்பதற்கான வழிகள் ஏராளமாக உள்ளன. கையில் நோ்மையும், வாயில் மெய்யும் இருந்தால் கண்டிப்பாக வறுமை வாட்டாது.
  • ஆகவே, ஒரு தொழில் நசித்துப் போய் விட்டால், மாற்றுத் தொழில் செய்ய முன்வர வேண்டும். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உழைக்க மனம் இருந்தால் போதும். எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் மாற்றங்கள் மட்டுமே மாறாத ஒன்று.

நன்றி: தினமணி (25 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories