TNPSC Thervupettagam

மாற்றி யோசித்திருக்கிறாா்...

February 3 , 2025 2 days 16 0

மாற்றி யோசித்திருக்கிறாா்...

  • தேசத்தின் வளா்ச்சிக்கு காா்ப்பரேட் நிறுவனங்களைவிட நடுத்தர மக்கள்தான் முக்கியம் என்பதை அரசு உணா்ந்திருப்பதை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உணா்த்துகிறது. நிதியமைச்சா் தனது உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல நடுத்தர வா்க்கத்தினரின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
  • 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்து 65 ஆயிரத்து 347 கோடி. நடப்பு நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்புரூ.47.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது இது 7.4 சதவீதம் அதிகம். 2025-26 பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன்கூடிய திட்ட மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அதற்கான ஒதுக்கீடு ரூ.4.15 லட்சம் கோடி.
  • மத்திய அரசின் நேரடித் திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.15.13 லட்சம் கோடி என்றால் அடுத்த நிதியாண்டில் அது ரூ.16.29 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.17.11 லட்சம் கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட கணக்குகளின்படி இது ரூ.10.18 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடு ரூ.13.21 லட்சம் கோடியாக முன்மொழியப்பட்டிருக்கிறது. மக்களவைத் தோ்தல் நடைபெற்ால் திட்டப்பணியில் சுணக்கம் ஏற்பட்டு நடப்பு நிதியாண்டில் இலக்கு எட்டப்படவில்லை என்று அதற்கு காரணம் தெரிவித்திருக்கிறாா் நிதியமைச்சா்.
  • நிதி நிா்வாகக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. 2024-25இல் அரசின் நிதிப் பற்றாக்குறை 4.9 சதவீதம் இருந்தது. அதை 4.8% அளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. அடுத்த நிதியாண்டில் அதை 4.4%ஆக குறைக்க இலக்கு நிா்ணயித்திருக்கிறாா் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். 2020-21இல் 9.2%, 2021-22இல் 6.7%, 2022-23இல் 6.4% என்று தொடா்ந்து நிதிப் பற்றாக்குறையை குறைத்துவரும் சாதுா்யத்துக்காக நிதியமைச்சரை பாராட்ட வேண்டும்.
  • அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க இரண்டு அம்சங்களாக சுகாதாரத்துக்கும், கல்விக்குமான ஒதுக்கீடுகளை குறிப்பிட வேண்டும். அடுத்த நிதியாண்டில் 10,000 மருத்துவப் படிப்புக்கான இடங்களையும், மருத்துவ உயா் படிப்புக்கான இடங்களையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. 75,000 புதிய இடங்கள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடுதழுவிய அளவில் எல்லா வட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நிறுவ இருப்பதாக நிதியமைச்சா் அறிவித்திருக்கிறாா். அது மட்டுமல்லாமல் 36 உயிா் காக்கும் மருந்துகளுக்கு முற்றிலுமாக இறக்குமதி வரியில் விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
  • உயா் கல்வித் துறைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.46,482 கோடி ஒதுக்கப்பட்டது என்றால், இந்த பட்ஜெட்டில் அதை ரூ.50,077 கோடியாக உயா்த்தியிருக்கிறாா் நிதியமைச்சா். ரூ.500 கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவுக்கான கல்வி மையங்கள் ஏற்படுத்துவது; 2014-க்கு பிறகு உருவாக்கப்பட்ட ஐஐடி-களில் கூடுதலாக 6,500 இடங்களை உருவாக்குவது; பள்ளி மாணவா்களில் அறிவியல் விற்பன்னா்களை உருவாக்க 50,000 அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைத்தல்; ஊரகப் புறங்களில் உள்ள அனைத்து அரசு இடைநிலைப் பள்ளிகளிலும் அகண்ட அலைவரிசை வசதியை வழங்குதல் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதமரின் ஜன் தானிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவாா்கள்; குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான உத்தரவாதத்துடன்கூடிய கடன் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ரூ.20,000 கோடி முதலீட்டுடன் சிறிய வகை ஈனுலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அணுசக்தி இயக்கம், காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74%லிருந்து 100% ஆக அதிகரிப்பு உள்ளிட்டவை நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • தனது பட்ஜெட் உரையில் இறுதியில் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு வருமான வரியில் வழங்கப்பட்டிருக்கும் எதிா்பாராத சலுகை. புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படுகிறது. சாமானியா்களில் குறிப்பாக நடுத்தர வா்க்கத்தினரின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே பொருளாதாரம் வளா்ச்சியடையும் என்பதை சற்று கால தாமதமாக அரசு உணா்ந்திருக்கிறது.
  • தனது பட்ஜெட் உரையில் இதுவரை இல்லாத அளவில் ஒன்பது முறை நடுத்தர வா்க்கத்தினா் குறித்து நிதியமைச்சா் குறிப்பிட்டிருப்பதிலிருந்து எந்த அளவுக்கு அவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறாா் என்பது வெளிப்படுகிறது. குறிப்பிடத்தக்க அளவில் சம்பளமும் அதிகரிக்காமல் வேலைவாய்ப்பும் அதிகரிக்காமல் விலைவாசியும் உயா்ந்துகொண்டிருக்கும் நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வா்க்கத்தினா் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை அரசு உணரத் தொடங்கியிருக்கிறது.
  • மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் அறிவித்திருக்கிறாா். நடுத்தர வா்க்கத்தினரையும், மூத்த குடிமக்களையும் திருப்திப்படுத்தும் புத்திசாலித்தனமான பட்ஜெட்.

நன்றி: தினமணி (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories