TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவோராக வேண்டாமா?

December 3 , 2024 39 days 87 0

மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவோராக வேண்டாமா?

  • மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலி, செயற்கைக் கால், மூன்று சக்கர வாகனங்கள் எனப் பல்வேறு உதவிகள் அரசுத் தரப்பு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கவே செய்கின்றன. இந்த உதவிகளையெல்லாம் தாண்டி மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோராகப் பரிணாமம் பெற அவர்களுக்கு உதவுவதே தற்போதைய தேவை.
  • குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகிற மாற்றுத்திறனாளிகள், தொழில் தொடங்கி வெல்லும்போது ஒரே நேரத்தில் அவர்களைப் பிணைத்துள்ள சங்கிலிகளின் ஆயிரம் கண்ணிகள் அறுபடும். ஆனால், அவர்களுக்கு இந்த வகையில் சமூகம் எந்த அளவுக்கு உதவுகிறது?
  • 2011ஆம் ஆண்டு மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி இந்தியாவில் மாற்றுத்​திற​னாளி​களின் எண்ணிக்கை 2.68 கோடி; தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம். இவர்களுள் எவ்வளவு பேர் தொழில்​முனைவோர் என்கிற தரவு நம்மிடம் இல்லை. பதிவு செய்யப்பட்ட மாற்றுத்​திற​னாளித் தொழில் முனைவோரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்​களைப் பதிவு ஆவணங்களிலிருந்து ஒரு தொகுப்​பாகத் திரட்ட முடியும். அப்படி ஒரு ஏற்பாடு நம்மிடம் இல்லை.
  • எனில், எந்த விதமான பதிவும் செய்யாத தனிநபர் தொழில் நிறுவனங்கள் (Sole proprietorship) சிறு சிறு கடைகளை, நடைபாதைக் கடைகளை நடத்தும் தொழில்​முனைவோர் குறித்த புள்ளி​விவரங்கள் எப்படிக் கிடைக்​கும்? ஐநா அவையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமை குறித்த சர்வதேசப் பிரகடனத்தை (UN Convention on the Rights of Persons with Disabilities [UNCRPD]) நாம் பின்பற்றுகிறோம். அதன் பிரிவு 27 (உட்பிரிவு 6), ‘மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்யவும், தொழில் தொடங்கவும், கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கித் தொழில் செய்யவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்கிறது.
  • ஆனால், மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கே மாற்றுத்திறனாளிகள் பல முகாம்களுக்கு அலைய வேண்டியிருக்கிறது. அவர்கள் குறைந்த வட்டியில் தொழில் கடன் பெற மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் பல இருந்தாலும் வங்கி மேலாளர்கள் மனது வைத்தால்தான் விண்ணப்பதாரரின் தொழில் கனவு நனவாகும். இதில் பிணையத் தொந்தரவு வேறு. பல்வேறு தடைகளின் காரணமாக, அரசு முகமைகள், பொதுத்துறை வங்கிகளின் சேவைகளைக்கூட மாற்றுத் திறனாளிகளால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

செய்ய வேண்டியது என்ன?

  • வேளாண்​மையைப் போலவே மாற்றுத்​திற​னாளி​களுக்கான தொழில் கடனும் இன்று முன்னுரிமைக் கடனாக (priority lending) ரிசர்வ் வங்கியால் அறிவிக்​கப்​பட்​டுள்ளது. இது மட்டும் போதாது. இதில் இலக்குகளை எட்டாத வங்கி​களுக்​கும், பிணையமில்லாக் கடன்களுக்குப் பிணையம் கோரும் வங்கி​களுக்கும் விதிக்​கப்பட்ட அபராதம் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
  • தொடர்ச்​சியாக அவ்வாறு செயல்​படும் வங்கி​களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். எல்லா நிதிநிறு​வனங்கள், வங்கிகள், அரசு முகமை​களின் இணையதளங்கள் ஆகியவை பார்வை மாற்றுத்​திற​னாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒலி வடிவத்​துக்கும் மாற்றப்பட வேண்டும்.
  • அதேபோல தொழில் முனைவை ஊக்கு​விக்கும் அமைப்புகளான சிட்பி, டி.ஐ.ஐ.சி, டாப்செட்கோ, தாட்கோ, பொதுத் துறை வங்கிகள், தாய்கோ முதலான கூட்டுறவு வங்கிகள், தேசிய மாற்றுத்​திற​னாளிகள் நிதி - மேம்பாட்டுக் கழகம் (NHFDC), நபார்டு உள்ளிட்ட அனைத்து அமைப்புகள், தொழில்​நுட்ப வணிக அடைகாப்​பகங்கள் (Technology Busienss Incubators) ஆகியவற்றில் மாற்றுத்​திற​னாளி​களின் பிரதி​நி​தித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். மாநில மாற்றுத்​திற​னாளிகள் ஆணையர் பதவியில் அமர்வோர், மாற்றுத்​திற​னாளியாக இருப்​பதுடன் மாற்றுத்​திற​னாளி​களின் தொழில் முனைவு உரிமைக்​காகவும் பேசும் வகையில் விதிகள் மாற்றியமைக்​கப்பட வேண்டும்.
  • அண்மையில் மாற்றுத்​திற​னாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்​தவருக்கான தனி முதலீட்டு நிதியம் ரூ.50 லட்சம் முதலீட்டில் தொடங்​கப்​படும் என்று தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்​பரசன் சட்டப்​பேர​வையில் அறிவித்​தார். இது போன்ற, காலத்​துக்​கேற்ற பார்வைதான் நமக்குத் தேவை. இன்றைய புத்தொழில் சூழலுக்கு மாற்றுத்​திற​னாளிகளை அழைத்துச் செல்வது, பாரம்​பரியமான ஏற்பாடு​களின்கீழ் பயிற்சி, தொழில் வழிகாட்டல், தொழில் கடனுதவி வழங்குவது ஆகியவை போர்க்கால அடிப்​படையில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகும். மாற்றுத்​திற​னாளிகள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கும் காலத்தில் அவர்களுக்குச் சலுகைகள் வேண்டி​யி​ராது. அவர்கள் சமூகத்​துக்குப் பங்காற்றும் வகையில் வளர்ந்​திருப்பர். அனை​வரையும் உள்​ளடக்கிய வளர்​ச்​சிக்கு இதுவே வழி!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories