மாற்றுத் திறனாளிகளின் வலியைப் பேச...
- மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் அதிகம் என்பதைப் பொதுச் சமூகம் ஓரளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறது. அதையும் தாண்டி ஏராளமான இன்னல்கள் உண்டு. உடல் உபாதைகள், உளவியல்ரீதியான பலவீனம், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துகிற தடைகள், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சிரமம், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடுகளை முழுமையாகப் பெறுவதிலும் இடர்ப்பாடுகள் என மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை பல்வேறு வகையான சிக்கல்களோடுதான் தொடர்கிறது. இதன் விளைவால் பல மனத் தடைகளும் ஏற்படுகின்றன. அன்றாடம் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எந்த அளவுக்கு உதவி செய்கிறது?
சட்டமும் குழப்பங்களும்:
- சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 என்பது சீனாவில் 1992இல் உருவான பிவாகோ மில்லெனியம் சட்டகம் (Biwako millennium framework) என்பதன் வெளிப்பாடாகவே இயற்றப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளுடைய பிரச்சினைகளில் பல துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் கவனித்த சட்டம் இயற்றும் அறிஞர்கள், இங்கு இயற்றப்பட்ட சட்டத்தில் இரண்டு பிரிவுகளை மாநிலத்திலும் மத்தியிலும் ஏற்படுத்தினர்.
- இவற்றில் ஒன்று, மாநில ஒருங்கிணைப்புக் குழு; மற்றொன்று, மாநிலச் செயல்பாட்டுக் குழு. அதேபோன்று மத்திய அரசிலும் இப்படியான குழுக்கள் இருக்கவே செய்தன. இந்தக் குழுக்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்களாகவே இருந்தன.
- இந்நிலையில், இந்தியாவினுடைய முதல் ‘மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்புப் பங்கேற்புச் சட்டம் - 1995’, 2016இல் காலாவதியாகிப் போனது. அதை மேம்படுத்திப் புதிதாக ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் - 2016’ உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில், முன்புபோல இரண்டு மிக முக்கியமான குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றை - மாநில ஆலோசனை வாரியம், மத்திய ஆலோசனை வாரியம் என இந்தச் சட்டம் ஏற்படுத்த முனைந்தது.
- இந்தப் புதிய சட்டத்தின்படி, மத்தியில் மூன்று ஆணையர்கள் என்றும், மாநிலத்தில் ஓர் ஆணையர் என்றும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மத்திய ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் ஒருவர் தலைமை ஆணையராகவும், மற்ற இருவரும் அவருக்குக் கீழே செயல்படும் ஆணையர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
- இந்த இரண்டு ஆணையர்களில் ஓர் ஆணையர் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 வலியுறுத்துகிறது. இவருக்கு உதவுவதற்காகச் சுமார் 15 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் (2016) கீழ் பிரிவு 79இன்படி மாநிலங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ ஆணையர் என்கிற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டிருந்த ஆணையர் பதவியையும், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 இன்படி உருவாக்கப்பட்ட ஆணையர் பதவியையும் அதிகார வர்க்கம் தங்கள் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு இணைக்க முயன்றது; இதையடுத்து முந்தைய அரசு 2018இல் இரண்டையும் ஒரே பதவியாகக் காட்டியது. இந்த நடவடிக்கையால் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ ஆணையம் என்கிற சீரிய நோக்கம் சீர்குலைந்தது.
புதிய அரசும் நம்பிக்கையும்:
- தென் கொரியாவில் 2012இல் ஒன்றுகூடிய மாற்றுத்திறனாளிகள், இன்ஜியான் என்கிற நகரத்தில் ‘இன்ஜியான் பிரகடன’த்தை முன்வைத்தார்கள். இதிலுள்ள 10 இலக்குகளில் இரண்டாவது இலக்காக ‘முடிவெடுக்கிற முக்கியமான பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகளைக் கொண்டுவர வேண்டும்’ என்று தீர்மானிக்கப்பட்டது. உரிமைகளை உண்மையாக மாற்ற முடிவெடுக்கின்ற இடத்துக்கு மாற்றுத்திறனாளிகளை நகர்த்த வேண்டும் என்பதே இந்த இலக்கின் நோக்கம் என்று அந்தப் பிரகடனத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
- இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கம் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தது. இரண்டு ஆணையர்களையும் ஒரே ஆணையராக மாற்றுவது ஏற்புடையதல்ல; மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பற்றி விசாரித்துத் தீர்வு சொல்கின்ற ஒரு தனித்துவ ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கோட்பாட்டை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டு இயக்கமும் அரசுக்குக் கடிதம் எழுதியது. அதிகார வர்க்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, இதற்கான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற முனைப்பும் முயற்சிகளும் டிசம்பர் 3 இயக்கத்தால் மீண்டும் தொடங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ ஆணையராக மாற்றுத்திறனாளி ஒருவர் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
- அதற்குப் பின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் எப்படிச் செயல்படாத இயக்குநரகமாக இருந்துவருகிறது; உரிமைகளை விசாரிப்பதற்கான நீதிமன்றம் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் செயலுக்கு வருவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பதைச் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உச்ச நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்:
- பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிக்கல்களுக்குத் தீர்வு காண ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை என்பதை நாடாளுமன்ற நிலைக்குழுவும், தொடர்ச்சியாகக் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்துவந்தது. டிசம்பர் 3 இயக்கமும் சென்னையில் போராட்டத்தை அறிவித்தது.
- இதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து எத்தனை மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையரை நியமித்திருக்கின்றன என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவைச் சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையத்தின் தேவை என்ன, எப்படி அது ஒரே பொறுப்பாக மாற்றப்பட்டது என்பது குறித்து மாற்றுத்திறனாளிகளின் இயக்கம் பேசியது.
- பிரச்சினைகளை விசாரிக்கக்கூடிய வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனித்துவ ஆணையர் ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பின் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி,மாற்றுத்திறனாளிகளின் ஆணையர் பொறுப்பில் ஜெசிந்தா லாசரஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 30 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் துறையின் தலைவராக இருந்த ஆணையாளர் அலுவலகம் முதல் முறையாகத் திட்டச் செயலாக்க இயக்குநரகமாக மாற்றப்பட்டது. இது முக்கியமான ஒரு மாற்றம்.
மைல்கல் சாதனை:
- முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த ஜெசிந்தா லாசரஸ் வேறொரு பணிக்கு மாற்றப்பட்டதால் அந்தப் பணியிடம் மீண்டும் காலியாக இருந்தது. தனித்துவ ஆணையர் நியமிக்கப்பட்டால்தான் சட்டத்தினுடைய யதார்த்தங்களும், பாதுகாப்பும் கடைக்கோடி மாற்றுத்திறனாளி வரை சென்றுசேர முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்தி அரசிடம் முறையீடு செய்தது, மாற்றுத்திறனாளிகளின் இயக்கம். இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன், தனித்துவ மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக நியமிக்கப்படுவதாக அறிவித்தது தமிழக அரசு.
- அதிகாரக் கோட்டையாக இருந்த மாற்றுத்திறனாளிகள் துறையில், மாற்றுத்திறனாளிகளின் வலிகளுக்காகப் பேசக்கூடிய ஒரு தனித்துவ ஆணையர் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை உண்மையாக்குவது என்கிற நெடிய பயணத்தில் முக்கியமான ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
- ஆனாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால்தான், மாற்றுத்திறனாளிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வலிகளையும் பிரச்சினைகளையும் அனுபவரீதியாகப் புரிந்துகொண்டு சக மாற்றுத்திறனாளிக்கு நீதி வழங்குவதற்கும், தீர்வுகளைக் கண்டறிவதற்கும், ஆலோசனைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த ஆணையம் சரியான கட்டமைப்பாக இருக்கும் என்கிற கருத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் இன்றளவும் மாறவில்லை. அதற்கான முயற்சிகள் தொடரும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 11 – 2024)