மாற்ற முடியாததை ஒப்பிட வேண்டாமே!
- இதோ ஆண்டு இறுதித் தேர்வு நேரம் வந்துவிட்டது. தேர்வைக் காட்டிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வேறொன்று உண்டென்றால் அது ஒப்பீடு செய்வதுதான். எதிர் வீட்டுப் பெண், பக்கத்து வீட்டுப் பையன், வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்கள் இப்படி யாரையாவது சுட்டிக் காட்டி, “அவனைப் பார் எப்படிப் படிக்கிறான் நீயும் இருக்கியே” என்று பெற்றோர் உதிர்க்கும் சொற்கள் குழந்தை மனத்தில் முள் தைத்ததுபோல் ரணத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு.
- மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுதல் மனத்தளர்வை ஏற்படுத்தும் என்பது பொதுவான கருத்து. ஆனால், நல்விதமாக பயன்படுத்தினால் வளர்ச்சிக்கு ஒப்பீடு உதவும் என்பதும் உண்மை. ஒப்பீடுகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று, மாற்றக்கூடியவற்றில் ஒப்பீடு. அடுத்தது, மாற்றமுடியாதவற்றில் ஒப்பீடு. பொதுவாக, மாற்றக்கூடியவற்றில் ஒப்பீடு செய்வது வளர்ச்சியையும், மாற்ற முடியாதவற்றில் ஒப்பீடு செய்வது மனத்தளர்வையும் அளிக்கும்.
எப்போது நன்மை பயக்கும்?
- மாற்றக்கூடிய ஒப்பீடுகளான படிப்பு, திறன்கள், உடல்நலம், நற்பழக்கவழக்கங்கள், உழைப்பு போன்றவற்றில் நம்மைவிடச் சிறந்தவர்களுடன் ஒப்பிடுதல் நன்று. அவர்கள் எச்செயல்கள் வழியாக தம்மை மேம்படுத்திக் கொண்டார்களோ, அவற்றை நாமும் கடைப்பிடித்து உயர்வடையலாம். அதுவே, நிறம், உடலமைப்பு, பிறந்த இடம், இனம், சூழல்கள், கடந்தகால நிகழ்வுகள் போன்ற மாற்ற முடியாத ஒப்பீடுகளால் பெரும்பாலானவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படுகிறது.
- இவை அனைத்தையும்விட, இளையவர்களுக்கு மிகப்பெரிய மனத்தளர்வை ஏற்படுத்துகின்ற மாற்றமுடியாத ஒப்பீடானது, தங்கள் பெற்றோரையும், அவர்களின் செயல்களையும் மற்றவர்களின் பெற்றோர்களுடன் ஒப்பிடுவதுதான். இதை மாணவப்பருவத்தினர் பலர் ஒருவருக்கொருவர் செய்து கொள்வதை அண்மையில் அதிகமாகக் காண முடிகிறது.
- பெற்றோரும் அவர்களின் செயல்களும்தான் ஒருவரின் வாழ்வைச் சிறுவயது முதல் வடிவமைப்பதால், அவர்களை மற்றவர்களின் பெற்றோருடன் ஒப்பிடுவது இயல்பான ஒன்றாகிவிடுகிறது. ஆனால், இந்த ஒப்பீடு தேவையற்ற மனக்கசப்பையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது என்கிற பேருண்மையைப் புரிந்து கொண்டால், ஒப்பிடுவதைத் தவிர்ப்போம்.
சமூக ஊடக மாயை:
- குறைகள் இல்லா மனிதரைக் காண்பது அரிதென்றால், மற்ற பெற்றோர் மட்டும் எப்படிக் குறையற்றவர்களாக இருக்க முடியும்? நீங்கள் அடுத்த வீட்டில் அண்ணாந்துப் பார்க்கும் “நல்ல” பெற்றோர்களிடமும் குறைகள் இருக்கலாம். அவர்கள், அக்குறைகளை மறைத்து உங்கள் முன் நல்ல பெற்றோராக நடந்து கொள்ளலாம்.உங்கள் நண்பர்களும் அவர்கள் பெற்றோரைப் பற்றி பொய்யாக உயர்த்திக் கூறலாம்.
- சமூக ஊடகங்களில் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்வாக இருப்பதை மட்டும் இடுகையிட்டு, பிரச்சினைகளற்ற வாழ்கையை வாழ்வதாகக் காட்டிக்கொள்ளலாம். இதுபோன்ற பொய் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத உங்களின் நிலையும்தான் உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, உங்கள் பெற்றோரைத் தாழ்வாக நினைக்க வைக்கிறது.
குறைகள் மனித இயல்பு:
- நம்மைவிட உண்மையாகவே சிறந்தவர் களையும், சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்பவர் களையும் ஒப்பிடுவதைத் தவிர்த்து, நம்மைவிடக் கடினமான சூழலில் வாழும் குறிப்பாகப் பெற்றோரற்ற குழந்தைகள் (இறந்து போனதால், மனமுறிவானதால், வேறு நிகழ்வுகளால்), ஆதரவற்ற இல்லங்களில் வளரும் பிள்ளைகள், குடி, போதைக்கு அடிமையானவர்களையும்; குற்றங்களுக்காக சிறையிடப்பட்டவர்களையும்; பெற்றவர்களாக அடைந்த பிள்ளைகளுடன் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நல்வாழ்வை வாழ்கிறீர்கள் என்பது புரியும்.
- உங்கள் பெற்றோர் தினமும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளலாம், உங்களிடம் கண்டிப்பு காட்டக்கூடியவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் மேற்கூறிய பெற்றோர் போலில்லாமல், உங்கள் தேவைகளை நிறைவேற்று பவராகவும், உங்களைப் பற்றிக் கவலைப்படுவதால் தங்களுக்குள் ஏற்படும் மனக்குழப்பங்களைத் தாங்கிக்கொண்டு ஒன்றாக வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருப் பவர்களாகவும் இருப்பது, எவ்வளவு பெரிய நிகழ்வு என்பதை மேலே கூறப்பட்ட பிள்ளைகளின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
- உங்கள் பெற்றோரின் குணத்தில் வெளிப்படும் சில குறைகள் மனித இயல்பு. பிறர் தவறாக நினைப்பார்களோ என்கிற கூச்சத்தால் வல்லுநர்களின் உதவியை நாடப் பலருக்கு மனத்தடை உள்ளது. நாடிய சிலருக்கும் கற்ற வழிமுறைகளைத் தேவையானபோது செயல்படுத்தும் மனமோ, சூழலோ சரியாக அமைவதில்லை.
- பெற்றவர்களின் குறைகுணங்களோடு அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முயல்வது மட்டுமல்லாமல், அவர்களின் நற்குணங்களை எண்ணிப் பார்த்து மகிழுங்கள். உங்களின் மனத்தளர்ச்சியும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதும், அதனால் ஏற்படும் வெறுப்புணர்ச்சியும் குறைவது உறுதி. மாற்றமுடியாதவற்றில் ஒப்பிடுவதைத் தவிர்த்தால், எதிர்காலம் நிறைவானதாக இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)