TNPSC Thervupettagam

மாலை ஆறு மணிக்கு மேல் பார்வை மங்குகிறதா?

February 24 , 2024 184 days 223 0
  • ‘சின்ன தம்பி’ திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி மாலைக் கண் நோயால் பாதிக்கப்ப ட்டிருப்பார். அப்படத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாமல் கவுண்ட மணி அவதிப்படுவதைப் பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், அந்தக் காலத்தில் இந்நோய் பற்றிய அறியாமையையே அக்காட்சிகள் வெளிப்படுத்தின.
  • விழித்திரை நிறமிமயங்கு நோய் (Retinitis Pigmentosa) மாலைக் கண் நோய் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. நம் கண்ணின் உள்பகுதியிலுள்ள விழித்திரையில் சிலந்தி வலைகள் போன்று பல ஆயிரக்கணக்கான நரம்புக் கற்றைகள் ஒன்றோடு மற்றொன்று பிணைந்து காணப்படுகின்றன.
  • ஒரு பொருளை நாம் பார்க்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஒளியானது, ஒளிக்கற்றையாக விழித்திரையை அடையும். அவற்றை மின் கற்றைகளாக (Electrical Signal) மாற்றி மூளைக்கு அனுப்பும் அற்புதமான வேலையை விழித்திரை செய்கிறது.

கூம்பு, குச்சி செல்கள்:

  • நமக்குப் பார்வை தெளிவாகத் தெரிய விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பி செல்களாக உள்ள குச்சி செல்கள் (Rods cell), கூம்பு செல்கள் (Cones cell) ஆகிய இரண்டு செல்கள் மிகவும் அவசியம். கூம்பு செல்கள் பகலில் பொருள்களைத் தெளிவாகப் பார்க்கவும், நிறங்களை வேறுபடுத்திப் பார்க்கவும் உதவுகின்றன.
  • அதேபோல் வெளிச்சம் குறைந்த மாலை நேரத்திலும், இருட்டான இரவு நேரத்திலும் குச்சி செல்களே பார்வைக்கு உதவுகின்றன. நாம் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குச் செல்லும்போது குச்சி செல்கள் உடனடியாகத் தூண்டப்பட்டு நமக்குப் பார்வை தெரிகிறது.
  • சிலருக்குப் பிறவியிலேயே குச்சி செல்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு வளரும்போது குச்சி செல்களில் சிதைவு ஏற்பட்டு மாலை நேரத்திலும், இரவு நேரத்தி லும் பார்வையில் குறைவு ஏற்படு கிறது. இதைத்தான் விழித்திரை நிறமிமயங்கு நோய் என்கிறோம்.

அறிகுறிகள்:

  • மாலை, இரவு நேரத்தில் பார்வை மிகக் குறைவாக இருக்கும்.
  • வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டு அறைக்குள் நுழையும்போது இருட்டான அறையில் உள்ள பொருள்கள் தெரியாமல் தடுமாறுவார்கள்.
  • பகல் நேரத்தில் சாலையில் செல்லும் போது பக்கவாட்டில் வரும் வண்டிகள் தெரியாமல் இருப்பது.
  • இதில் குச்சி செல்களைத் தொடர்ந்து கூம்பு செல்களிலும் சிதைவு ஏற்படுவதால் கண் கூச்சம் (photophobia), நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாமை, குறுகிய மையப் பார்வை, பார்வை இழப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

பரிசோதனை:

  • கண்ணில் அமைந்துள்ள கண்பாவை பகுதியை விரிவடையச் செய்து கண் விழித்திரை பரிசோதனையின் மூலம் விழித்திரை நிறமிமயங்கு நோயைக் கண்டறியலாம். இ.ஆர்.ஜி பரிசோதனை, இந்த நோயை உறுதிசெய்யப் பயன்படுகிறது.

சிகிச்சை முறைகள்:

  • விழித்திரை நிறமிமயங்கு நோயில் கிட்டத்தட்ட 60 வகைகள் உள்ளன. இவற்றை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். எல்லா வகையான விழித் திரை நிறமிமயங்கு நோய்களும் முழுப் பார்வையிழப்பை ஏற்படுத்துவதில்லை.
  • தற்போது வரை விழித்திரை நிறமிமயங்கு நோய்க்குச் சிகிச்சை கண்டறியப்பட வில்லை. ஆனால் RPE65 என்கிற மரபணு மாற்ற நோய்க்கு மட்டும் அயல் நாடுகளில் லக்ஸ்டுர்னா (Luxturna) என்கிற மரபணு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் இந்நோயைக் கண் டறிந்தால் இந்தச் சிகிச்சை மூலம் மாலை, இரவு நேரத்திலான பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.

கண் பரிசோதனை:

  • விழித்திரை நிறமிமயங்கு நோய் (Retinitis Pigmentosa) உள்ளவர்கள் புகை பிடிப்பதையும் வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • இந்நோய் பாதித்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் மருத்து வர்களுடனான மரபணு ஆலோசனைக்குப் பிறகே குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படு கிறார்கள்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு விழித்திரை நிறமிமயங்கு நோய் இருந்தால் அது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், குடும்ப உறுப்பினர்களைப் பாதிக்கச் சாத்தியம் உள்ளதால் ரத்த உறவுகள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • இந்த நோய்க்கு இதுவரை அங்கீரிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தள்ளிப்போட முடியும்.

என்ன செய்யலாம்?

  • விழித்திரை நிறமி மயங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பார்வை குறைந்து விட்டால் கவலை கொள்ள வேண் டாம். அவர்களின் பார்வையை அதிகப் படுத்த பல கருவிகளும் வழிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
  • உதாரணத்திற்கு, வீடுகளில் சுவரிலும் தரையிலும் வெள்ளை நிற டைல்ஸ் ஒட்டி அவற்றுக்கிடையே கறுப்பு நிறத்தில் டைல்ஸைப் பட்டை யாக ஒட்டினால் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் நடந்துசெல்ல உதவியாக இருக்கும். மேலும் மின்சார சுவிட்சில் உள்ள பெட்டி வெள்ளையாகவும் அதில் உள்ள சுவிட்ச் கறுப்பு நிறத்திலும் இருந்தால் மின் விளக்குகளைப் பிறர் உதவி இல்லாமல் அவர்களால் பயன்படுத்த முடியும்.
  • விழித்திரை நிறமிமயங்கு நோய் உள்ளவர்கள் படிக்கும்போது மின்சார விளக்கின் ஒளி அவர்களின் பின்புறம் இருந்து வரும்படி அமர்ந்து படிக்க வேண்டும். மாறாக, ஒளி வரும் பாதை முன்பாக அமர்ந்து படித்தால் கண்களில் கூச்சம் ஏற்பட்டுச் சிரமம் உண்டாகும்.

அரசின் உதவிகள்:

  • விழித்திரை நிறமிமயங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கண் மருத்துவப் பிரிவை அணுகினால் பார்வைக் குறைபாட்டைப் பரிசோதித்து, மாற்றுத் திறனாளி அட்டை வழங்கப் படுகிறது.
  • இதன் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதுடன் அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இட ஒதுக்கீடும் கிடைக்கும். மேலும், இந்நோய் பாதித்த மாணவர் களுக்குப் பொதுத் தேர்வில் அரசு கண்மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தேர்வில் கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படுகிறது.
  • பார்வை முழுவதும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக்குத் தேர்வு எழுத உதவியாளர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • விட்டமின் ஏ குறைபாட்டினைத் தவிர்த்து, சத்தான உணவின் மூலம் விழித்திரை நிறமிமயங்கு நோயால் ஏற்படும் பார்வையிழப்பைத் தவிர்க்க முடியும். மரபணு சிகிச்சை, செயற்கை விழித்திரை சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்நோய் குணமடையும் சூழல் உருவாகும் என நம்பலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories