- மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை, அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் தொழிற்பேட்டைகளில் இயங்கிவரும் சிறு-குறு தொழில்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. இதன் இழப்பு மதிப்பு ரூ.11,000 கோடி வரை இருக்கலாம் என இந்தியத் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், அரசு இவ்விஷயத்தில் உடனடித் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தியாவின் முக்கியமான வாகனத் தயாரிப்பு மையம் சென்னை; மருந்து, ரசாயன, கட்டுமானப் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும் சென்னையில் உள்ளன.
- இந்தத் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களைத் தயாரிக்கும் பொருட்டு, சென்னையில் அம்பத்தூர், பெருங்குடி, திருமுடிவாக்கம், வில்லிவாக்கம், திருமழிசை, விச்சூர் ஆகிய இடங்களில் சிறு-குறு தொழிற்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தொழிற்பேட்டைகளில் செயல்பட்டுவருகின்றன.
- இந்தத் தொழிற்பேட்டைகள் வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு, 2019இல் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிறு-குறு தொழிற்கூடங்கள் பெரும்பாலானவற்றின் சுற்றுச்சுவர்கள் உயர்த்தப்பட்டன. ஆனாலும் அம்பத்தூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்போது, வடிகாலை மீறி அது தொழிற்பேட்டைக்குள் வெள்ளமாக நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
- அதுபோல் கொரட்டூர் ஏரியின் உபரிநீர், வில்லிவாக்கம் தொழிற்பேட்டைக்குள் வெள்ளமாக நுழைந்துவிடுவதாகப் புகார்கள் உண்டு. விச்சூர், பெருங்குடி தொழிற்பேட்டையிலுள்ள சிறு-குறு தொழில்களும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெள்ள நீர் வடிந்தாலும் உடனடியாக இந்தத் தொழிற்கூடங்கள் செயல்பட முடியாத சூழல் உள்ளது. பெரும்பாலான இயந்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பழுதுநீக்க அல்லது புதியவற்றை நிறுவ காலதாமதம் ஆகும்.
- அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வெள்ளப் பாதிப்பு, சுமார் ரூ.2,000 கோடி; பெருங்குடி தொழிற்பேட்டையின் வெள்ளப் பாதிப்பு, சுமார் ரூ.400 கோடி; திருமுடிவாக்கம், திருமழிசை ஆகிய தொழிற்பேட்டைகளின் வெள்ளப் பாதிப்பு தலா சுமார் ரூ.100 கோடி; விச்சூர் தொழிற்பேட்டையின் வெள்ளப் பாதிப்பு சுமார் ரூ.160 கோடி என சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். வில்லிவாக்கம் தொழிற்பேட்டையின் பாதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு சிறு-குறு தொழில் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.3 லட்சம், குறுந்தொழில் உற்பத்தியாளர்களுக்குத் தலா ரூ.25,000 அரசு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
- ஒவ்வொரு வெள்ளப் பாதிப்புக்குப் பிறகும் அரசிடம் சிறு-குறு தொழில் சங்கத்தினர் கோரிக்கை வைத்துவருவதாகவும், ஆனால் அரசு அதற்குத் தெளிவான தீர்வை இதுவரை அளிக்கவில்லை என்றும் விச்சூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கூறியிருக்கிறார். தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உபரிநீர் வடிகாலை அகலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதுபோல் இழப்பீடுகள் வழங்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அரசு நேரடி ஆய்வு நடத்த வேண்டியதும் அவசியம். தமிழ்நாடு மாநில உள்நாட்டு உற்பத்தியில் 20% வரை இந்தச் சிறு-குறு தொழில்கள் பங்குவகிக்கின்றன. அந்தத் தொழில்கள் பாதிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
நன்றி: தி இந்து (15 – 12 – 2023)