TNPSC Thervupettagam

மின்கம்பங்களாக மாற்றப்பட்ட நூற்றாண்டு மருத மரங்கள்! மின்துறையின் அலட்சியம்

September 25 , 2024 112 days 87 0

மின்கம்பங்களாக மாற்றப்பட்ட நூற்றாண்டு மருத மரங்கள்! மின்துறையின் அலட்சியம்

  • நூற்றாண்டு பழைமை மிக்க மரங்களில் மின் கம்பிகளைப் பொறுத்திய அவலம் அம்பாசமுத்திரத்தில் நிகழ்ந்துள்ளது. மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மரங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம்:

  • திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நூற்றாண்டு பழைமை மிக்க மரங்களில் மின் கம்பிகளைப் பொறுத்தி, கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மின்வாரிய ஊழியர்களின் பொறுப்பற்ற, அலட்சியமான இந்த செயலை அவர்கள் கண்டித்துள்ளனர்.
  • தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல் திருநெல்வேலி கோட்டம், கல்லிடைக்குறிச்சி துணைக் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம் துணை மின்நிலையப் பகுதியில், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை வழியாக காசிநாதர் கோயில் மற்றும் தாமிரவருணி ஆற்றுக்குச் செல்லும் வழியில் நூற்றாண்டுகள் பழைமையான மருத மரங்கள் உள்ளன.
  • ‘ஆத்து சாலை’ என்றழைக்கப்படும் இந்த சாலை, ராணி மங்கம்மாள் அமைத்தது. ராணி மங்கம்மாள் ஆட்சி செய்த போது, ஓர் துறவி நவகைலாயங்கள் செல்லும் வழிகளில் மரங்கள் நடுவதற்கு அறிவுறுத்தியதையடுத்து, பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், திருப்புடைமருதூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிவாலயங்களுக்குச் செல்லும் சாலையில் நூற்றுக்கணக்கான மருத மரங்களை நட்டுப் பராமரித்ததாக வரலாற்றுத தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இன்றும், அனைத்து இடங்களிலும் வானுயர வளர்ந்து நிற்கும் இம்மரங்கள், சாலையில் செல்பவர்களுக்கு நிழல் தரும் மரங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனையிலிருந்து தாமிரபரணி கரையில் உள்ள காசிநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள மருத மரங்களில், அம்பாசமுத்திரம் துணை மின்நிலைய மின் ஊழியர்கள், கம்பிகளை அடித்து அதில் மின்கம்பிகளை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். ஒரு மரத்தில் மூன்று ஆணிகளை அடித்து அதில் மூன்று மின்கம்பிகளை கட்டி கொண்டு சென்றுள்ளனர்.
  • மின்வாரியத்தின் இந்த அலட்சிய போக்கை கண்டு, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நூற்றாண்டு பழைமை மிக்க மரங்களில் மின்கம்பிகளை அடித்து கொண்டு செல்வதால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும், மரங்களில் மின்கம்பிகள் உரசுமெனில், மின்கம்பிகளில் பிளாஸ்டிக் பைப்புகளை சொருகி கொண்டு செல்லாமல், மரங்களில் ஆணிகளை அடித்து மின்கம்பிகளைக் கொண்டு சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதையடுத்து, மரங்களில் அடித்த மின்கம்பிகளை உடனடியாக எடுத்து மாற்று வழியில் கொண்டு செல்ல மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பழைமையான மரங்களின் அருமை தெரியாமல், அதனை அழிக்கும் நோக்கில் மின்வாரியத்தினர் செயல்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
  • முன்னதாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கு, இதே மரங்களை அழிக்கும் நோக்கில், இந்த மரங்களின் அடியில் அமிலங்கள் ஊற்ரப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வேளாண் விஞ்ஞானிகள் மூலம் இந்த மரங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன. இந்தச் சாலையின் அழகில் மயங்கிய திரைத்துறையினர் பல திரைப்படங்களின் படப்பிடிப்பை இங்கு நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில் மின்வாரியத்தினர் இதுபோன்று மின்கம்பிகளை மரங்களில் அடித்து கொண்டு சென்றுள்ளது மரங்களை அழிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
  • இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி துணைக் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் கூறும்போது, மின்வாரிய அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் ஊழியர்கள் இதுபோன்று மரங்களில் மின்கம்பிகளைப் பொருத்தியுள்ளனர். இது தவறான செயலாகும். எனது கவனத்திற்கு வந்ததும் அவற்றை உடனடியாக அகற்றி மாற்று வழியில் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

நன்றி: தினமணி (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories