TNPSC Thervupettagam

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் : ராமனை பின்பற்றுமா தேர்தல் ஆணையம்

April 5 , 2024 277 days 213 0
  • அயோத்தி ராமனுக்கும் இவிஎம் (EVM) என்று அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று ஒரு நிமிடம் வியப்பாக இருக்கலாம். மிக ஆழமான தொடர்பு இருக்கிறது. ராமனை தெய்வ அவதாரமாக அனைவரும் வழிபட்டாலும், உயர்ந்த லட்சியங்களின் உன்னதமான உருவகம் என்பதும் மிகவும் முக்கியம். மரியாதா புருஷோத்தம் என்று அழைப்பார்கள். மிகச் சிறந்த அரசாட்சியை ராமராஜ்யம் என்று குறிப்பிடுவதும் வழக்கம்.
  • ராமாயணம் வர்ண தர்மம், ஸ்திரீ தர்மம் என்பன போன்ற சமூக விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட நூல் என்பதால் சமகால முற்போக்காளர்களுக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம். அந்த விமர்சனங்கள்கூட அரசாட்சியை குறித்த ராமனின் அணுகுமுறையை கவனிக்கத் தவறக் கூடாது. ராமாயணத்தின் துவக்கத்தில் தனக்கு அரசனாக முடிசூட்ட வேண்டிய நேரத்தில் தந்தை அதனை நிறுத்திவிட்டு தன்னை காட்டுக்கு அனுப்ப முற்படும்போது, ராமன் அதனை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறான். எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக வனவாசம் செல்கிறான். இது ஒரு லட்சிய முன்மாதிரி எனலாம்.
  • அதைவிட அபூர்வமான நிகழ்வு உத்தரகாண்டம் எனப்படும் ராமாயணத்தின் இறுதிப்பகுதியில் நடப்பதுதான். தமிழில் கம்பர் இதனை தவிர்த்துவிட்டார். ஆனாலும், மக்களுக்கு பரவலாக இந்தக் கதை தெரியும். ராவணனை வென்று சீதையை சிறைமீட்டு அயோத்திக்கு வந்து மகுடம் சூட்டிக்கொள்கிறான் ராமன். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ சிறப்பான ஆட்சி நடக்கிறது. அந்தச் சமயத்தில் நாட்டு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று மந்திராலோசனை சபையில் கேட்கிறான். அப்போதுதான் பிறரால் கடத்திச் செல்லப்பட்ட மனைவியை மன்னன் ஏற்றுக்கொண்டு வாழ்வதைக் குறித்து மக்கள் இழிவாகப் பேசுகிறார்கள் என்று அறிகிறான்.
  • உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.
  • சீதை அப்பழுக்கில்லாத பெண், ராவணனிடம் சிறைவாசம் இருந்தாலும் களங்கப்படாதவள் என்று ராமனுக்கு நன்றாகவே தெரியும். சீதையை உயிருக்குயிராக காதலிக்கிறான். அது மட்டுமல்லாமல், இலங்கையில் அவளை சிறைமீட்டவுடனேயே அவளது தூய்மையை நிரூபிக்க தீக்குளிக்க வைக்கிறான். தீயிலிருந்து எந்தக் காயமும் இல்லாமல் மீண்டு தனது தூய்மையை நிரூபிக்கிறாள் சீதை. ஆனால், இது இலங்கையில் நிகழ்கிறது. அயோத்தி மக்கள் இதனைக் காணவில்லை என்பதால் அவர்களுக்கு ஐயம் அகலவில்லை.
  • அப்போதுதான் ராமன் மிக அபூர்வமான முடிவை எடுக்கிறான். மக்கள் ஐயப்படும்படி அரசன் நடவடிக்கை இருக்கக் கூடாது என்று கூறுகிறான். அதனால், கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இந்தச் செயல் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஆணாதிக்க செயல் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் தீயில் இறங்கச் சொன்னதே அதிகம்; அப்படி தீயிலே இறங்கி தூய்மையை நிரூபித்த பிறகும், மக்கள் சந்தேகப்படுவதால் மனைவியைக் காட்டுக்கு அனுப்பவதா என்ற கேள்வி முக்கியமானதாகும்.
  • இணையத்தில் ஹோலி புக்ஸ் என்ற வலைத்தளத்தில் மன்மத நாத் தத் என்பவர் 1894ஆம் ஆண்டு ஆங்கில உரைநடையில் மொழியாக்கம் செய்த உத்தரகாண்டம் வாசிக்கக் கிடைக்கிறது. இதில் ராமன் மக்களைக் குறிப்பிடும்போது ‘சிட்டிசன்’ என்ற வார்த்தையையே மன்மதநாத் தத் பயன்படுத்துகிறார்.
  • மன்னராட்சியில் மக்களை சப்ஜெக்ட் என்றுதான் அரசியல் கோட்பாட்டாளர்கள் கூறுவார்கள். மக்களாட்சியில்தான் அவர்கள் குடிநபர்கள் என்னும் சிட்டிசன்களாக, உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
  • ஆனாலும்கூட, மன்னராட்சி காலத்திலேயே ராமன் மக்களின் ஐயத்திற்கு மதிப்புக் கொடுத்து தன் மனைவியையே காட்டுக்கு அனுப்பிவிடுகிறான் என்பது அரசாட்சிக்கு மக்கள் நம்பிக்கையே ஆதாரம் என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளது. ராமராஜ்யம் என்பதன் சிறப்பம்சம் மக்கள் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதுதான் எனலாம்.
  • குறிப்பாக ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக அரசாட்சி இருக்க வேண்டும் என்பது கருதத்தக்கது. ஆங்கிலத்திலும்கூட இந்தக் கருத்தை ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ (Caeser’s wife must be above suspicion) என்பார்கள். இதேபோன்ற ஒரு கருத்துதான் நீதித் துறை குறித்த கோட்பாட்டுச் சிந்தனையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நீதி வழங்கப்பட்டதாக காணப்படவும் வேண்டும்’ என்பதாகும். அதாவது, மக்கள் மனதில் நீதி வழுவாமை கடைபிடிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை நிலவ வேண்டும்.  

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 

  • சமகால மக்களாட்சியின் உயிர்மூச்சு மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல்கள்தான். இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் திரளைக் கொண்ட நாட்டில் எழுபதாண்டுகளுக்கு மேலாக மக்களாட்சி தேர்தல்கள் மூலம் நடைபெறுவது முக்கியமானதொரு மானுடவியல் சாதனை எனலாம். ஆனால், இந்தத் தேர்தல்களை நடத்துவது சுலபமல்ல. ஏராளமான நிர்வாகரீதியான சவால்கள் அடங்கியதாகத்தான் இந்தத் தேர்தல்கள் அமைகின்றன.
  • ஒரு முக்கியமான சவால் வாக்குச் சீட்டு அச்சிடுவது. எத்தனை வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்பதற்கு உச்சவரம்பு கிடையாது. கட்சிகளைத் தவிர சுயேச்சையாக பலரும் போட்டியிடுவார்கள். அப்படிப் போட்டியிடுவது மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படை என்பதால் தடுக்க முடியாது. நூறு பேர் போட்டியிட்டாலும், அனைவருக்கும் சின்னம் கொடுத்து லட்சக்கணக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிட வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சீட்டிலும் அனைத்து சின்னங்களும் இடம்பெற வேண்டும்.
  • இதனைச் சுலபமாக்க உருவான அறிவியல் தீர்வுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். அதில் எல்லாச் சின்னங்களும் பெயர்களும் வாக்குப் பெட்டியில் தெரியும். வாக்களார்கள் அவர்கள் தேர்வுசெய்யும் வேட்பாளருக்கு அருகிலுள்ள பொத்தானை அழுத்தினால் வாக்குப் பெட்டி அந்த வாக்கினை அதன் மின்னணு நினைவில் சேர்த்துக்கொள்ளும். இறுதியில் எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் என்று கூறிவிடும்.
  • இந்த நடைமுறையில் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், வாக்காளர் தான் யாருக்கான பொத்தானை எழுத்தினோமோ அவருக்குத்தான் வாக்கு பதிவானதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்ததுதான். இந்தக் குறையை நிவர்த்தி செய்ய ‘விவிபாட்’ (VVPAT – Voter Verifiable Paper Audit Trail) என்பதை அறிமுகப்படுத்தினார்கள். இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அருகிலுள்ள இன்னொரு பெட்டியில் வாக்காளர் எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தாரோ அந்தச் சின்னம் அச்சிடப்பட்ட சிறிய துண்டுச்சீட்டு ஒரு கண்ணாடி திறப்பிற்குப் பின்னால் தோன்றும்.
  • வாக்காளர் அதனைச் சரிபார்த்துக்கொண்டவுடன் அது அந்தப் பெட்டிக்குள்ளேயே விழுந்துவிடும். இதன் மூலம் தான் தேர்ந்தெடுத்த வாக்களாருக்குத்தான் தன் வாக்கு பதிவாகியது என்பதை வாக்களர் உறுதிசெய்துகொள்ளலாம். பின்னால் இந்தச் சீட்டுகளை எண்ணினால், மின்னணு கூறும் கூட்டுத்தொகையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
  • ஏற்கெனவே அனைத்து சின்னங்களும் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டில், தான் விரும்பும் சின்னத்தில் முத்திரை குத்தாமல், தான் விரும்பும் சின்னத்தை மட்டும் வாக்களாரே அச்சிட்டு பதிவுசெய்யும் முறையாக நாம் விவிபாட் இயந்திரத்தைக் கூறலாம். இதனால், அனைத்து சின்னங்களையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிடும் வேலை மிச்சமாகிறது என்பதால் வரவேற்கத்தக்கது.

மக்களின் ஐயமும், அதற்கான தீர்வும்

  • பொதுவாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தாங்கள் ஆதரித்த கட்சி வெற்றிபெறாவிட்டால் தேர்தலில் ஏதெனும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்று ஐயப்படுவது மக்கள் வழக்கம். ஏனெனில், மக்களின் உண்மையான விருப்பத்தின்படி பிரதிநிதிகளும், ஆளுங்கட்சியும் தேர்ந்தெடுக்கப்படுவதே மக்களாட்சியின் சாராம்சம். இதனை உறுதிசெய்ய வாக்குச்சாவடிகளில், வாக்கு எண்ணும் இடங்களில் எல்லாம் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கண்காணித்த வண்ணம் இருப்பார்கள். அதையும் தாண்டி பல்வேறு குறைபாடுகளும், வழக்குகளும் உருவாகத்தான் செய்யும்.
  • மின்னணு இயந்திரம் அறிமுகமான பிறகு, அதன் மூலம் வாக்குகளின் எண்ணிக்கையை மாற்றிவிட முடியும் என்ற ஐயம் மிகப் பரவலாக நிலவுகிறது. இதில் கணினி நிரல்கள் இயங்குவதால், அவற்றை வெளியிலிருந்து மாற்றிவிட முடியும் என்றோ, அல்லது உற்பத்திசெய்யும்போது அவற்றைத் தந்திரமாக அமைத்துவிடலாம் என்றோ பலவித ஐயங்கள் நிலவுகின்றன. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், அரசியல் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மின்னணு இயந்திரத்தின் மீது ஐயங்களைத் தெரிவித்த வண்ணமே இருக்கிறார்கள்.
  • தேர்தல் ஆணையம் ஐயங்களைக் கடுமையாக மறுத்துவருகிறது. ஆனாலும், பொதுவெளியில் ஐயம் மிகப் பரவலாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல மின்னணு இயந்திரங்கள் விநியோகம், பராமரிப்பில் பல கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. பிரச்சினை ஐயம் நியாயமானதா இல்லையா என்பதல்ல; ஐயமே இருக்கக் கூடாது என்பதுதான்.
  • இதற்கான ஒரு தீர்வு என்னவென்றால், விவிபாட் இயந்திரத்தில் பதிவான அனைத்து சீட்டுகளையும் எண்ணுவதுதான். அப்படிச் செய்தால் கண்ணுக்கு புலனாகாத மின்னணு நினைவினை மட்டும் நம்பாமல், திட்டவட்டமாக கணக்கிடக்கூடிய, சரிபார்க்கக்கூடிய ஒரு திடமான அடிப்படை உருவாகிவிடும். தேர்தல் ஆணையம் கடந்த தேர்தலில் ஐந்து சதவீத விவிபாட் சீட்டுகளைத்தான் எண்ணி சரிபார்ப்போம் என்று கூறிவிட்டது. அப்படிச் சரிபார்த்தபோது பல முரண்பாடுகள் தோன்றியதையும் காண முடிந்தது.
  • இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனைத்து விவிபாட் சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்று கோருகின்ற வழக்கு. உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளிக்கக் கூறியுள்ளது.
  • அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டியுள்ள பாஜக அரசு, ராமராஜ்யத்தை லட்சியமாகக் கொண்டுள்ளது. அந்த ராமராஜ்யத்தின் முக்கிய செய்தியே அரசு மக்களின் ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, தேர்தல் ஆணையம் ராமனின் முன்னுதாரணத்தை ஏற்றுக்கொண்டு நூறு சதவீதம் அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணிப்பார்த்து தேர்தல் முடிவை அறிவிக்க முன்வர வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குக் காத்திராமல் அது தானாகவே முன்வந்து இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும். அதனால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் சில நாட்கள் தாமதமானால் தவறொன்றுமில்லை. பல மாநிலங்களில் வாக்களித்த பிறகு நாற்பது நாட்களுக்கு மேல் காத்திருக்கும் மக்கள் கூடுதலாக நாலைந்து தினங்களானாலும் நிச்சயம் காத்திருப்பார்கள்.
  • மக்களாட்சி நடைமுறை ஐயங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பது அடிப்படை உரிமை, அடிப்படை நீதி, பொது அறம்.

நன்றி: அருஞ்சொல் (05 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories