TNPSC Thervupettagam

மின்னணு வாக்குப்பதிவு: புதிய சாத்தியங்களும் பிரச்சினைகளும்

January 28 , 2021 1399 days 615 0
  • மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி எவ்வளவோ விவாதிக்கப்பட்டிருக்கிறது. தீவிர ஆய்வுகளையும் தாண்டி இன்னும் அது நீடிப்பதற்கு அது வேறெந்த இணைப்புடனும் தொடர்பில் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது காரணமாகச் சொல்லப்படுகிறது.
  • இது தவிர, இந்தக் கருவியில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் தொழில்நுட்பரீதியிலும் நிர்வாகரீதியிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க ‘விவிபிஏடி’ முறையும் உள்ளது.
  • வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகின்றன.
  • ஆனால், வாக்குச்சீட்டு முறையில் கள்ள ஓட்டுகள், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் போன்ற முறைகேடுகள் இருந்ததை மறந்துவிட முடியாது.
  • ஆகவே, அந்த முறைக்குத் திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையமானது மின்னணு வாக்குப் பதிவு முறையை வலுவானதாகவும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பற்றதாகவும் ஆக்க வேண்டும்.
  • ஆயினும், ‘தொலை-வாக்குப்பதிவு’ (remote voting) முறை தொடர்பான வெள்ளோட்டம் தொடங்குவதைக் குறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் அறிவிப்பால் மறுபடியும் மின்னணு வாக்குப் பதிவு முறை தீவிர மதிப்பாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படப்போவது உறுதி.
  • இது குறித்துத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விரிவான எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை என்றாலும் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது, இதற்கென்று ஒதுக்கப்பட்ட மையங்களில் ‘இருவழி தொலை-வாக்களிப்பு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • கரோனா பெருந்தொற்று காரணமாகத் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியதால் ‘தொலை-வாக்குப்பதிவு’ என்ற தெரிவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
  • அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அஞ்சல் வாக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பதிவுசெய்த வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அஞ்சலில் வரும், அதில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வாக்கு மையங்களில் தருவார்கள்.
  • இல்லையென்றால், அதற்கென்றே உரிய பெட்டிகளில் இடுவார்கள். அமெரிக்கத் தேர்தலானது முழுக்க வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது. தொலை-வாக்குப்பதிவிலோ ‘பிளாக்செயின்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பமானது சங்கேதப் பணங்களில் (cryptocurrencies) பயன்படுத்தப்படுவதாகும். மையப்படுத்தப்பட்ட எந்த அமைப்பும் இல்லாமல் பரிவர்த்தனைகள் செய்யும் முறை இது.
  • இந்த அமைப்பில் வாக்காளர்கள் தங்கள் சங்கேதக் கையெழுத்துகளைப் பயன்படுத்தி, உள்நுழைந்து பதிவேட்டில் தங்கள் வாக்குகளைப் பதியலாம்.
  • இதிலுள்ள சங்கேத முறையானது தரவுகளின் பாதுகாப்புக்கும் சரிபார்ப்புக்கும் உத்தரவாதம் தருகிறது என்றாலும், இந்த அமைப்பானது ஒரு வலைப்பின்னலையும் கருவிகளையும் சார்ந்திருப்பதால் இணையம் சார்ந்த எந்த அமைப்புக்கும் உள்ள பிரச்சினைகள் இதிலும் வர வாய்ப்பிருக்கிறது.
  • 2020 நவம்பரில் அமெரிக்காவின் எம்.ஐ.டி., ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையானது ‘பிளாக்செயின்’ அடிப்படையிலான இந்தத் தொழில்நுட்பத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இதுபோல் எந்தத் தொழில்நுட்பத்தையும் பின்பற்றுவதற்கு முன்பு மக்களின் கருத்தறிதல் மிகவும் முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (28-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories