மின்வாரியத் தொழிலாளருக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டும்
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (டேன்ஜெட்கோ) தொழிலாளர்கள், பணியின்போது விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது துயரக்கதையாகவே தொடர்கிறது. அண்மையில் மின் பகிர்மானக் கழகம் அதன் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, தொழிலாளர்களின் ஆபத்தான பணிச்சூழல் மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.
- அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வது, அதிக மின் அழுத்த மின்சாரத்தை நெடுந்தூரத்துக்குக் கொண்டுசெல்வது, குறைந்த மின் அழுத்த மின்சாரத்தை நுகர்வோருக்கு விநியோகிப்பது ஆகிய ஆதாரமான வேலைகளை மின்பகிர்மானக் கழகம் செய்துவருகிறது.
- இயற்கைப் பேரிடர்களின்போது மின் விநியோகம் தடைபட்டாலும், போர்க்கால வேகத்தில் செயல்பட்டு மின் இணைப்புகளை மீட்டெடுப்பதில் இதனுடைய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. இந்த அமைப்பின் கைகளாகவும் கால்களாகவும் இருப்பவர்கள் களப்பணியாளர்கள்தான்.
- தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இவர்கள் பணிபுரிந்து வருவதுதான் நிரந்தர நடைமுறையாக உள்ளது. 2021-22இலிருந்து 2023-24 வரைக்கும் 87 பணியாளர்கள் இறந்துள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
- மின் பகிர்மானக் கழகம் இதைத் தடுப்பதற்குச் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இல்லை. பணியின்போது நவீனரகப் பாதுகாப்புக் கருவிகளின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மின்கம்பங்களையோ, மின்மாற்றிகளையோ பழுதுபார்க்கும்போது கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள ஃபோர்மேன், லைன் இன்ஸ்பெக்டர் போன்றோர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நிர்வாகம் கவனம்செலுத்துகிறது.
- அதற்காகத் தலைமைப் பொறியாளர்களுக்கும் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கும் பிப்ரவரி இறுதியில் விநியோக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் அத்தகைய நடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான். தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் ஏறக்குறைய 12 பேர் இறந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தொழிலாளர்களுக்குப் பொறியாளர்கள் வாரந்தோறும் பாதுகாப்புக்கான பயிற்சி வகுப்பு நடத்தவும், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனரா என்பதை உறுதிப்படுத்தவும் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்
- அதேவேளையில், களப்பணியாளர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதை அதிகாரிகளின் தவறுதலாகக் கூறுவதால் மட்டும், இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என மின்சார வாரியத் தொழிலாளர் சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன. 60,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. வயர்மேன், உதவியாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளில், குழி தோண்டுவது, மின் கம்பம் நடுவது போன்றவற்றுக்கு மட்டுமே பயிற்சி பெற்ற கேங்மேன்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
- ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரே பணியாளர், எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உடல் உழைப்பைச் செலுத்த வேண்டிய சூழல், பல சந்தர்ப்பங்களில் விபத்துக்குக் காரணமாகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பகிர்மானக் கழகம், 2023இல் ‘டிஎன்ஈபி சேஃப்டி’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியது.
- தொழிலாளர்கள் பாதுகாப்புக் கருவிகள், தகுந்த வழிமுறைகளோடு பணியில் ஈடுபடுவதைக் கண்காணிப்பாளர்கள் ஒளிப்படம் எடுத்து மேலிடத்துக்கு அனுப்புவதை இந்தச் செயலி கட்டாயம் ஆக்கியது. பல இடங்களில் ஒரே ஆளே எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டிய சூழலில், இந்தக் கண்காணிப்பு முறை நாளடைவில் நீர்த்துவிட்டதே நிதர்சனம்.
- விபத்துக்கு உள்ளாகும் தொழிலாளர் குறித்த புள்ளிவிவரங்களில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை காட்டப்படுவதே இல்லை எனவும் தொழிலாளர் அமைப்பினர் கூறுகின்றனர். பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தரமாக நியமிக்கும்படி ஒப்பந்தப் பணியாளர் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நிதிநெருக்கடியும் நிர்வாக விதிமுறைகளும் காரணமாக இருக்கலாம். உயிருக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது. இல்லையெனில், சுற்றறிக்கைகள் வெறும் அலுவலகச் சம்பிரதாயமாகவே நீடிக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)