TNPSC Thervupettagam

மின் நூலகம் தமிழுக்கு மகுடம்!

March 13 , 2019 2131 days 3688 0
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் மின் நூலகம் அமைப்பது குறித்து கீழ்க்கண்டுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டார்.
21-ஆம் நூற்றாண்டில்.....
  • நமது தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பழம்பெருமை பேசுவது அல்ல. 21-ஆம் நூற்றாண்டில் ஒரு மொழியின் தேவை என்பதைக் கண்டறிந்து அதனை 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும். ஆங்கிலத்தில் தேடுதல் சாதனம் வழியாக  உலகின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இந்த வாய்ப்பு தமிழ் மொழிக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். அதற்கு நவீன முன்மாதிரியான தமிழ் மின்நூலகத்தை உருவாக்க வேண்டும். அப்போது உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு உலக அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அவரவர்கள் வீடு தேடிச் சென்றடையும். தமிழ் மொழிக்கு உலக மொழி என்ற பெருமை கிடைக்கும். இதுவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்யத்தக்க மிகப் பெரிய தொண்டாகும்.
கணினி இணைய இணைப்பு
  • கணினியிலிருந்து இணைய இணைப்பு மூலமாக எந்தவிதமான தகவல்களையும், விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப  அறிவுத்தாள்களையும், எண்ணக் களஞ்சியங்களையும் தேடுதல் சாதனம் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது.
  • ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்கள் ஆங்கிலம்  தவிர சில மேற்கத்திய மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீஸ், ரஷ்யன் ஆகியவற்றில் மட்டுமே இயந்திர மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது. நாம் எந்த மொழியில் தரவுத் தளம் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலைப் பெற முடியும். இதே போல், ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் தகவல் களஞ்சியங்கள் கிடைப்பதைப் போல் தமிழர்களுக்குத் தமிழிலேயே கிடைக்கவேண்டும். அதற்கு, தமிழ் சார்ந்த இணைய மென்பொருள்களை தமிழ் மொழியில் ஒருங்குறி மூலமாக வடிவமைக்க வேண்டும்.
  • சிறந்த நூலகர் என இந்திய அரசின் தேசிய விருது பெற்றவரும், உலகின் 10 சிறந்த  நூலகர்களில் ஒருவர் என பாராட்டப் பெற்று அனைத்து நாட்டு விருதும் பெற்றவருமான பாலம் கல்யாணசுந்தரம் உண்மையான மக்கள் தொண்டர் என்பது அனைவரும் அறிந்ததே.
  • என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நாவுக்கரசரின் அடியொற்றி வாழ்பவர். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், அதற்கான ஒரு திட்ட வரைவையும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் அளித்து இந்தத் திட்டத்தின் பயன்பாடு பற்றியும் விளக்கிக் கூறினார்.
மின் நூலகம்
  • அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆசியாவிலேயே சிறந்த மின் நூலகம் அமைப்பது  தொடர்பான சிறப்புமிக்க தீர்மானத்தைத் தமிழக சட்டப்பேரவையில் 27-09-2005-இல் முன்மொழிந்து  நிறைவேற்றினார்.
  • ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்ட தகவல் தளத்தை தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்கு பிற மொழிகளில் உள்ள தகவல்களை மொழிபெயர்க்க, தளப்படுத்தத் தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இந்தப் பணி தொய்வின்றிச் செயல்படுத்தப்பட நிதி ஒதுக்கீடும், நிறுவனப்படுத்துதலும் அவசியமாகும். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
  • பிறகு, மறுமுறையும் முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றபோது, இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றது. 2014-ஆம் ஆண்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் இந்த மின்  நூலகத்தை சென்னையில் அமைப்பது என முடிவு செய்தார். அதற்கு  முதல் கட்டமாக கல்விப் பூங்கா ஒன்றை உருவாக்கவும், அதில் நடுநாயகமாக மின்  நூலகம் அமைக்கவும் அவர் முடிவு செய்தார். பல்வேறு காரணங்களினால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது தாமதமாயிற்று.
உதவிகள்
  • இந்தத் திட்டத்தை அரசோ, பெரிய நிறுவனமோ, செல்வந்தர்களோதான் நிறைவேற்ற முடியும். இந்தத் திட்டத்தை அரசு தொடங்கினால், அதற்குத் தேவையான உதவிகளை இலவசமாக அளிக்க, எச்.சி.எல்., மைக்ரோ சாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று பாலம் கல்யாணசுந்தரம் கூறுகிறார். இந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முன்வரவேண்டும். ஏற்கெனவே, தமிழ் இணையக் கல்விக் கழகம் ஒரு மின்நூலகத்தை ஏற்படுத்தி, சங்க காலம் முதல் தற்காலம் வரையுள்ள நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், கலைச் சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் போன்ற பகுதிகளுடன் செய ல்பட்டு வருகிறது.
  • தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் ரூ.26 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட ஒரு புதிய இணையதளத்தை 12-10-17 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கல்வித் திட்டங்கள், நூலகம், கணினித் தமிழ் ஆய்வு  உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். மேலும், தமிழ் இணைய கல்விக் கழகத்தால் ரூ.59 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையம் மென்பொருள்-2 என்பதையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இதுதவிர தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தப்பட்டவற்றை தொகுத்து முதல் கட்டமாக ரூ. 20 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் ஆற்றுப்படை என்னும் இணையதளம், தமிழ் மின்உலகம் என்ற இணைய தளம் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார். தற்போது தமிழ், தமிழர், தமிழ்மொழி, இலக்கியங்கள், கலைகள், தமிழ்நாட்டின் நிலவியல், வரலாற்றுச் சிறப்புமிக்க  ஊர்கள், ஆறுகள், மலைகள், தமிழகத் திருவிழாக்கள், பண்டையப் பெயர்கள், தமிழக மரம், செடி, கொடி, விலங்கினங்கள், கோயில்கள், சிற்பங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தகவல் தளங்களாக உருவாக்க தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக் கழகமும் கூட்டாக முயன்று வருகின்றன. இதற்கென அரசு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மதுரைத் திட்டம்  என்னும் தளம் அரிய பல தமிழ்நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் என தமிழில் மரபுச் செல்வங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்துள்ளது.
தரவுகள்
  • அனைத்தும் முறையாக பட்டியலிடப்பட்டு தரவுகளாகப் பதிவு செய்யப்படவேண்டியது இன்றியமையாததாகும். மூலப் படைப்புகள் எவ்வளவு முதன்மை வாய்ந்ததோ, அதைப் போலவே மூலத் தரவுகளும் மிக முதன்மை வாய்ந்தவையாகும். தரவுகளும், அறிவார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தத் தரவுகளைக் கொண்டே மேம்பட்ட உரைப் பதிப்பாய்வு, இயற்கை மொழியாக்கம், மொழி  வகைப்பாடு, வேர்ச்சொல், ஒப்பீட்டுப் பகுப்பாய்வு, மேம்பட்ட தேடல் போன்ற நவீன தொழில்நுட்ப ஆய்வு கருவிகளை உருவாக்க உதவிட வேண்டும்.
  • மொழி வளர்ச்சிக்கு இவை போன்ற தரவுகளும், அதற்கேற்ற கருவிகளும் மிக அவசியமாகும். மின்மயமாக்கப்பட்ட படைப்புகள், தரவுகள் ஆகியவற்றை உலகளாவிய அளவில் எவரும் தேடவும், மேற்கோள் காட்டவும், பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.
  • தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநர் 30-05-2012-இல் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மின்நூலகப் பணிகளில் அனுபவமுள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம்.  ஆனால், இதற்கு தமிழ் இணைய கல்விக் கழகம் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படவேண்டும்.  அப்போதுதான், மின்நூலகப் பணிகளுக்கென ஒரு தனித் துறையை உருவாக்கி அரசு  மற்றும்  தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைத்து தமிழ் மின்நூலகத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்ள முடியும். அல்லது தமிழக அரசின் உயர் கல்வித் துறை,  தகவல் தொழில்நுட்பவியல் துறை  ஆகியவற்றின் கீழ் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அவற்றின் மூலம் செயல்படுத்தலாம். அல்லது இந்தப் பணியை நிறைவேற்ற  தகுதிவாய்ந்த நிறுவனங்களையோ, தனியார் அமைப்பினரையோ கண்டறிந்து அவர்கள் மூலமும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு அரசு தேவையான நிதி ஆதரவை நல்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.
  • எனவே, தமிழ் மின்நூலகம் அமைக்கும் இந்தத் திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ள தனியார் அளிக்கும் நிதி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பயன்படுத்திக் கொள் வதோடு, இந்த நூலகத்தை உருவாக்க கணினிப் பொறியாளர்கள், பல்துறை அறிஞர்கள், நூலக அறிவியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்தத் திட்டத்தோடு தொடர்புடைய அரசுத் துறைகளின் செயலாளர்கள் ஆகியோரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகத் தமிழ் மின்  நூலகத்தை அமைப்பதன் மூலம்  நமது தமிழ் மொழியை உலக மொழியாக உயர்த்த முன்வருமாறு வேண்டுகிறேன்.
ஆசியாவில்....
  • முன்னாள் முதல்வரின்  இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஆசியாவிலேயே நவீன முன்மாதிரியான நூலகமாக இது அமையும்;  உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இதைப் பயன்படுத்த முடியும். தமிழகத்தில் சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்; உலக அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தையும் உடனுக்குடன் வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்; படிக்காதவர்கள்கூட இந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியும்.  இந்த நூலகத்தின் மூலம் தொலைக்காட்சி, பத்திரிகைகள், செல்லிடப்பேசி, நூலகம், கணினி ஆகிய ஐந்தின் பயன்களையும் ஒருங்கே பெறலாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு மிக விரைவாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதன் உச்சகட்ட சாதனையாகவும், 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முதலாவது மின் நூலகமாகவும், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு மைல்கல்லாகவும் இந்த நூலகம் திகழும். இந்த மின் நூலகத்தால் தமிழ் மொழிக்கு பன்னாட்டு மொழி என்ற பெருமை கிடைக்கும்;

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories