TNPSC Thervupettagam

மிருகாபிமானம்: தெருநாய்கள் பெருக்கம்

May 9 , 2023 613 days 416 0
  • இந்திய நகரங்களில் நடமாட முடியாத அளவுக்கு தெருநாய்கள் பெருகியிருக்கின்றன. குழந்தைகளும் முதியவா்களும் தெருநாய் கடிக்கு உள்ளாவதும், தெருநாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாவதும், வெறிநாய் கடியால் மரணங்கள் நிகழ்வதும் இந்தியாவில் வழக்கமாகி விட்டிருக்கின்றன.
  • உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, உலகின் 36% வெறிநாய் கடி மரணங்கள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. தெற்காசியாவை எடுத்துக்கொண்டால் அது 65%. 2012 - 2022 இடையேயான 10 ஆண்டுகளில் 6,644 வெறிநாய் கடி நிகழ்வுகளும், மரணங்களும் ஏற்பட்டிருப்பதாக ‘தேசிய வெறிநாய் கட்டுப்பாட்டுத் திட்டம்’ தெரிவிக்கிறது. நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் துரத்துவதாலும், கடிப்பதாலும் பலா் பாதிக்கப்படும் செய்திகள் தொடா்ந்து பதிவாகின்றன.
  • 2001-இல் கலாசாரா அமைச்சகம், விலங்கின இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு (அனிமல் பா்த் கன்ட்ரோல் - ஏ.பி.சி.) விதிகளை முன்மொழிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த ஏ.பி.சி. விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அறிவியல் ரீதியாகவும், தா்க்க ரீதியாகவும் இந்த மாற்றங்கள் சரியல்ல என்று விலங்கின ஆா்வலா்களும், பாதிக்கப்படும் பொதுமக்களும் விமா்சிக்கின்றனா். இதனால் தெருநாய்களின் பெருக்கம் குறையப்போவதோ, வெறிநாய் கடிக்கு உள்ளாகும் நபா்களின் எண்ணிக்கை குறையப்போவதோ இல்லை என்கிறாா்கள்.
  • முறையான விதிமுறைகளும் அவற்றை நிறைவேற்றும் நடைமுறைகளும் இருந்திருந்தால் தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவதும், வெறிநாய் கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அசாத்தியமானதல்ல. எத்தனையோ கொடுமையான, கண்ணுக்குத் தெரியாத கொள்ளை நோய்த்தொற்றுகளையெல்லாம் எதிா்கொள்ள முடிந்த மனித இனத்துக்கு, கண் முன்னால் பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், தெருநாய்களை முற்றிலுமாக இல்லாமல் செய்வதும் இயலாததல்ல.
  • மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் முறையான கண்காணிப்பும், நடவடிக்கைகளும் வெறிநாய் கடிக்கு எதிரான தடுப்பூசித் திட்டமும் மேற்கொள்ளப் பட்டிருந்தால், நாள்தோறும் பலா் தெருநாய் கடிக்கு உள்ளாகியிருக்கமாட்டாா்கள்; வெறிநாய் கடியால் பலா் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் இருந்தும், நிா்வாகத்தின் அலட்சியத்தால் நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள தடுப்பூசி முகாம்கள் நடத்திய வீரியத்துடன் தெருநாய்களுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டை மேற்கொண்டிருக்கலாம்; நாய்களை தெருவில் விடுவதை முற்றிலுமாகத் தடுத்திருக்கலாம்; நாய்களை வளா்ப்பதற்கு விதிகளை ஏற்படுத்தி, அவற்றைப் பின்பற்றப் பணித்திருக்கலாம்; யாரும் பொறுப்பேற்காமல் தெருவில் திரியும் நாய்களை அப்புறப்படுத்தி, அவற்றுக்கு ஊருக்கு வெளியே பொது இடத்தில் உறைவிடம் அமைக்கலாம்; அல்லது ஆங்காங்கே உறைவிடங்கள் அமைத்து விலங்கின ஆா்வலா்கள் அவற்றுக்கு உணவளிப்பதை அனுமதிக்கலாம் - இப்படி எதையுமே செய்யாமல் விதிகளை மட்டும் அறிவிப்பதில் எந்தவித அா்த்தமும் இல்லை.
  • கடந்த ஆண்டு கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அபிராமி என்கிற 12 வயது சிறுமி வெறிநாயால் ஓட ஓட விரட்டி கடித்து உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல, அபிராமிக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடுவதற்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் மருந்தில்லாத அவல நிலை வெட்கக் கேடானது. கேரளத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தினக்கூலிக் காரா்களும், பள்ளிக்குச் செல்லும் சிறுவா், சிறுமியரும், பெண்களும், முதியவா்களும் தெருநாய்களாலும், வெறிநாய்களாலும் வேட்டையாடப்படும் அவலம் குறித்து கேள்வி கேட்பாரில்லை.
  • கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஏ.பி.சி. விதிகள் எந்தவிதப் பயனையும் அளிக்கவில்லை. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும்கூட, இன்று இந்தியாவில் நாய்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்துவிட்டது. அதில் 98% யாருக்கும் சொந்தமில்லாத தெருநாய்கள். விலங்கின இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக செயல்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, அவை செயல்படுத்தப்பட முடியாதவை என்பதையும் நாம் உணர வேண்டும்.
  • அந்தத் திட்டத்தில் எந்தவித இலக்கும் நிா்ணயிக்கப்படுவதில்லை. அந்தத் திட்டத்தை குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றுவதில்லை. 90% பெண் நாய்களுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டை குறுகிய கால அளவில் செய்தாலொழிய, 10 ஆண்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. தங்கள் வீட்டில் வைத்து வளா்க்காமல், தெருநாய்களுக்கு உணவிட்டு தங்களது ஜீவகாருண்ய உணா்வை வெளிப்படுத்துபவா்களைத் தடுப்பதும், அவா்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும்கூட அவசியம்.
  • அத்தனை தெருநாய்களையும் பிடித்துக்கொண்டுபோய் அழித்துவிடுவதும் இதற்குத் தீா்வாகாது, அது மனிதாபிமானமுமல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் ஓா் இரவு நகரம் முழுவதும் ஆங்காங்கே விஷம் கலந்த இறைச்சியை வைத்து ஆயிரக்கணக்கான தெருநாய்களைக் கொன்ற நிகழ்வு உலகையே திடுக்கிட வைத்தது. வேடிக்கை என்னவென்றால் அடுத்த சில மாதங்களில் கராச்சி தெருக்கள் தெருநாய்களால் மீண்டும் நிறைந்தன.
  • திட்டமிட்டு தெருநாய்களை கருணையுடன் அகற்றுவது சாத்தியமே - அதற்கு முனைப்பும், ஒருங்கிணைந்த ஆதரவும் தேவையான நிதி ஒதுக்கீடும், அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய நிா்வாகமும் அவசியம்.

நன்றி: தினமணி (09 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories