- சமீபத்தில் பிரான்ஸில் காலமான பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மிலன் குந்தேரா (Milan Kundera) பிரான்ஸைப் பூர்விகமாகக் கொண்டவரல்ல. அவர் செக்கோஸ்லோவாகியாவில் (1929) பிறந்தவர். தன்னுடைய 46ஆவது வயதில் அரசியல் காரணங்களுக்காக பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு வந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை கிடைத்தது.
- அவர் தன் தாய் நாட்டைவிட்டு வெளியேறியதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருப்பினும், அவர் பொதுவுடைமைக் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளில் ஏற்பட்ட முரண்பாடுகள்தாம் முக்கியமானவை. அவர் 1947இல் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து அயராது உழைத்தவர். இந்நிலையில், அவர் அக்காலகட்டத்தில் எழுதிய கட்டுரை ஒன்றுதான் அவருடைய புலப்பெயர்வுக்குக் காரணமாகிவிட்டது. அவரே அது பற்றி ‘நையாண்டி’ (The Joke, 1967) எனும் நாவலில் குறிப்பிடுகிறார்: ‘1948இல் பொதுவுடைமைக் கட்சி என் நாட்டில் வெற்றி பெற்றது.
- நானும் மற்ற மாணவர்களும் அதனைக் கைகோத்துக் கொண்டாடினோம். பின்னர் ஒரு நாள் நான் ‘சொல்லக் கூடாத ஒன்றை’ச் சொல்லிவிட்டேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். நானும், அந்த ஆட்டத்திலிருந்து கழன்றுகொண்டேன்’ அவர் ‘சொல்லக் கூடாத ஒன்று’ எனக் குறிப்பிட்டது ‘வாழ்க ட்ராட்ஸ்கி’ என்கிற கோஷம்தான்.
- தாய்நாட்டில் தடை: ரஷ்யாவில் ஸ்டாலினை எதிர்த்து அதிகாரப் போட்டியில் ஈடுபட்ட ட்ராட்ஸ்கி (Trotsky), அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தார். 1956ஆம் ஆண்டு மிலன் குந்தேரா தற்காலிகமாகக் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தார். 1968ஆம் ஆண்டு ‘பிராக் வசந்தம்’ (Prague Spring) எனும் இயக்கம் வந்தது. 2010ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ‘அரபு வசந்த’த்துக்கு முன்னோடியாக இந்த இயக்கம் கருதப்படுகிறது.
- ஆட்சியின் மீது மக்களிடம் இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆட்சியை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்களில் மிலன் குந்தேராவும் ஒருவர். ஆகவே 1970இல் அவர் கட்சியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டார். செக்கோஸ்லோவாகிய எழுத்தாளர் சங்கமும் அவரை அதிரடியாக விலக்கிவிட்டது. அதன்பின் தன் தாய்நாட்டிலேயே தன் படைப்புக்களை வெளியிட முடியாதபடி அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
- 1950களில் செக் மொழியில் அவர் எழுதிய மூன்று கவிதைத் தொகுதிகளையும், ‘நையாண்டி’ நாவலையும் தவிர, மற்றவையெல்லாம் பிரான்ஸில்தான் வெளிவந்தன. அவருடைய இலக்கியப் படைப்புகள் பலதரப்பட்டவை. கவிதை, கட்டுரை, நாடகம், நாவல் ஆகிய அனைத்து இலக்கிய வகைகளிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். தொடக்கக் காலத்தில் தன் தாய்மொழி செக்கில் எழுதிவந்தார். பிரான்ஸில் குடியேறியதும் தன்னுடைய செக் மொழிப் படைப்புகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். 1993இலிருந்து நேரடியாக பிரெஞ்சு மொழியில் எழுத்தத் தொடங்கினார். தான் ஒரு பிரெஞ்சு எழுத்தாளராகவே கருதப்பட வேண்டுமென்றும் விரும்பினார். அவர் நாவல்களில் பெரும்பாலானவை அவருடைய தாய்நாடான செக்கோஸ்லோவாகியாவைப் பின்புலமாகக் கொண்டவை.
- ‘சிரிப்பும் மறதியும்’ (The Book of Laughter and Forgetting, 1979) இந்நாவலின் கதை செக்கோஸ்லோவாகியாவில் நடக்கிறது. அடக்குமுறை, அதிகார எல்லை மீறல் ஆகியவற்றைச் சமாளிக்க இரண்டு ஆயுதங்கள்தாம் இருந்தன; ஒன்று: சிரிப்பு, மற்றொன்று: மறதி. ஏழு பகுதிகள் கொண்ட இந்நாவலின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு சிறுகதையாகப் படிக்கலாம். தமீனாவைப் பற்றிய கதை ஓர் எடுத்துக்காட்டு. தாய்நாட்டுக்கு வெளியில் இருந்த தமீனா ‘பார்’ ஒன்றில் வேலை செய்கிறாள். இறந்துபோன அவள் கணவன் இறப்பதற்குமுன் அவளுக்கு எழுதிய காதல் கடிதங்களைத் தவறுதலாகச் செக் நாட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்.
- அவளால் அங்கு திரும்பிப் போக முடியவில்லை. ஆனால், அவற்றை மீட்டெடுக்கும் ஆவல், அவளை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவளைக் காதலிக்கும் உய்கோ என்ற இளைஞன் அங்கு போய்வர ஒப்புதல் தெரிவிக்கிறான். அதற்குக் கைம்மாறாக, அவன் அவள் உடலுக்கு விலை பேசுகிறான். அவளும் சம்மதிக்கிறாள். ஆனால், உடலுறவில் அவள் முழுமனதோடு ஈடுபடவில்லை என்பதை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட உய்கோ, தான் செக்கோஸ்லோவாகியாவுக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு விடுகிறான்.
- தமீனா அந்தக் கடிதங்களை மறந்துவிட வேண்டும். ஆனால், முடியவில்லை. மனதிலேயே தன் தாய்நாட்டு வரலாற்றையும் பொதுவுடைமை ஆட்சியின் அத்துமீறலையும் அடக்குமுறையையும் நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.
- நீட்சே மீதான விமர்சனம்: மிலன் குந்தேராவின் பெரும்பாலான நாவல்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு மேலை இலக்கியத்திலும், மேலைத் தத்துவத்திலும் ஓரளவுக்குப் பரிச்சயம் வேண்டும். பிரான்ஸ் நாட்டில் குடியேறிய காலகட்டத்தில் பிரான்ஸில் இருத்தலியம் (Existentialism) எனும் தத்துவக் கொள்கை பிரபலமாகியிருந்தது. இருத்தலியத்தில் பிரபலமான சார்த்தர் (Sartre) பாணியில் இவருடைய நாவல்களிலும் இடையிடையே கருத்தியல் விவாதங்கள் இடம்பெறுகின்றன.
- பிரான்ஸில் வெளியான ‘வாழ்க்கையின் சமாளிக்க முடியாத பாரமின்மை’ (The Unbearable Lightness of being, 1984) நாவல்தான், ஆசிரியரின் மற்றெல்லா நாவல்களையும்விட அதிக அளவில் சிலாகித்துப் பேசப்படுகிறது. நாவலின் முதல் பக்கத்திலேயே ஜெர்மன் தத்துவமேதை நீட்சேவை (Nietzsche) வம்புக்கு இழுக்கிறார். இந்த வாழ்க்கையின் சம்பவங்கள், நிகழ்வுகள் அனைத்தும் அதே வரிசையில் நமக்கு மீண்டும் நடைபெற்றால் (eternal recurrence) நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிய நீட்சேவின் கோட்பாட்டைக் கேலி செய்கிறார். மிலன் குந்தேராவின் அணுகுமுறை வேறு கோணத்தில் அமைகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைதான் கிடைக்கிறது. இன்னொரு வாழ்க்கை கிடைத்தால் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, குற்ற உணர்வு எதுவுமின்றி மகிழ்ச்சியாக வாழலாம். இந்த ஒரு வாழ்க்கை மட்டுமே கிடைத்திருப்பதால், அது இயலாது போய்விடுகிறது.
- ‘இறவாமை’ (Immortality, 1990), பிரபல ஜெர்மன் எழுத்தாளர் கதே (Goethe) பற்றிய இந்த நாவலில் அவரோடு வாழ்ந்த பெட்டினா அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வரலாற்றில் தனக்கொரு இடம்பிடிக்க முயல்கிறாள். இந்நாவலின் தொடக்கத்தில் கதைசொல்லி அறுபது, அறுபத்தைந்து வயதுப் பெண்மணி ஒருத்தி, நீச்சல் குளத்திலிருந்து எழுந்து வருவதைப் பார்க்கிறார். வயது முதிர்ச்சியால் அவள் தன் அழகை இழந்திருந்தாலும், அவள் தன் வயதை மறந்துவிட்டு, நீந்தி முடித்த பின் ஒய்யாரமாக நடந்து வரும் பாங்கைப் பார்த்துக் கதைசொல்லி தன் எண்ணத்தை எடுத்துரைக்கிறார்: ‘நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு பகுதி, காலத்துக்கு வெளியே நிற்கிறது. நம் வயதைப் பற்றி எப்போதாவதுதான் நினைப்போம். மற்ற நேரங்களில் நமக்கு வயது மறந்துபோகும்’.
- செக், பிரெஞ்சு மொழிகளில் குந்தேரா எழுதியவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் ஆழமானவை; வரலாற்றுப் பார்வை கொண்டவை. இன்றும் இவரது படைப்புகள் வாசிக்கப்படுவதற்கு இவையே முதன்மைக் காரணம் எனலாம்.
நன்றி: தி இந்து (16 – 07 – 2023)