- வரலாறு அதன் உருவாக்கத்திலும், அது நினைவுகூரப்படுவதிலும், எழுதப் படுவதிலும் தொடர்ந்து அதிகாரச் சமன்பாடுகளை, ஆதிக்கக் கருத்தியலை அனுசரித்தே செயல்படுகிறது. அதிகாரத்தின் செயல்பாடுகளுக்கும் வரலாற்றுக்கும் உள்ள இந்த நுட்பமான வலைப் பின்னலின் பரிமாணங்களை வெகுசிறப்பாக விவாதிக்கும் சிறிய நூல் ஒன்று உண்டென்றால், அது ‘Silencing the Past: Power and Production of History’ என்ற நூல்தான். இதை எழுதிய மிஷேல் ரால்ஃப் டிரியோ (Michel-Rolph Trouillot, 1949-2012) மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான ஹைட்டியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
- இந்த நூலை வழமையான வரலாற்றை மெளனமாக்குதல் என்ற சொல்வழக்கில் கூறாததற்குக் காரணம், அவர் பயன்படுத்தும் ஒரு உருவகம்தான். வரலாற்று நிகழ்வுகள் நடைபெறும்போதே அதில் எளியவர்களின், அடித்தள மக்களின் பங்கேற்பு சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி போலச் செயல்படுகிறது என்று கூறுகிறார். அது வெடிக்கும்; அதன் ஒலி கேட்காது. அடித்தளப் பணியாளர்கள் உயிரைப் பணையம் வைத்துச் செய்யும் சாதனைகளுக்கான அங்கீகாரம் உயரதிகாரிகளுக்குச் செல்வதைக் காண முடியும்.
- அந்த அடித்தள மனிதர்களெல்லாம் ஒலியற்று வெடித்த துப்பாக்கிகள்தான். ஆனால், டிரியோ இந்த எளிய உண்மையை மட்டும் கூறவில்லை. அப்படிச் சில நிகழ்வுகளோ நபர்களோ அறியப்பட்டாலும் அதன் முக்கியத்துவம் ஒருபோதும் பேசப்படாது என்றும் கூறுகிறார். ஏனெனில், வரலாற்று எழுதியலுக்கென்று ஒரு நோக்குநிலை, முன்முடிவு, சார்புநிலை உருவாகிறது. அதனை ஒட்டித்தான் எந்த நிகழ்வும் புரட்சியும் போராட்டமும் குறித்து எழுதப்படும்.
ஹைட்டியின் முன்வரலாறு
- கொலம்பஸ் 1492இல் மேற்கிந்தியத் தீவுகளைச் சென்றடைந்த பின், ஹைட்டியில் இருந்த சொற்ப பூர்வகுடிகள் தொற்றுநோயில் இறந்துவிட்டார்கள். 17ஆம் நூற்றாண்டில் அங்கே குடியேறிய பிரெஞ்சுக்காரர்கள், ஆப்ரிக்கக் கறுப்பின அடிமைகளைக் குடியேற்றி, அங்கே கரும்பு, காப்பித் தோட்டங்களை உருவாக்கினார்கள். அதன் பலனாக பிரான்ஸில் பலர் பெரும் பணக்காரர் ஆனார்கள். அடிமைகளின் உழைப்பை ஈவிரக்கமின்றிச் சுரண்டினார்கள். அதனால் அடிமைகள் இறந்துபோனால், மேலும் அடிமைகளை ஆப்ரிக்காவிலிருந்து கூட்டிவந்தார்கள்.
- ஒரு சில தலைமுறைகளில் பிரெஞ்சுக்காரர்களும் ஆப்ரிக்கர்களும் கலந்த கலப்பின மனிதர்கள் உருவானார்கள். அடிமைகளில் சிலர் ஒரு சில தலைமுறைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, அவர்கள் ஆண்டைகளின் பணியாளர்களாக, கங்காணிகளாக, நகர்ப்புறத்தில் கூலிகளாக விளங்கினார்கள்.
- முழுமையான பிரெஞ்சுக்காரர்களான முதலாளிகள், சுதந்திரமான கலப்பின மனிதர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட அடிமைகள், பெருந்திரளான கறுப்பின அடிமைகள் என மூன்று பிரிவுகள் ஹைட்டியில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தன. மற்ற இரண்டு பிரிவுகளைவிட அடிமைகளின் எண்ணிக்கை 10 மடங்கு இருந்தது.
பிரெஞ்சுப் புரட்சியும், ஹைட்டி அடிமைகளின் புரட்சியும்
- வட அமெரிக்கக் காலனிகளில் குடியேறிய பிரிட்டிஷ்காரர்கள், 1776இல் சுதந்திர நாடாகத் தங்களை அறிவித்துக்கொண்டார்கள். மன்னர் இல்லாத உலகின் முதல் மக்களாட்சிக் குடியரசாக அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சுப் புரட்சி பெருவெடிப்பாக நிகழ்ந்தது. புகழ்பெற்ற ‘மனிதர்கள் - குடிமக்களின் உரிமைப் பிரகடனம்’ என்பதை 1789இல் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் வெளியிட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற முழக்கம் உலகெங்கும் பரவியது.
- ஆனால், அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அனைத்து மனிதர்களின் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுத்த புரட்சியாளர்களால், அடிமைகளுக்கும் உரிமைகள் உண்டா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கறுப்பின அடிமைகளும் ஐரோப்பியர்களைப் போல மனிதர்களா, இல்லை ஒரு மாற்றுக்குறைவான, உழைத்து மாயவே பிறந்த உயிரினமா என்பதில் அவர்களுக்கு நிச்சயமிருக்கவில்லை. ஏனெனில், சுதந்திரவாதச் சிந்தனைகளை ஆதரித்த வணிகர் - தொழில்முனைவோர் அடங்கிய பூர்ஷ்வா வர்க்கம் வளர்ச்சி அடைந்ததற்கு, அடிமைகளின் உழைப்பினைச் சுரண்டுவது மூலாதாரமாக இருந்தது.
- அதனால், தங்களுக்கு உரியதான சுதந்திரம், அடிமைகளுக்கு உரியதல்ல என்று அவர்கள் இன வேற்றுமை அடிப்படையில் கற்பித்துக்கொண்டார்கள்; அடிமைகளுக்குச் சுதந்திர வேட்கை கிடையாது என்று கூறினார்கள். அந்த மனோபாவத்துக்கான சம்மட்டி அடிதான் பிரெஞ்சுப் புரட்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ஹைட்டி அடிமைகளின் புரட்சி. 1791 முதல் 1804 வரை பல கட்டங்களாக, அலை அலையாக வெடித்த இந்தப் புரட்சி அல்லது சுதந்திரப் போர், 1804இல் அடிமைகளின் சுதந்திர நாடாக ஹைட்டியை அறிவித்த பிறகே ஓய்ந்தது. ஆம்;
- கறுப்பின அடிமைகளுக்கும் சுதந்திரத் தாகம் இருந்தது. அதற்காகப் போராடவும், நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகளை, ஏகாதிபத்தியக் கனவுடன் வந்த பிரிட்டிஷ் படைகளை நிர்மூலம் செய்யவும் ஆற்றல் இருந்தது. ஆனால், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளைப் பற்றி அறிந்துள்ளவர்கள் பலர் ஹைட்டி அடிமைகளின் புரட்சியைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்; அறிந்தாலும் அதன் மகத்துவத்தைப் பேச மாட்டார்கள்.
புரட்சி செய்தவர்கள் யார்?
- ஐரோப்பிய, உலக வரலாற்றை எழுதுபவர்கள் அடிமைகளைப் பற்றியும், ஹைட்டி அடிமைகள் புரட்சி (1791-1804) குறித்தும் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அது குறித்து எழுதுபவர்களும் யார் புரட்சி செய்தது என்பதில் உருவாகும் சமமின்மையும் முக்கியப் பிரச்சினையாகிறது.
- புரட்சியின் நாயகனாகக் குறிப்பிடப்படுபவர் டூசான் லுவார்சர் என்ற விடுவிக்கப்பட்ட அடிமை. டெஸ்ஸாலீன், ஹென்றி கிறிஸ்டோஃப், அலெக்ஸாண்ட்ரே பெடியோன் ஆகியோர் முக்கியத் தளபதிகள், விடுதலைக்குப் பிறகு ஹைட்டியை ஆண்டவர்கள்.
- ஆனால், சான் சூஸி என்ற ஒரு அடிமைத் தளபதி எப்படி மறக்கப்பட்டார் என்பதை டிரியோ விளக்குகிறார். முக்கியமாக 1802இல் நெப்போலியன் படைகள் டூசான் லுவார்சரைக் கைதுசெய்து, பிரான்ஸுக்குக் கொண்டு சென்ற பிறகு, மற்ற மூவரும் பிரெஞ்சுக்காரர்களுடன் சமரசம் செய்துகொண்டபோது, சான் சூஸி மலைக்காடுகளில் மறைந்திருந்து கொரில்லா போர்முறையில், தொடர்ந்து அடிமைகளைத் திரட்டிப் போராடி மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
- ஆனால், இவர் ஹென்றி கிறிஸ்டோஃபுக்கு அடிபணிய மறுத்ததால் கொல்லப்பட்டார். அந்த இடத்தினருகே ஹென்றி கட்டிய பிரம்மாண்ட மாளிகைக்குச் சான் சூஸி பெயரை வைத்தாலும், அதன் வெளிப்படையான முக்கியத்துவத்தை வரலாற்று ஆசிரியர்கள் எப்படி உணர, எழுதத் தவறினார்கள் என்பதை டிரியோ விரிவாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நன்றி : இந்து தமிழ் திசை (28– 08 – 2023)