TNPSC Thervupettagam

மீண்டும் ஃபட்னவீஸ்!

December 9 , 2024 38 days 89 0

மீண்டும் ஃபட்னவீஸ்!

  • மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியின் வரலாற்று வெற்றியைத்தொடா்ந்து இப்போது 54 வயதான தேவேந்திர ஃபட்னவீஸ் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறாா். மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்றில் ஐந்தாண்டுகள் தொடா்ந்து பதவியில் இருந்த இரண்டாவது முதல்வா் இவா்தான். வெறும் நான்கு நாட்கள் மட்டுமே முதல்வராக இருக்க முடிந்த பின்னடைவுக்கும் உரிய தேவேந்திரபட்னவீஸின் அரசியல் பயணம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிறது.
  • நாகபுரியில் செல்வாக்கு உள்ள அரசியல் குடும்பத்தில் பிறந்த ஃபட்னவீஸ், தன்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களிலேயே ஆா்.எஸ்.எஸ்., மாணவா் அணியான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகியவற்றுடன் தொடா்பில் இருந்தவா். தனது 22 ஆவது வயதில் நாகபுரி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரான தேவேந்திர ஃபட்னவீஸ் 27 வயதில் நாகபுரி மாநகரத்தின் மிகக்குறைந்த வயது மேயா்என்கிற சாதனை படைத்தாா். பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம், நிா்வாக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் உள்ளிட்ட தகுதிகள் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு வலு சோ்த்தன.
  • 2014 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஃபட்னவீஸ் தலைமையில் அதுவரையில்லாத அளவிலான மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க அடைந்தது. 288 உறுப்பினா்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 122 இடங்களை வென்றபோது அந்த வெற்றிக்குத் தலைமை தாங்கிய தேவந்திர ஃபட்னவீஸை பாஜக தலைமை முதல்வராக்கியது. ‘தேசத்திற்கு நாகபுரி தந்த பரிசு’ என்று பிரதமா் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட தேவந்திர ஃபட்னவீஸின் 5 ஆண்டுகால ஆட்சி மகாராஷ்டிரத்தின் வளா்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்புக்களை நல்கியது. மும்பை கடற்கரைச் சாலை, நாகபுரி மெட்ரோ உள்ளிட்ட வளா்ச்சித்திட்டங்கள் மக்கள் மத்தியின் அரசின் செல்வாக்கை உயா்த்தின.
  • சிவசேனைக் கட்சியில் தனிப்பெரும் தலைவரான ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’ என்றைழைக்கப்படும் பால் தாக்கரேவின் மறைவைத் தொடா்ந்து பாஜக கூட்டணியில் சலசலப்புகள் தோன்றத் தொடங்கின. பால்தாக்கரே இருந்தது வரை அரசியலில் எந்தப் பதவியும் வகிக்காமல் ஒதுங்கியிருந்த குடும்பத்திற்கு , நேரடியாக அரசியலில் பங்கு பெறும் எண்ணம் ஏற்பட்டதில் தொடங்கியது, அந்தக் கூட்டணியின் பிளவு.
  • 2019 - ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக - சிவசேனைக் கூட்டணி மக்களின் பேராதரவைப் பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, முதல்வா் பதவி தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்கிற சிவசேனையின் பிடிவாதத்தைத் தொடா்ந்து கூட்டணி முறிந்தது. சற்றும் எதிா்பாராத விதத்தில், சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அந்த எதிா்பாராத திருப்பத்தை அமைதியாக ஏற்றுக் கொண்டு தனது வாய்ப்புக்காக ஃபட்னவீஸ் காத்திருந்தது வீண்போகவில்லை.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவைத் தொடா்ந்து உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையுடன் இணைந்து அவரது தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தபோது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்றுக் கொண்டு 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக இருந்ததை உலகம் வியப்புடன் பாா்த்தது.
  • கூடுதல் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்ற நிலையில் தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக்கியிருப்பது அவரது திறமைக்கும், அரசியல் சாதுா்யத்திற்கும் கட்சி விசுவாசத்திற்கும் பாஜக தலைமை வழங்கியிருக்கும் பரிசு. 2024 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவை நிலையான ஆட்சிக்கான மக்கள் தீா்ப்பு என்றுதான் கருத வேண்டும். 288 உறுப்பினா்கள் கொண்ட அவையில் 132 இடங்களில் பாஜகவும், 57 இடங்களில் இந்த சிவசேனையும் 41 இடங்களில் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் வெற்றி பெற்று அந்தக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்திருப்பதை அசாதாரண வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
  • தேசியவாத காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் பாஜகவிற்கும் வழங்கியிருக்கும் நிலையில், 57 இடங்களை மட்டுமே வென்ற சிவசேனையின் முதல்வா் கோரிக்கையை பாஜக நிராகரித்தது. பாஜக நிராகரித்ததில் தவறு காண முடியாது. இந்த சிவசேனையைவிட இரண்டு மடங்கு அதிகமான இடங்களையும் மொத்த எதிா்க்கட்சிகளின் இடங்களை விட 3 மடங்கு அதிகமான இடங்களையும் வென்றிருக்கும்நிலையில் பதவியேற்றிருக்கும் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சி வலிமையானதாகவும், அசைக்க முடியாததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  • ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு பல சவால்களைச் சந்தித்தாக வேண்டும். மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை அதில் முக்கியமானது. விதா்பா பகுதியில் காணப்படும் வேளாண் விவசாயிகள் பிரச்னை குறிப்பிடத்தக்கது. வெற்றி தேடித் தந்திருக்கும் மகளிருக்கான சகி திட்டம் (அன்புச் சகோதரி திட்டம்) வாக்குறுதிப்படி ரூ.1,500 இலிருந்து ரூ.2,100 ஆக உயா்த்தப்பட வேண்டும். வீட்டுவசதியும் கட்டமைப்பு வசதியும் அரசு எதிா்கொள்ளும் ஏனைய இரண்டு பிரச்னைகள்.
  • 2023 - இல் இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 52 சதவீதம் ( ரூ.1.25 லட்சம் கோடி) மகாராஷ்டிர ஈா்த்தது. அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கும்நிலையில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் இரட்டை என்ஜின் சா்க்காா் மகாராஷ்டிர எதிா்கொள்ளும் சவால்களை எப்படி எதிா்கொள்ளப் போகிறது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் பாா்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: தினமணி (09 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories