- கனடாவில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சமீபத்தில் நடந்த திடீா் தோ்தலில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும்கூட, சிறுபான்மை அரசை அமைக்கும் வாய்ப்பு லிபரல் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது.
- தனிப்பெரும்பான்மை பெறவேண்டும் என்கிற நோக்கில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தோ்தலுக்கு வழிகோலிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது.
- ஆளும் லிபரல் கட்சியின் செல்வாக்குச் சரிவை தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தினாலும் கூட, மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்குத்தான் இருக்கிறது என்பது அவருக்கு சற்று ஆறுதல்.
- 338 போ் கொண்ட கனடா மக்களவையில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. எரின் ஓசூன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி 123 இடங்களைத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது.
- தனிப்பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்பதால், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த முறை போலவே இம்முறையும் சிறுபான்மை ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
- பிரதமா் ட்ரூடோவைப் பொறுத்தவரை, லிபரல் கட்சியின் வெற்றி ஒருவகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
- கனடாவில் தொடா்ந்து மூன்று முறை பிரதமராகும் எட்டாவது நபா் ஜஸ்டின் ட்ரூடோ. அவரது தந்தை பையரியும் இதேபோல மூன்று முறை பிரதமராக இருந்தவா்.
- கடந்த ஐந்து வாரங்கள் நீண்டு நின்ற தோ்தல் பிரசார கருத்துக் கணிப்புகளில் பின்னடைவைச் சந்திப்பதாகக் கூறப்பட்ட பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அளவிலான வெற்றி யாருமே எதிர்பாராதது. தனிப்பெரும்பான்மை கிடைக்காதது வருத்தமாக இருந்தாலும்கூட, மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் அவா் மகிழ்ச்சி அடையலாம்.
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
- கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் ஹூபெக் பிரதேசத்தில் பெரும்பான்மையான இடங்களில் ப்ளாக் கியூபெக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
- அதேபோல, புதிய ஜனநாயகக் கட்சி 29 இடங்களை வென்றிருக்கிறது. அதுபோன்ற கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் தனது சிறுபான்மை அரசை பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் அமைக்க இருக்கிறார்.
- சிறுபான்மை அரசுகள் கனடாவுக்கு புதிதொன்றும் அல்ல. கடந்த ஏழு தோ்தல்களில் ஐந்து தோ்தல்கள் பெரும்பான்மை அரசுக்குத்தான் வழிகோலின.
- அந்த ஆட்சிகளும் சராசரியாக இரண்டு ஆண்டுகள்தான் தாக்குப்பிடித்தன. எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மாறுபட்ட கருத்துகள் கொண்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால், பிரதமா்களால் தாங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்பது சிறுபான்மை அரசுகளின் மிகப்பெரிய பிரச்னை.
- தன்னிச்சையாக ஆட்சி அமைக்கவோ முக்கியமான அதிரடி முடிவுகளை எடுக்கவோ பிரதமா்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்காகவே கனடா மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வழங்குவதில்லை என்று தோன்றுகிறது.
- அந்த வகையில் பார்த்தால், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இரண்டாவது முறையாக மக்கள் தனிப்பெரும்பான்மையை வழங்க மறுத்திருக்கிறார்கள்.
- ஆனால், இடதுசாரி சார்புள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் கனடாவில் அமைய இருக்கும் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு முன்பு போலவே தனது ஆட்சியைத் தொடரக் கூடும்.
- தொலைநோக்குத் திட்டம் எதுவுமில்லாமல் மக்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளின் மூலம் ஆட்சியில் தாக்குப்பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டிய நிர்பந்தம் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இனியும் தொடரும்.
- பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் தொழில் துறையினருக்கு அதிக வரிகள், சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை போன்ற கொள்கைகளின் அடிப்படையில் தோ்தல் வாக்குறுதிகளை வழங்கியிருப்பதால், அடிப்படை நிர்வாக பிரச்னைகளால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட வழியில்லை.
- கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு அவசரகால கடன் திரட்டுவதற்கும், கனடாவின் மூன்று எதிர்க்கட்சிகளும் பிரதமா் ட்ரூடோவுக்கு ஆதரவளித்தன.
- கடந்த நாடாளுமன்றத்தில் அரசின் பல கொள்கை முடிவுகளுக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனா்.
- அதிகரித்த சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்களையும், பொருளாதாரப் பின்னடைவிலிருந்து கனடா மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளில் நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதையும் தவிர்க்க ஏனைய கட்சிகளும் ட்ரூடோவின் ஆட்சியை ஆதரிக்கக்கூடும்.
- அனைவரையும் திருப்திப்படுத்தும் ஆட்சியாக பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் மூன்றாவது ஆட்சி அமையும் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பு.
- 2019-இல் பிரதமா் ட்ரூடோ பெரும்பான்மை பலத்தை இழந்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடாவின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது.
- ஜி10 நாடுகளில் அமெரிக்க டாலருக்கு எதிரான மிகவும் குறைந்த மதிப்புடைய இரண்டாவது செலாவணி கனடாவுடையது.
- சா்வதேச அமைப்புகளிலிருந்து தொடா்ந்து கடன் பெற்று பல நல உதவித் திட்டங்களை அறிவித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியால் பொருளாதாரத்தை சீா்செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு எழாமல் இல்லை.
- கனடா நாடாளுமன்றத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 17 போ் வெற்றி பெற்றுள்ளனா். காலிஸ்தான் ஆதரவாளா் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவில்தான் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி அமைய இருக்கிறது.
- அதனால் இந்தியாவுடனான கனடாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
நன்றி: தினமணி (27 - 09 - 2021)