TNPSC Thervupettagam

மீண்டும் போராடும் விவசாயிகள்: என்னதான் செய்கிறது அரசு

February 26 , 2024 148 days 174 0
  • விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. 2020இல் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டு காலத்துக்கு நடத்திய போராட்டத்துக்குப் பின்னர், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை குறித்த உத்தரவாதத்தை அரசிடம் விவசாயிகள் எதிர்பார்த்தார்கள்.
  • எனினும், அது குறித்து அரசு தீர்க்கமான முடிவை எடுக்காத நிலையில், தற்போது விவசாயிகளின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. கூடவே, விவசாயிகளுக்கான ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடிவருகின்றனர்.
  • பிப்ரவரி 13இல், டெல்லியை நோக்கிய பயணமாக சம்யுக்த கிஸான் மோர்ச்சா (அரசியலற்ற பிரிவு), கிஸான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் தொடங்கிய இப்போராட்டத்தில் ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
  • டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புகளும், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டது; பெல்லெட் குண்டுகள் சுடப்பட்டது போன்ற சம்பவங்களும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • முந்தைய போராட்டத்தைப் போல இந்தப் போராட்டத்திலும் வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சமையல் பொருள்களுடன் டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறிவருகின்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி விவசாயிகள் முன்னேறிவரும் நிலையில், வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இதுவரை ஐந்து விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • 2020 போராட்டத்தை முன்னெடுத்த விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தற்போது நடக்கும் போராட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை; ஆதரவு மட்டும் தெரிவித்தது. தற்போது அந்த அமைப்பும் போராட்டத்தில் குதித்திருப்பதால் போராட்டம் மேலும் உக்கிரமடைந்திருக்கிறது.
  • சார்பற்று இருந்த இந்திய வேளாண் துறையை நிறுவனத்தைச் சார்ந்ததாக மாற்றியதில் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளுக்குப் பங்குண்டு. இந்திய வேளாண் துறையில் ஏற்பட்ட இந்த நவீன மாற்றம் லாப நோக்குள்ளதாகத் தெரிந்தாலும், அவை நீண்ட காலப் பலனைத் தரவில்லை என்பதைத்தான் விவசாயிகள் தற்கொலை போன்ற கசப்பான சம்பவங்கள் உணர்த்துகின்றன.
  • 2020இல் வேளாண் துறை தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்ற இருந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டம், வழமையான விவசாயப் போராட்டத்திலிருந்து மாறுபட்டதாகவும் பெரிய அளவில் திடமான நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. அந்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது.
  • குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்திச் செலவைவிட 50% அதிகமாக இருக்க வேண்டும் என்கிற பரிந்துரையை நிறைவேற்ற இந்தப் போராட்டக் குழு வலியுறுத்திவருகிறது. அரசு இன்று பின்பற்றும் வேளாண் நடைமுறைகள் நிறுவனம் சார்ந்ததாக மாறியிருக்கின்றன. இந்திய வேளாண்மை சார்பற்றதாக, தனித்துவமானதாக இருப்பது அவசியம்.
  • இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான துறையாக இருப்பது வேளாண் துறைதான். அந்தத் துறையை முன்னெடுக்கும் விவசாய வர்க்கத்தின் கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். மேலும், விவசாயிகளுக்கு நமது அரசமைப்பு தரும் உரிமைகளுக்கான உத்தரவாதத்தை அளிப்பது ஒரு ஜனநாயக அரசின் கடமையும்கூட.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories