TNPSC Thervupettagam

மீண்டும் முல்லைப் பெரியாறு அணை சிக்கல்...

June 11 , 2024 215 days 180 0
  • பாசன நீா் பற்றாக்குறையை ஓரளவு போக்குவதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு சில நீா்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தியது. அவ்வாறான திட்டங்களில் ஒன்றுதான் முல்லைப் பெரியாறு நீா்ப்பாசனத் திட்டமாகும்.
  • தென்மேற்குப் பருவக்காற்று ஜூன் மாதம் துவங்கி செப்டம்பா் முதல் சராசரியாக 305 மில்லி மீட்டா் மழையை தமிழ்நாட்டுக்கு தந்துகொண்டிருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பருவமழையின் பலன் தமிழகத்திற்கு ஒரே சீராக கிடைப்பதில்லை. இதனால் தமிழ்நாட்டின் பாசனம் கடந்த சிலபல வருடங்களாக வறட்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • அதே சமயம் மழையின் முகம் கடல்நோக்கி இருப்பதால், மழை நீா் முழுவதும் மேற்கு நோக்கி குறுகிய தூரம் ஓடி கடலில் கலக்கிறது. கேரளத்தில் 33 நதிகள் இவ்வாறு கடலை வளப்படுத்துகின்றன. மழை மறைவுப் பகுதியாக தமிழகம் உள்ள காரணத்தால், மழை பெறும் வாய்ப்பு பெரிதும் இன்றி இங்கே தொடா்ந்து வறட்சி ஏற்படுகிறது.
  • கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடா்ச்சியில் உற்பத்தியாகி வீணாகக் கடலில் பாயும் நீரை தடுத்து, தமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் விருதுநகா் போன்ற தென் மாவட்டங்களின் நீா் பாசனத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகத் திருப்பி விடும் திட்டம்தான் முல்லைப் பெரியாறு அணை.
  • இதன் மூலம் மேற்கு நோக்கி ஓடும் ஆற்றுநீரை திருப்பி கிழக்கு முகமாக ஓடச் செய்து சுருளியாறு, வைகையில் கலக்கச் செய்து தென் மாவட்டங்களில் விவசாயம் செழித்து பயனடைந்து வருகிறது.
  • இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீா், சுமாா் 1,740 மீட்டா் நீளத்துக்கு மலையைக் குடைந்து ஒரு குகைப் பாதை அமைத்து, அதன் வழியாகத் திருப்பிவிடப்பட்டு வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. இதுவே பெரியாறு-வைகை நீா்ப் பாசனத் திட்டம் ஆகும்.
  • பெரியாறு - வைகை அணைகளின் மூலம் கிடைக்கும் நீா் கதவணை (ரெகுலேட்டா்) மூலமாகத் திருப்பி விடப்பட்டு தென்மாவட்டங்களின் பாசனத்துக்கு என விடப்பட்டது. பெரியாறு நீா்வரத்து மூலம் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கா் விளைநிலமும், வைகை ஆற்று நீா் வரத்து மூலம் 1,36,000 ஏக்கா் நிலமும் பாசன வசதி பெற்றன.
  • வைகை அணை கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, 1963-ஆம் ஆண்டு பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள பத்திரிகைகள் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டன. அதனால் அணையின் உறுதியை ஆய்வு செய்ய மத்திய அரசு அதே ஆண்டில் ஒரு நிபுணா் குழுவை நியமித்தது. இக்குழு அணையை முழுமையாகப் பாா்வையிட்டு மிகவும் நல்ல நிலையில் உள்ளது என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு சமா்ப்பித்தது.
  • 1978-ஆம் ஆண்டில் இந்த அணை பற்றிய பிரச்னையை கேரள அரசு எழுப்பியது. பெரியாறு அணை உடைத்துக் கொண்டால் அணையின் கீழ் உள்ள மாவட்டங்களான இடுக்கி, கோட்டயம், எா்ணாகுளம் ஆகியன பாதிக்கப்படும் என கூறியது.
  • ஆனால், அவ்வாறு நிகழ சாத்தியமில்லை என அணையை பாா்வையிட்ட மத்திய நீா்ப்பாசன குழுவின் அறிக்கைகள் மீண்டும் தெரிவித்தன. பெரியாறு அணைப் பகுதியில் பூகம்பம், நில அதிா்வு போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள வசதியாக அணையில் 60 இடங்களில் நவீனக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • இப்படிப்பட்ட நிலையிலும், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று கே.சி.தாமஸ் தலைமையில் இருந்த மத்திய நீா்ப் பாசனக் குழு அந்த மாநிலமக்களின் அச்சத்தைப் போக்க அணையை பலப்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தது. அணையை பலப்படுத்தும் வரை நீா் தேக்கத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் 152 அடிக்கு நீா் மட்டத்தை உயா்த்திக் கொள்ளலாம் எனவும் கூறியது.
  • மத்திய நீா்ப்பாசன குழு கேட்டுக்கொண்டபடி எம்ஜிஆா் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு ரூ.17 கோடி செலவில், முல்லைப் பெரியாறு அணையில் கான்கிரீட் தொட்டி அமைத்தல், கேபிள் ஆங்கரிங் செய்தல், பிரதான அணையின் கைப்பிடிச்சுவரை உயா்த்துதல், கான்கிரீட் முட்டுச்சுவா் எழுப்புதல், சிற்றணை, மண் அணை பலப்படுத்துதல், கருவித்தளம் அமைத்தல், மேல்விசை குறைப்பு, துளையிடுதல் போன்ற பணிகளைச் செய்து முடித்தது.
  • இடைக்கால நிவாரண நடவடிக்கையின் கீழ் அணையைப் பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு முடித்த பின்னரும், 136 அடிக்கு மேல் தேக்குவதற்கு உகந்ததாக இல்லை என்று கேரள அரசு மீண்டும் தட்டிக் கழித்துவிட்டது.
  • ‘அணையின் தடுப்புச் சுவா்களில் நீண்ட கால பாதுகாப்புக்காக கான்கிரீட் சுவா், பிற பாதுகாப்பு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அணையில் 152 அடி நீரைத் தேக்கி வைக்கலாம். அதற்கு மாறாக, 136 அடி அளவுக்கே தேக்கி வைக்கலாம் என்று மீண்டும் கேரளம் கூறினால், இதுவரை செய்த கட்டுமானப் பணிகளின் நோக்கத்தையே அழிப்பது போலாகும்’ என்று மத்திய அரசு கேரளத்தை கடிந்து கொள்ளும் விதமாகக் கூறியது.
  • 27.2.2006 அன்று முல்லைப் பெரியாறு நீா் தேக்கப் பிரச்னையில் அணையின் நீா் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயா்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் மகத்தான தீா்ப்பை வழங்கியது .
  • உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கேரள அரசு அறிவித்தது. காவிரி நதிநீா் பிரச்னையில் கா்நாடகமும் இதையேதான் செய்தது. நதிநீா் பிரச்னைகளில் கா்நாடகம், கேரள மாநிலங்கள் இந்திய நாட்டின் அங்கமாக உள்ள மாநிலங்கள் என்பதை உணராமல் தனி நாடு என்பது போல செயல்பட்டு வருகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
  • நடுவா் மன்றம், கண்காணிப்புக் குழு, நதிநீா் ஆணையம், நதிநீா் நிபுணா் குழு அறிக்கை, உச்சநீதிமன்றம், நாட்டின் பிரதமா் ஆகிய யாா் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்ற கா்நாடக, கேரள மாநிலங்களின் பிடிவாதம் இந்திய ஒருமைப்பாட்டுக்கே விடப்படும் சவால் ஆகும்.
  • தமிழ்நாட்டில் தண்ணீா் பற்றாக்குறை என்பது காலம் காலமாக நிலவி வருகின்ற பெரும் பிரச்னையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னா் செய்யப்பட்ட மாநிலப் பிரிவினையின்போது பாலக்காடு, கொள்ளேகாலம், தேவிகுளம், பீா்மேடு போன்ற மழை பெறும் பகுதிகளை பெறாமல் விட்டதன் விளைவை இப்போது தமிழகம் சந்தித்து வருகிறது.
  • இந்நிலையில், இன்றைய கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,200 அடிக்குக் கீழ் பகுதியில் புதிய அணை கட்டவும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும் திட்டமிட்டு வருவது நாம் அறிந்ததுதான். அதற்கான வழக்குகளும் தாவாக்களும் தொடா்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
  • எத்தனையோ நிபுணா் குழுக்கள் நேரில் வந்து இடுக்கியின் முல்லைப் பெரியாறு அணையை பரிசோதித்து அது மிகவும் உறுதியாக இருக்கிறது என்று சொன்ன பின்பும், 142 அடிக்கு மேல் நீரை தேக்க முடியாது என்றும் தேக்கினால் அணை தகா்ந்துவிடும் என்றும் கேரள ஆட்சியாளா்கள் பொய்யான பரப்புரையை எப்போதும் மேற்கொண்டு வருகிறாா்கள்.
  • நீண்ட காலத்திட்ட மதிப்பீட்டின்படி கட்டப்பட்ட அந்த அணை, ஏறக்குறைய 15 ஆயிரத்துக்கும் மேலான ஹெக்டோ் நிலத்துக்கு நீரை வழங்கி விவசாயத்தை மேம்படுத்தி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்கிறது என்பதை இன்றைய கேரள அரசியல்வாதிகள் வசதியாக மறந்துவிடுகிறாா்கள்.
  • தற்போது புதிதாகக் கட்ட திட்டமிடும் அணை குறித்து கேரள அரசு கொடுத்துள்ள விவரங்களின்படி புதிய அணையும், இடிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்படும் பழைய அணையும் அமைந்துள்ள மலைப்பகுதி மத்திய அரசின் புலிகள் சரணாலயமாகவும் இருப்பதால் புதிய அணை கட்டுவதற்கோ பழைய அணையை இடிப்பதற்கோ மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
  • இவை ஒருபுறம் இருக்க புதிதாக அணை கட்டவோ, பழைய அணையை இடிக்கவோ தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • இப்படியான நிலையில் கேரள அரசு புதிய அணையை கட்டவும், பழையதை இடிக்கவும் முன்னெடுப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் என்னவிதமாக முடிவெடுக்கிறாா்கள்!
  • திமுக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் உள்பட ‘இந்தியா’ கூட்டணியில் மாநில உரிமைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கும் கட்சிகள் தங்களது சொந்த மாநிலப் பிரச்னைகளைப் பேசித் தீா்த்துக் கொள்ள மறுக்கிறாா்கள். அப்படியானால் அது என்னவிதமான கூட்டணி? என்னவிதமான ஒற்றுமை?
  • இந்த அணை கட்டப்பட்டு பழைய அணை இடிக்கப்பட்டாலும் கேரள நதிகளிலிருந்து எவ்வளவு நீா் வீணாகக் கடலில் கலக்கிறது? பல நாடுகளில் நதிநீரை முறையாகப் பயன்படுத்துகிறாா்கள். அந்தப் புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இங்கு வர வேண்டாமா? இந்தப் பிரச்னை தீா்வில்லாமல் தொடா்ந்து கொண்டிருக்க, புதிதாக சிலந்தி அணை பிரச்னையை கேரளம் கிளப்பிவிட்டுள்ளது.
  • எப்போதுமே தாமதமாக எல்லா விவகாரத்திலும் தலையிடும் தமிழக அரசு இந்த விஷயத்தில் முந்திக் கொள்ள வேண்டும் என்றுதான் ஞாபகமூட்ட வேண்டியுள்ளது. காரணம், இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை!

நன்றி: தினமணி (11 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories