TNPSC Thervupettagam

மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்?

August 29 , 2024 137 days 181 0

மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்?

  • அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது எப்போது என்பதுதான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கேள்வி.

பழைய ஓய்வூதியத் திட்டம்:

  • பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தின்படி, ஓர் ஊழியர் கடைசி​யாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூ​தி​ய​மாகத் தரப்படு​கிறது. அதில் 40% தொகை 12 ஆண்டு​களுக்குக் குறிப்​பிட்ட வட்டி சதவீதத்​துடன் கணக்கிடப்​பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்​படு​கிறது.
  • எனவே, 12 ஆண்டு​களுக்கு மாதம்​தோறும் அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்​கும். மேலும், ரூ.10 ஆயிரம் என்கிற மொத்த ஓய்வூ​தி​யத்​துக்கான அகவிலைப்படி விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்​படு​கிறது. மேலும், 12 ஆண்டு​களுக்குப் பிறகு ரூ.10 ஆயிரம் ஓய்வூ​தியம் கிடைக்​கும். ஒருவேளை ஓய்வூ​தியர் இறந்து​விட்​டால், அவரது கணவர் / மனைவிக்கு அல்லது அவரும் இறந்து​விட்டால் திருமண​மாகாத / கணவரை இழந்த / விவகாரத்து ஆன அவர்களது மகள் அல்லது உடல்நலம் குன்றிய மகனுக்கு ஓய்வூ​தியம் வழங்கப்​படும்​.
  • இந்​நிலை​யில், தமிழ்​நாட்டில் ‘பங்களிப்பு ஓய்வூ​தியத் திட்டம்’ என்கிற திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலாகிவரு​கிறது. இந்தத் திட்டத்தில் ஊழியர் ஓய்வு பெறும்போது ஒரு தொகை வழங்கப்​படு​கிறது. மாதந்​தோறும் ஓய்வூ​தியம் என்பதே கிடையாது.
  • ஊழியர் பணியில் இருக்​கும்போது அவரது சம்பளத்தில் இருந்து 10%, அரசுப் பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைக்கான வட்டி 7.8% ஓய்வூ​தியத் தொகையாகச் சேகரிக்​கப்​படு​கிறது. அது அரசு கஜானா​விலும், காப்பீட்டு நிறுவனத்​திலும் முதலீடு செய்யப்​படு​கிறது. ஊழியர் ஓய்வு பெறும்போது இந்தத் தொகை அப்படியே திருப்பி வழங்கப்படுகிறது.
  • 2003இல் இந்தத் திட்டம் அமலான​போது, ‘வேலையில் இருந்​தவர்கள் ஓய்வு​பெறும் காலம் என்பது 2037 முதல் 2050 வரை ஆகும். இத்தனை ஆண்டு காலம் ஊழியர்கள் பணத்தைச் சேகரித்து வைத்து என்ன செய்யப்​போகிறார்​கள்?’ என்னும் கேள்விகள் எழுந்தன.
  • இப்படிப் பணத்தை எங்கும் முதலீடு செய்யாமல், ஓய்வூ​தி​யமும் தராமல் இருப்​பதால் ரூ.1,500 கோடியை அரசு வீணாக்கு​கிறது என்று மத்தியத் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது. அதேவேளை, புதிய ஓய்வூ​தியத் திட்டம் முதலீட்டை நோக்க​மாகக் கொண்டிருக்​கிறது.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் 10%, ஊழியர் பங்களிப்பில் 10%, அரசுப் பங்களிப்பு, அதற்கான வட்டி ஆகியவை ஓய்வூதியச் செல்வம் (pension wealth) என்ற பெயரில் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தொகையில் 15% ‘ஈக்விட்டி’ பங்குகளிலும், 55% அரசுப் பத்திரங்களிலும், 25% தனியார் பத்திரங்களிலும், 5% கடன் பத்திரங்களிலும் அரசு முதலீடு செய்கிறது. ஆனால், சட்டப்படி இந்த முதலீட்டின் மூலம் பணம் கிடைக்கும் என்கிற எவ்வித நேரடி அல்லது மறைமுக உத்தரவாதமும் இல்லை.
  • போட்ட முதல் பணம் உள்பட அனைத்து முதலீடுகளையும் இழக்கும் ஆபத்து உள்ளது என்று ‘செபி’ (Securities and Exchange Board of India) கூறுகிறது. ஓய்வூதியர் உயிரிழந்தால் கணவர் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம்; பிள்ளைகளுக்குக் கிடையாது என்கிற பிரச்சினைகளும் உள்ளன.

நடைமுறைச் சிக்கல்கள்:

  • புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சேகரிக்கப்படும் தொகையை, மாநில அரசுகள், மத்திய அரசின்கீழ் ஓய்வூதிய நிதி மேலாண்மை - வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற வேண்டும் என்று நினைத்தால், ஒப்படைத்த பணத்தைத் திருப்பித் தர முடியாது என மத்திய அரசு கூறுகிறது.
  • இதில் சிறப்பு வழக்காகத் தமிழ்நாடு இந்தத் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இந்தத் தொகை தமிழக அரசிடமேதான் உள்ளது. அதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்குச் சிக்கல் இல்லை. ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை மாநில அரசே நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2035 முதல் 2037ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஆகவே, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், அரசின் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும் என்று மாநில நிதித் துறை அமைச்சகம் கருதுகிறது.
  • மேலும், அரசின் வருவாய்ச் செலவினங்கள் அதிகரிக்கும். ஜிஎஸ்டி உள்ளிட்ட சில சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. ஏற்கெனவே, அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனும், அரசின் தொடர் செலவுகளும் சுமையாக இருக்கின்றன.
  • புதிய ஓய்வூதியத் திட்டமும் சிக்கலாக இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கே பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதில் தெளிவு இல்லை. கர்நாடகம் அறிவித்துள்ள திட்டமும் தெளிவாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
  • ஆக, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்பட்டதைப் போல, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% என்பதற்குப் பதிலாக 40% அல்லது அதற்கும் குறைவாகவோ முடிவுசெய்யலாம் என்று நிதித் துறை வட்டாரங்கள் ஆலோசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:

  • 2004இல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசாங்கம், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தைக் கைவிட்டு, புதிய ஓய்வூதிய முறைக்கு மாறிய​போது, நிலையான ஓய்வூ​தியம் வழங்குவது கைவிடப்​பட்டது. இத்தோடு ஊழியர்​களின் பங்களிப்பு கட்டாய​மாக்​கப்​பட்​டதோடு, ஊழியரும் அரசாங்​கமும் சமமாக 10% பங்கு ஏற்பாடு செய்யப்​பட்டது.
  • 2019இல் இந்தப் பங்களிப்பு அடிப்​படைச் சம்பளம்​ அக​விலைப்​பட்​டியின் 14%ஆக உயர்த்​தப்​பட்டது. புதிய விதி​யின்படி, ஓய்வுக்குப் பிறகு பணியாளர் ஓய்வூ​தி​யத்தின் மொத்தத் தொகையில் 60%ஐ எடுக்​கலாம். மீதம் உள்ள 40%ஐப் பொதுத் துறை / தனியார் நிறுவனங்​களில் ஊக்கு​விக்​கப்​படும் ஓய்வூதிய நிதி மேலாளர்​களின் பல்வேறு திட்டங்​களில் முதலீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
  • தேசிய ஓய்வூ​தியத் திட்டம் அமல்படுத்​தப்​பட்​ட​போது, அது பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தை​விடச் சிறந்தது எனக் கூறப்​பட்டது. ஆனால், 2004க்குப் பின் பணியமர்த்​தப்​பட்டு, ஓய்வு பெற்றவர்​களுக்கு பெயரளவுக்​குத்தான் ஓய்வூ​தியம் கிடைப்பதாக அது அமைந்​திருந்தது. இதைத் தவிர, ஊழியர்​களும் தங்களது சொந்தப் பங்களிப்பில் செலுத்த வேண்டியதாக இருந்தது.
  • அதே வேளை, பழைய ஓய்வூ​தியத் திட்டத்தின் கீழ் வழங்கப்​படும் ஓய்வூ​தியம் முற்றிலும் அரசாங்​கத்​தால், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையே சார்ந்ததாக அமைந்​திருந்தது. புதிதாக அறிமுகம் செய்யப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்தில் ஊழியர்​களின் பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்துத் தெளிவான தகவல்கள் தெரிவிக்​கப்​பட​வில்லை.
  • ஓய்வூ​தி​யத்​துக்கான பணப் பற்றாக்குறை ஏற்பட்​டால், அதை அரசே ஈடுசெய்​யும். இது குறித்து ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்வது அவசிய​மாகிறது. அரசின் ஓய்வூ​தியத் திட்டத்​தில், மத்திய அரசிடம் ஓய்வூதிய நிதிகள் இல்லை. இருப்​பினும், புதிய அமைப்பில் மத்திய அரசு ஒரு நிதியை உருவாக்கு​கிறது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்​களுக்கு ஓய்வூ​தியப் பலன்களுக்காக ஒரு நிதியை உருவாக்கு​வதுபோல, ஒவ்வோர் ஆண்டும் இந்த நிதியில் பணம் முதலீடு செய்யப்​படு​கிறது.
  • உலக நாடுகளின் ஓய்வூ​தியத் திட்டங்கள் குறித்​தும், ஆந்திர அரசு செய்த மாற்றங்கள் குறித்தும் சோமநாதன் குழு ஆய்வு செய்து​வரு​கிறது. ஓய்வூ​தி​யத்தில் குறிப்​பிட்ட தொகைக்கு அரசு உத்தர​வாதம் அளித்​தால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் இந்தக் குழு ஆய்வுசெய்​கிறது.
  • 40 முதல் 45% ஓய்வூ​தி​யத்​துக்கு மத்திய அரசு உத்தர​வாதம் அளிக்க முடியும் என்று தனது ஆய்வறிக்கையில் இக்குழு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், 25 முதல் 30 ஆண்டு​களாகப் பணிபுரியும் ஊழியர்​களின் கவலையை இது நீக்கி​விடாது என்ற கருத்தும் நிலவு​கிறது.
  • மீண்டும் 50% உத்தர​வாதம் தரலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து​வரும் நிலையில், பெரும் எதிர்​பார்ப்​புக்கு இடையில் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம்​ அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. இது ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு ​முழு​மையான பலன் அளிக்​குமா என்​ப​தும், ஓய்​வூ​தியர்​ சங்​கங்கள்​ ஏற்றுக்​கொள்​ளுமா என்​பதும் ​போகப்​போகத்​தான் தெரியவரும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories