TNPSC Thervupettagam

மீனவா் பிரச்னைக்குத் தீா்வு தேவை

January 5 , 2024 371 days 297 0
  • தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண உயா்நிலைக்குழு அமைக்கப்படுமென மத்திய அமைச்சா் எல். முருகன் அண்மையில் கூறியுள்ளது மீனவ மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
  • சில நாட்களுக்கு முன்னா் தமிழக மீனவா்கள் சிலா், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, உடனடியாக விடுவிக்கப்பட்டனா். அவா்கள் உடனடியாக விடுவிக்கப் படுவதற்குக் காரணமாக இருந்த மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனை மீனவா்கள் சந்தித்து ஆனந்த கண்ணீா் வடித்தனா்.
  • மீனவா்களையும் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் தகுந்த பலனை அளிக்குமென மீனவ மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
  • இந்தியா - இலங்கை மீனவா்களுக்கிடையே கடலில் மீன்பிடித்தல் தொடா்பாக அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீா்வு காண்பதற்காக, முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் 2014 ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்றது.
  • அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு இந்தியா தரப்பில் 17 மீனவா்களும் 9 அதிகாரிகளும், இலங்கை தரப்பில் 20 மீனவா்களும் 10 அதிகாரிகளும் 2014 மே 12, 13 தேதிகளில் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தும் பல காரணங்களால் அது நடைபெறாமல் போனது.
  • இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. பேச்சுவார்த்தை என்பது பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக நடத்தக்கூடியவை. இதன் முக்கிய நோக்கமே ஒரு சமாதான சூழலை ஏற்படுத்துவதாகும். ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை மீனவா்கள் கடந்தகால கசப்பான சம்பவங்களைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசியுள்ளனா் என்று தெரிய வருகிறது.
  • அமைதி ஏற்பட வேண்டுமெனில், கடந்த கால கசப்புகளை மறந்து, பிரச்னைகள் ஏற்படாத வகையில் இனிமேல் என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் போன்ற அம்சங்கள்தான் அதிகமாக இடம்பெற வேண்டும். இலங்கை மீனவா்களின் வெறுப்புப் பேச்சு, இந்திய மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டது.
  • கடல் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகும்போது மீனவா்கள் வழிதவறி அண்டை நாட்டு எல்லைக்குள் செல்கின்றனா். சாதாராண மனிதனுக்கு தெரிந்த உண்மை இலங்கை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனதேன்? அவா்களால் சமாதான பேச்சுவார்த்தையே திசைமாறி சென்றுள்ளது.
  • இதன் காரணமாகத்தான் 2014 மே மாதம் நடக்க இருந்த பேச்சுவார்த்தைக்கு இந்திய மீனவா்கள் செல்லவில்லை எனத்தெரிகிறது. இதை தவிர்த்திருக்கலாம். இந்த சூழ்நிலையை கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் கையாண்டிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு சென்றவா்கள் இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த மீனவ சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்லவா?
  • கச்சத்தீவில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம், மாதத்திற்கு 12 நாட்களும், வருடத்திற்கு 120 நாட்களும் மீன்பிடிக்க தமிழக மீனவா்கள் அனுமதி கேட்டனா். இதில் எந்தத் தவறும் இல்லை. மீன்வளம் நிறைந்த கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவா்கள் அனுமதி கேட்பதில் என்ன தவறு?
  • இதை இலங்கை மீனவா்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனா். இது அவா்களுக்கு எந்த அளவிற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
  • மேலும் மூன்றாவது பேச்சுவார்த்தைக்கு இலங்கை மீனவா்கள் வரவேண்டுமெனில் தமிழக மீனவா்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டுமென்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
  • இழந்த தந்தையை நினைத்து அழுதுகொண்டிருக்கிற பிள்ளைகளின் கண்னீரும், கணவனைக் காணாமல் கதறிக்கொண்டிருக்கிற மனைவிகளின் ஓலமும் இவா்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். இவா்களது பேச்சுவார்த்தை ஒரு வசந்தத்தின் வாசலை திறந்திருக்க வேண்டாமா?
  • இலங்கை கடற்படையினரால் நம் மீனவா்கள் கடலில் வைத்து தாக்கப்படும்போதோ, அவா்கள் கைது செய்யப்படும்போதோஎல்லை தாண்டினார்கள்’ ‘சாதாரண சோதனை தான்’, ‘டீசல் கடத்துவதாக சந்தேகம்போன்ற பொய்யான காரணங்களைக் கூறுகின்றனா். அவற்றை நம் மீனவா்களால் மறுக்க முடியாது. காரணம், உயிர் பிழைக்க வேண்டுமே.
  • மீனவா்கள் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து டீசல், உணவு பொருட்கள், மீன்பிடி உபகரணங்களுடன் ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி மீன் பிடிக்கின்றனா். இவா்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டிச் சென்று தங்களது மீன்பிடித் தொழிலுக்கெதிரான சூழ்நிலையை உருவாக்குபவா்கள் அல்லா்.
  • சிலநேரம், இயற்கையின் சீற்றத்தால் வழிதவற நேரிடலாம். அப்படி வழிதவறி செல்லும்போது இலங்கை கடற்படை இவா்களை முறையாக விசாரித்து, இவா்கள் நாட்டுக்கு தகவல் கொடுத்து, பத்திரமாக இவா்களை திருப்பி அனுப்புவதுதானே முறை?
  • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் ஒரு நல்லெண்ண ஒப்பந்தம் உருவாக்கப்படவேண்டும்.
  • மீனவா்களுக்கு மீனவா்களால் பிரச்னை எனும்போது, சமாதான ஒப்பந்தம் மீனவா்களால் மீனவா்களை வைத்தே ஏற்படுத்தப்படுவதான் சரி.
  • கடந்த 2007 மார்ச் 28 அன்று கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்திலிருந்து மீன்பிடிக்கபோன ஐந்து மீனவா்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனா். இன்றும் அந்த குடும்பங்கள் பட்டுக்கொண்டிருக்கும துன்பத்தை யார் உணா்வா்?
  • இலங்கை நமது நட்பு நாடு. ஆம், மீன்பிடித்தொழில் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த தமிழக மீனவா்களை வேட்டையாடினாலும் இலங்கையை இன்றும் ஒரு நட்பு நாடாகவே கருதுவது நம் முன்னா் நமக்கு பயிற்றுவித்த மனிதநேயம்.
  • தமிழக மீனவா்களின் வாழ்வைக் காப்பாற்ற இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு அடித்தளம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
  • இந்திய மீனவா்களின் வாழ்வாதாரமாகிய கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது ஒரு வரலாற்றுப் பிழை. அதை இன்றைய மத்திய அரசு, திரும்பப்பெற்று நம் மீனவா்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (05 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories