TNPSC Thervupettagam

மீன்திட்டின் வளத்தை இழக்கப் போகிறோமா?

December 14 , 2024 5 hrs 0 min 8 0

மீன்திட்டின் வளத்தை இழக்கப் போகிறோமா?

  • சிறு படகுகள் சுறாப்பாருக்கு வர இயலாது என்று அமிர்தலிங்கம், டி சில்வா போன்ற இலங்கை மீன்வள ஆய்வாளர்கள் எழுதிய காலத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் மீனவர்கள் எவ்விதமான நவீன வழிகாட்டு நுட்பங்களின் துணையும் இல்லாமல், வள்ளங்களிலும் (நாட்டுப் படகு) கட்டுமரங்களிலும் பாய்விரித்துத் தங்குகடல் பயணம் மேற்கொண்டு, தூண்டில் நீட்டி மீன்பிடித்து வந்துள்ளனர். அப்பகுதி மேலே குறிப்பிட்ட பாறைகள் மிகுந்துள்ள சுறாப்பாரின் வட விளிம்பாக இருந்திருக்க வேண்டும்.
  • இருள் மண்டிய பேராழப் பகுதிகளை வேணாட்டு மீனவர்கள் கசம் என்கிறார்கள். கசத்தைக் கடந்து, ஆழம் குறைந்த பகுதியான இம்மீன்திட்டின் குறிப்பிட்ட இடங்களைச் செம்மீன் (Red snapper) கெட்டு, கலவாக் (Rock cod) கெட்டு, சண்டாளக் கெட்டு என்பதாக அடையாளம் கண்டுள்ளனர். சமைத்த உணவும், முதல் நாள் அறுவடையைப் பத்திரப்படுத்துவதற்கான கல் உப்பும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கட்டுமரத்தில் இருவழிப் பயணம் ஏறத்தாழ இரண்டு நாள் எடுக்கும்.
  • இந்த அபாரமான மீன்வேட்டத் திறனும் துணிவும்தான் விசைப்படகுகளில் இன்றைக்கு அவர்களை 1,000, 1,500 கடல் மைல் பயணிக்க வைக்கிறது. சிவலிங்கம் போன்ற ஆய்வாளர்கள் தென் திருவிதாங்கூர் மீனவர்களைக் குறித்து அறிய நேர்ந்திருந்தால், சுறாப்பார் மீன்வளம் குறித்த மேம்பட்ட புரிதல் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கும்.

செம்பழுப்பு நீர்:

  • சுறாப்பார் அறுவடைகள் கடல்நீர் தெளிந்த காலத்தில் கிடைப்பதைவிட, கறுப்பு அல்லது செம்பழுப்பு நிறமேறிக் கிடக்கும் நேரத்தில் அதிகமாய்க் கிடைத்ததாக ஆய்வுக் கப்பல் மாலுமிகள் தெரிவித்துள்ளனர். சிலவகைப் பச்சைய மிதவை உயிரிகளால் (phytoplankton) கடல் இப்படி நிறம் மாறுவது உண்டு. விலங்கு மிதவை உயிரிகளில் (zooplankton) நாக்டிலுகா மிகையாக உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இழுவை மடிகளின் இரவு அறுவடை, பகலைவிட மிகுதியாக இருந்துள்ளது; தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பகல் அறுவடை மிகுதியாக இருந்துள்ளது.

மீன்வளம்:

  • சுறாப்பாரில் காணப்படும் 100க்கு மேற்பட்ட மீன் இனங்களில் 60 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட 25 இனங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை: சிங்கிறால் (spiny lobster), விளமீன் (Sea Bream), கலவா (Rock cod), சொவ்வ (Red snapper), ஸ்னாப்பர் போன்ற இனங்கள் (Snappers- Lutianus rivulatus, L.vaigensis, L.rangus); வரிப் பன்னாமுட்டி (Painted Grunt); பெருங்கண்ணன் (Priacanthus hamrur), பன்றிமுக மீன் (Scolopsis dubiosus), நவரை (Parupenius malabaricus), பயிந்தி (Ephipus orbis), சுறா (Sharks), திருக்கை (Skates) இனங்கள், வஞ்சிரம் (King fishes), வேளா (Caranx chrysophris), வேளாபாரை (C. carangus, C. malabaricus), கெளிறு/கெழுத்தி, (Cat Fish); சீலா/மாவூளா (Sphyraena jello); பயிந்தி (Acanthurus matoides); கிளாத்தி (Balistes stellatus). சில நேரம் மடி நிரம்பக் கணவாய் (Cuttle fish) அறுவடை கிடைப்பதுண்டு. சமயங்களில் மடி சொறிமீன்களால் (Jelly fish) நிரம்பி கண்ணிகள் அடைத்துக்கொள்ளும். உணவாகக் கொள்ளத் தகுதியற்ற சில மீன் இனங்களும் நான்கு பாம்பு இனங்களும் (Hydrophis sp. Astrotia sp. Kerilia sp. & Praesacutata sp.) உள்ளன.

மீன்வளம் - ஓர் ஒப்பீடு:

  • சுறாப்பார் மீன்வளம் எவ்வளவு செழுமையானது? அதன் மதிப்பைச் சரியாக வரையறுத்துக்கொள்ள, பிற மீன்வளப் பகுதிகளுடன் ஒப்பிடலாம். இந்தியக் கடல்களின் பிற பகுதிளைப் பொறுத்தவரை கள்ளிக்கோட்டை, கொச்சி பகுதிகளில் கிடைக்கும் மீன்வளம் வாட்ஜ் பேங்க் மீன்வளத்துக்கு இணையானது; மங்களூர்க் கடலின் மீன்வளம் சற்று அதிகமானது; மும்பைக் கடலில் வாட்ஜ் பேங்கைவிட மிக அதிகமான அறுவடைகள் கிடைக்கின்றன.
  • வாட்ஜ் பேங்க் அறுவடையைவிட பீட்ரோ பேங்கில் (இலங்கை-இந்தியக் கடற்பகுதியில் அமைந்துள்ள) 25% குறைவாகவே கிடைக்கிறது. பிலிப்பைன்சின் கிமாரஸ் நீரிணையின் (Guimaras Straight) 2,000 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மீன்வளத் திட்டின் அறுவடையைவிட, வாட்ஜ் பேங்க் அறுவடை 40% குறைவானது. பொதுவாக, குளிர்ப் பிரதேசக் கடல்களில் வெப்பமண்டல மீன்வளத் திட்டுகளைவிட அறுவடை மிகுதியாக இருக்கும்.
  • குறிப்பாக பாரெண்ட்ஸ், கிரீன்லாந்து, கிழக்குக் கனடா கடல்களில் நிறைய மீன்வளம் உண்டு. நியூ ஃபவுண்ட்லாந்தின் கிராண்ட் பேங்கின் செழுமையான மீன்வளத்தால் ஈர்க்கப்பட்ட ஐரோப்பிய மீனவர்கள் அட்லாண்டிக் கடலைக் கடப்பதில் உள்ள அபாயங்களைப் பொருள் படுத்தாமல் ஐந்து நூற்றாண்டு காலமாக அங்கு சென்று மீன்பிடித்து வந்தனர். வாட்ஜ் பேங்க் மீன்வளத்தைவிட 8.5 மடங்கு அதிக மீன்வளம் அங்கு உள்ளது.

சுறாப்பாரில் துரப்பணத் திட்டம்:

  • இந்திய எண்ணெய்- எரிவளி நிறுவனத்தின் ஹெல்ப் கொள்கையின் அடிப்படையில் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ள துரப்பணக் கிணறுகளின் தன்மை (செங்குத்து முறை/ ஷேல் முறை) குறித்து ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் ரகசியம் காக்கிறது.
  • மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வலசைப் பாதை ஆழ்கடல். உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக் காகவும் அவை வலசை போகும் நிலையில், நிரந்தரமான கட்டுமானங்களும் தொழில் நடவடிக்கைகளும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியைப் பாதிக்கும்.

அதிர்ச்சி தரும் ஒலி மாசு:

  • கடலடி துரப்பண நடவடிக்கையினால் எழும் ஒலியானது, கடலுயிர்களின் இயல்பு வாழ்க்கையை ஊடறுக்கின்றன. ஒலிவருடல் முறையில் தகவல் பரிமாறிக்கொள்ளும் கடல்வாழ் பாலூட்டியினங்களைப் பொறுத்தவரை, இயந்திரங்களின் அதிர்வுகள் அவற்றின் இரைதேடலையும் இனப்பெருக்கத்தையும் பாதிக்கும். ஆழ்கடல் தரைக்கு அடியில் எண்ணெய் வள இருப்புகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அதிர்வு-ஒலி சார்ந்த ஒன்று.
  • அது டைனமைட் வெடி ஏற்படுத்தும் அதிர்வுக்கு நிகரான, செவிடாக்கும் பேரொலி. கடலடித் தரைக்குக் கீழே வாரக் கணக்கில், 24 மணி நேரமும் பத்து நொடிகளுக்கு ஒருமுறை அந்த வெடியதிர்வு கேட்டுக்கொண்டேயிருக்கும். துரப்பணப் பகுதிகளில் கடலுயிர்களின் வாழிடம் மொத்தமாக அழிந்துவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories