TNPSC Thervupettagam

முசாஃபர்பூர் மூளைக்காய்ச்சல்: ஒரு மருத்துவப் பார்வை!

June 24 , 2019 1973 days 997 0
  • பிஹார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு 115-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொத்துக் கொத்தாகப் பலியான செய்தி, இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்களையும் அச்சுறுத்தியுள்ளது. அந்த அச்சம் தேவையில்லை. குறிப்பாக, தமிழகத்தில் இது பரவிவிடுமோ எனும் திகில் வேண்டாம்.
  • மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் மூளைத் திசுக்களில் அழற்சி உண்டாகி காய்ச்சல் வருவது. கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோய். இதை ‘மூளை அழற்சிக் காய்ச்சல்’ (Encephalitis) என்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவருக்குக் கடுமையான காய்ச்சல் வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலியும் அளவில்லாமல் வாந்தியும் ஏற்படும். மனக்குழப்பமும் அதைத் தொடர்ந்து வலிப்பும் வரும். அடுத்து ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்து நேரும்.
முசாஃபர்பூர்
  • ஆனால், முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளைப் பாதித்துள்ள மூளைக்காய்ச்சல் இந்த ரகமல்ல. இந்தக் குழந்தைகள் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்ட காரணத்தால் மூளை பாதிக்கப்பட்டு, ‘மூளைவினை நோய்’ (Encephalopathy) வந்து இறந்திருக்கின்றனர். மூளை அழற்சிக் காய்ச்சலுக்கும் இந்த மூளைநோய்க்கும் அதிக வித்தியாசம் உண்டு. முக்கியமாக, உடலில் குளுக்கோஸ் உற்பத்தி ஆவதில் குறைபாடு ஏற்படுவதால், இந்த நோய் வருகிறது. அதிலும் போதிய ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளை மட்டுமே இது பாதிக்கிறது. இது தொற்றுநோயும் இல்லை; மற்றவர்களுக்குப் பரவுவதும் இல்லை.
ஆபத்தாகும் லிச்சிப் பழங்கள்!
  • முசாஃபர்பூர் மாவட்டத்தில் ஏழைக் குழந்தைகள் தங்கள் பசியைப் போக்க லிச்சிப் பழங்களைச் சாப்பிடுகின்றனர். லிச்சிப் பழங்களில் ‘மெதிலின் சைக்லோபுரோபைல் கிளைசின்’ (Methylene cyclopropyl glycine) எனும் நச்சுப்பொருள் உள்ளது. இதுதான் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு உயிரைப் பறிக்கும் காரணியாக ஆகியிருக்கிறது.
  • பொதுவாகவே, அதிகாலையில் நம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும். அதை ஈடுகட்ட கல்லீரல் தன்னிடமுள்ள கிளைக்கோஜென் எனும் சேமிப்புச் சர்க்கரையிலிருந்து சுயமாக குளுக்கோஸை உற்பத்திசெய்து ரத்தத்துக்குக் கொடுக்கும். அப்போது ரத்த குளுக்கோஸ் அளவு சரியாகிவிடும். போதிய ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தும். ஆனால், போதிய ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இரவில் உணவு சாப்பிடாமல், இந்தப் பழங்களை மட்டுமே சாப்பிட்டுவிட்டுப் படுத்து உறங்கினால், அவர்கள் ரத்தத்தில் அதிகாலையில் குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும்போது, அதை ஈடுகட்ட கல்லீரல் குளுக்கோஸை உற்பத்திசெய்ய முடியாது. காரணம், அவர்கள் சாப்பிட்ட லிச்சிப் பழங்களின் நச்சுப் பொருள் அவ்வாறு குளுக்கோஸ் உற்பத்தியாவதைத் தடை செய்துவிடுகிறது.
  • அவர்களுக்கு கிளைக்கோஜென் எனும் சேமிப்புச் சர்க்கரையும் இருக்காது. இதன் விளைவால், அந்தக் குழந்தைகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவு ரொம்பவே குறைந்துவிடுகிறது. மூளைக்கு 3 நிமிடங்களுக்கு மேல் தேவையான குளுக்கோஸ் கிடைக்காவிட்டால், மூளை செயலிழந்துவிடும் (Hypoglycemic Encephalopathy).
  • வாந்தி, மயக்கம், வலிப்பு ஏற்படும். உடனடியாகக் கவனிக்காவிட்டால் இறப்பு நெருங்கிவிடும். இப்படித்தான் முசாஃபர்பூர் மாவட்ட ஏழைக் குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இந்த நோய்க்குச் சிகிச்சை இருக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக குளுக்கோஸ் செலுத்திவிட்டால் நிலைமை சரியாகிவிடும்; உயிராபத்து விலகிவிடும். எனவே, போதிய விழிப்புணர்வும் உடனடி கவனிப்பும் இருந்தால் போதும், இந்த நோயிலிருந்து எவரும் எளிதாகத் தப்பிக்கலாம். பயப்பட வேண்டாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories