- செப்டம்பர் 17, 2021. இடம்: துஷான்பே, தஜிகிஸ்தானின் தலைநகரம். நிகழ்வு: சீனாவும் ரஷ்யாவும் மத்திய ஆசிய நாடுகளும் ஆண்டுதோறும் சந்தித்துக்கொள்ளும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு. 2017-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தக் குழுவில் இணைந்துகொண்டனர். இந்த மாநாட்டு வளாகத்தில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்களான ஜெய்சங்கரும், வாங் யீயும் சந்தித்துக்கொண்டார்கள். கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீண்டுகொண்டிருக்கும் எல்லைப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார்கள். இந்தச் செய்தி சர்வதேச ஊடகங்களில் போதிய கவனத்தைப் பெறவில்லை.
- இரண்டு அண்டை நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தார்கள், பேசினார்கள், அறிக்கை வெளியிட்டார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வுதானே என்றொரு கேள்வி எழலாம். உண்மைதான். இதே இரண்டு அமைச்சர்களும் சரியாக ஓராண்டிற்கு முன்னால் இதே மாநாட்டில் சந்தித்தார்கள்.
- நாள்: செப்டம்பர் 10, 2020. இடம்: மாஸ்கோ. அப்போது எல்லையில் பதற்றம் தொடங்கி மூன்று மாதங்களே ஆகியிருந்தன. ராணுவ, ராஜதந்திர மட்டங்களில் உரையாடல்கள் நடந்த வண்ணம் இருந்தபோதும், வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நிகழ்ந்த முதல் சந்திப்பு அதுதான். அந்தச் சந்திப்பை உலகம் முழுக்கக் கவனித்தது. சந்திப்பின் முடிவில் அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் எழுதப்பட்ட வரிகளுக்கு இடையில் எழுதப்படாத சில வரிகளும் ஊர்வது அரசியல் நோக்கர்களின் கண்களுக்குப் புலப்பட்டது. அதைக் குறித்த அருஞ்சொற்பொருள் விளக்கங்களும் பொழிப்புரைகளும் அப்போது சர்வதேச ஊடகங்களில் வெளியாயின.
- அவற்றோடு ஒப்பிடும்போது இப்போதையச் சந்திப்பை ஊடகங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏன்? அப்போது இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். இப்போது அது உடனடி சாத்தியமில்லை என்று ஊடகர்கள் கருதியிருக்கலாம்.
- இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், நாம் அறிந்த விவரங்கள் பெரும்பாலும் முழுமையானதாக இருப்பதில்லை. பொதுவெளியில் உலவும் கதைகள் பாதி உண்மைகளால் நிரம்பியது. அவை ஆகிவந்த தொன்மங்களால் கட்டப்பட்டவை. தேசியத்தால் வலுவூட்டப்பட்டவை. நமக்குப் பொதுவாகத் தெரிந்ததை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: 1. வட மேற்கில் அக்சை-சின் பகுதியைச் சீனா ஆக்கிரமித்திருக்கிறது. 2. வட கிழக்கில் இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்திற்குச் சீனா உரிமை கோருகிறது. இவை இரண்டும் சரிதான். ஆனால், இந்த நேரடியான வாக்கியங்களுக்கு முன்னாலும் பின்னாலும் பல செய்திகள் இருக்கின்றன.
கொடுங்குளிரில் வெப்ப அலைகள்
- ஜூன் 15, 2020-ல் தொடங்கலாம். அந்த இரவில்தான் பாரதியார் விதந்தோதிய வெள்ளிப் பனிமலையின் கால்வான் பள்ளத்தாக்கில் 14,000 அடி உயரத்தில், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிரிழப்பு இருந்தது; ஆனால் முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
- ஜூன் 15- சீன அதிபர் ஷி ஜின்பிங்-இன் பிறந்த நாள். 2015-2019 காலகட்டத்தில் அந்த நாளில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்துவந்தார். ஆனால், 2020, 2021 ஆண்டுகளில் ஜூன் 15 வந்தது, போனது; பிரதமர் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. காரணம், வெள்ளிடைமலை. கால்வானைத் தொடர்ந்து சீனா வேறு இடங்களிலும் எல்லை தாண்டித் தனது துருப்புகளை நிறுத்திக்கொண்டது.
- இமயத்தின் சிகரங்களை அடர்பனி மட்டுமில்லை, கடந்த 15 மாதங்களாக அவநம்பிக்கையும் போர்த்தியிருக்கிறது. அந்தக் கொடுங்குளிர்ப் பிரதேசம் இப்போது அரசியலின் வெப்ப அலைகளால் நிறைந்திருக்கிறது. ஜூன் 2020 - ஜூலை 2021 இடையே தளபதிகள் மட்டத்தில் இரு தரப்பினரும் 12 முறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதன் பலனாகச் சில இடங்களில் இரு தரப்பினரும் தத்தமது படைகளைப் பின்வலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதே வேளையில் வேறு சில இடங்களில் சமரசம் எட்டப்படவில்லை. ராணுவம் பகலிரவாகக் காவல் காக்கிறது. ராஜீய உறவுகள் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. வணிக உறவுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்து வரும் காலத்தில் அவற்றை நேராக்க முடியுமா என்று தெரியவில்லை.
எல்லையின் கதை
- இந்தியாவிற்கும் சீனாவிற்குமான எல்லைப் பிரச்சனை இன்று புதிதாய்ப் பிறந்ததல்ல. இந்திய-சீன எல்லையின் நீளம் 3488 கிமீ. இந்த எல்லை நெடுகிலும் தர்க்கம் இருக்கிறது. இந்தத் தர்க்கம் இரண்டு நாடுகளும் விடுதலை அடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது.
- இந்திய-சீன எல்லைப் பகுதி பிரதானமாக மேற்கு அரங்கு, கிழக்கு அரங்கு, நடு அரங்கு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் இமாச்சலப் பிரதேசத்தையும் உத்தர காண்டத்தையும் ஒட்டிய நடு அரங்கில் பெரிய கருத்து வேற்றுமைகள் இல்லை. கிழக்கு அரங்கில் அருணாச்சலப் பிரதேசம் இருக்கிறது. இங்குள்ள தவாங் பகுதியில்தான் ஆறாம் தலாய் லாமா பிறந்தார். சீனா தவாங்கிற்கு உரிமை கோரிவந்தது. இப்போது மொத்த அருணாச்சலப் பிரதேசத்தையும் தெற்கு திபெத் என்று அழைக்கும் சீனா, அதை திபெத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்லிவருகிறது. இந்தியா உறுதிபட எதிர்க்கிறது.
அக்சை-சின்
- இப்போதையப் பிரச்சினை கிழக்கில் இல்லை, மேற்கில்தான். அங்கேதான் ஆகஸ்ட் 6, 2019 அன்று ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்ட லடாக் இருக்கிறது. லடாக்கை அடுத்துள்ள அக்சை-சின் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; இந்தப் பகுதிக்கு இந்தியா உரிமை கோருகிறது.
- இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சர்வதேச வரைபடங்களில் ‘சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்றோ ‘சீன நிர்வாக காஷ்மீர்’ என்றோ சுட்டப்பட்டிருக்கும் பகுதிதான் அக்சை-சின் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா அதை லடாக்கின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. சீனாவோ சின்ஜியாங் மாநிலத்தின் பகுதியாகப் பார்க்கிறது. உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் வசிக்கும் மாநிலம் சின்ஜியாங்.
- அக்சை-சின் ஒருபுறம் சின்ஜியாங்கை ஒட்டியும் மறுபுறம் திபெத்தையும் ஒட்டியும் இருப்பதால் சீனாவிற்கு இது பூகோளரீதியாக முக்கியமானது. கடல் மட்டத்திற்கு 14,000 அடி உயரத்தில் மூச்சுவிடும் காற்றுக்கே பிராயாசைப்பட வேண்டிய, மனிதர்கள் வாழ முடியாத பகுதி இது. இப்போது இது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. செப்டம்பர் 15, 2020 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் பகுதியில் 38,000 சதுர கி.மீ. பரப்பைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது அக்சை-சின் பகுதியைத்தான்.
- 1846-ல் ஜம்மு-காஷ்மீர் அரசர் தனது ராஜ்ஜியத்துடன் லடாக் பகுதியை இணைத்துக்கொண்டார். ஜம்மு-காஷ்மீர் அப்போது பிரிட்டிஷ் அரசுக்குக் கட்டுப்பட்ட சுதேச சமஸ்தானமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அக்சை-சின் போன்ற ஆளரவமில்லாத பகுதியைக் குறித்துச் சிந்திக்கும் நிலையில் சீனா இல்லை.
- சீனாவின் சிங் சாம்ராஜ்ஜியம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஓப்பிய யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலமது. வரலாற்றுரீதியாக அக்சை-சின் உள்ளிட்ட லடாக் பகுதி இந்தியாவுக்குப் பாத்தியப்பட்டது என்றார் பிரதமர் நேரு. அவர் அப்படிச் சொன்னது 1954-ல். 65 ஆண்டுகளுக்குப் பிறகு
- 2019-ல் லடாக் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொன்னதும் அதையேதான்.
- சீனா, அக்சை-சின் பகுதிக்கு உரிமை கோரிவந்தது. 1962 போருக்குப் பிறகு இது சீனாவின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், இந்தப் பகுதியில் சீனர்களோ திபெத்தியர்களோ வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்களோ காஷ்மீரிகளோ வாழ்ந்ததற்கான ஆதாரமும் இல்லை. ஏனெனில், இது மனிதர்கள் வாழத் தகுதியான பகுதி இல்லை. 1948-இலும் 1950-இலும் இந்திய அரசு எல்லைகளைக் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டது.
- அதில் இந்தப் பகுதி ‘வரையறுக்கப்படாதது’ என்று குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1954-ல் இந்திய அரசு புதிய வரைபடங்களை வெளியிட்டது. அதில் அக்சை-சின் இந்தியாவின் பகுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரைபடத்தை வெளியிடும் முன் இந்தியா சீனாவுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சீனா சொல்கிறது. நேரு ஏன் அப்படிச் செய்தார்?
- புதிய வரைபடங்கள் வெளியிடப்படுவதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கையில் கையொப்பமிட்டன. பிரிட்டிஷ் இந்தியா, திபெத்தில் அனுபவித்துவந்த பல உரிமைகளைச் சுதந்திர இந்தியா விட்டுக்கொடுத்தது. ‘இந்தி-சீனி பாய் பாய்’ போன்ற முழக்கங்கள் அந்தக் காலத்தியவை. பதிலுக்கு, அக்சை-சின் பிரச்சினையை சீனா கைவிடும் என்ற பெருந்தன்மையை இந்திய அரசு எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.
- ஆர்.கே.நேரு 1955 முதல் 1958 வரை சீனாவிற்கான இந்தியத் தூதராக இருந்தவர். அவர் இப்படிச் சொன்னார்: ‘இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அக்சை-சின் பகுதியின் மீது உரிமை கோருகின்றன. இரண்டு கோரிக்கைகளுமே வலுவானவை அல்ல. என்றாலும், இரண்டு நாடுகளையும் ஒப்பிட்டால் நமது கோரிக்கைச் சற்றே வலுவானது எனலாம்.’
அருணாசல பிரதேசம்
- சர்சைக்குரிய இன்னொரு முக்கியப் பகுதி வடகிழக்கில் உள்ள தவாங். அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதி. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1914-ல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவும், கோமிங்டாங் கட்சியின் ஆட்சியில் இருந்த சீனாவும், திபெத்தும் கூடிப் பேசின. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் ஓர் எல்லைக் கோடு வரையப்பட்டது.
- இந்தக் கோடு, அதை உருவாக்கிய ஆங்கிலேய அதிகாரியின் பெயராலேயே ‘மக்மோகன் கோடு’ என்று அழைக்கப்பட்டது. 1947-ல் விடுதலை அடைந்த இந்தியா, இதையே எல்லையாக வரித்துக்கொண்டது. 1949-ல் உள்நாட்டுப் போரில் வென்று ஆட்சி அமைத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ‘மக்மோகன் கோட்’டை ஏற்க மறுத்துவிட்டது.
- 1954-ல் இந்திய அரசு வெளியிட்ட வரைபடத்தில் அக்சை-சின்னுடன் அருணாசல பிரதேசமும் உள்ளடங்கியிருந்தது. சீனா இதை ஏற்க மறுத்தது. தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் உரசல்கள் தொடங்கின. 1959-ல் சீனப் பிரதமர் சூ-யென்-லாய் தில்லிக்கு வருகை தந்தார்.
- நேரு ஏராளமான ஆவணங்களையும் வரைபடங்களையும் முன்வைத்துக் கொண்டு சூவுடன் மணிக்கணக்காகப் பேசினார். 1920-க்கு முன்பு எந்த வரைபடத்திலும் அக்சை-சின் சீனாவின் பகுதியாகக் காட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார் நேரு. பதிலுக்கு, 1914-ல் ஆங்கிலேயரால் வரையப்பட்ட மக்-மோகன் கோடுதான் அருணாசல பிரதேசத்தை இந்தியப் பகுதியாகக் காட்டுகிறது, அதற்கு முன்புவரை அது திபெத்தின் பகுதிதான் என்றார் சூ. ஒருபோதும் மக்-மோகன் கோட்டைச் சீனா ஏற்காது என்றும் அவர் சொன்னார்.
- நீண்ட வாதங்களின் முடிவில் சூ ஒரு சமரசத்தை முன்மொழிந்தார். மேற்கேயுள்ள அக்சை-சின் சீனாவிற்கு முக்கியமானது, அதை இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும்; பதிலுக்கு கிழக்கேயுள்ள தவாங் உள்ளிட்ட ச்சல பிரதேசத்தைச் சீனா விட்டுக்கொடுக்கும். இதன் உட்பொருள் என்னவென்றால், மேற்கே இந்தியாவின் கோரிக்கை பலமானது. ஆனால், இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும். கிழக்கே சீனாவின் கோரிக்கை வலுவானது. என்றாலும் சீனா விட்டுக்கொடுக்கும்.
- நேரு இந்தச் சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 19-ம் நூற்றாண்டு வரைபடங்களில்கூட அக்சை-சின் பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாகத்தான் காட்டப்படுகிறது. 1914 முதல் 1948 வரை மக் மோகன் கோட்டைச் சீன அரசுகள் எதிர்க்கவில்லை. ஆகவே இரண்டு பகுதிகளும் இந்தியாவையே சேர வேண்டும் என்று வாதிட்டார் நேரு. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. கருத்து வேறுபாடுகள் சர்சைகளாக வளர்ந்தன.
- 1956-ல் திபெத் கொரில்லாக்களின் போராட்டத்தைச் சீன ராணுவம் ஒடுக்கியது. இது இந்திய அறிவுஜீவிகளிடம் சீனாவிற்கு எதிரான மனப்போக்கை உருவாக்கியது. 1959-ல் தலாய் லாமா திபெத்திலிருந்து வெளியேறியபோது இந்தியா அடைக்கலம் அளித்தது. இது சீனாவிடம் சங்கடத்தை உருவாக்கியது. 1960-ல் அக்சை-சின் வழியாக இந்தியா மேற்கொண்ட சின் ஜியாங்- திபெத் இணைப்புச் சாலையும் சீனாவிற்கு ஏற்புடையதாக இல்லை.
1962 காயங்கள்
- நவம்பர் 1961-ல் நேரு ‘முன்னேறும் கொள்கை’ ஒன்றை அமலாக்கினார். 1954-ல் இந்தியா வெளியிட்ட வரைபடங்களின் அடிப்படையில் எல்லைகளில் காவல் சாவடிகளை அமைத்துத் துருப்புகளை நிறுத்துவதுதான் ‘முன்னேறும் கொள்கை’.
- இதன்படி சர்ச்சைப் பகுதிகளிலும் எல்லைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நேருவைப் பல ஆய்வாளர்கள் தேர்ந்த வழக்கறிஞராகவும், இலட்சியவாதியாகவும், வராலாற்று அறிஞராகவும் மதிப்பிடுகின்றனர். ஆயின், நேரு கள யதார்த்தங்களுக்கு முகம் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
- சீனா இந்தியாவை ஒருபோதும் தாக்காது என்பது நேருவின் நம்பிக்கையாக இருந்தது. நேரு திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார் என்பது மா சே துங்கின் அச்சமாக இருந்தது. நேருவிற்கு அப்படியான எண்ணம் இல்லை. ஆனால், சீனாவின் அச்சத்தை உய்த்துணர்ந்து அதைக் களையும் ஆற்றலுள்ளவர்கள் நேருவின் அருகில் இல்லை.
- எல்லைகளில் உரசல்கள் அதிகரித்தன. 1962-ல் அது போராக வெடித்தது. சீனா, அக்சை-சின்னைக் கடந்து லடாக்கிலும், மக் மோகன் கோட்டைக் கடந்து அருணாச்சல பிரதேசத்திலும் நுழைந்தது. முடிவில் அருணாசல பிரதேசத்திலிருந்தும் லடாக்கிலிருந்தும் பின்வாங்கிக்கொண்டது. அக்சை-சின் சீனாவின் வசமானது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவிடம் தங்கியது.
- 1962 போரைப் பற்றிப் பல தொன்மங்கள் உண்டு. அவற்றுள் இரண்டு முக்கியமானவை-சீனா இந்தியாவை ஏமாற்றிவிட்டது என்பதும் சீனா முற்றிலும் எதிர்பாராத கணத்தில் இந்தியாவைத் தாக்கிவிட்டது என்பதும். இவை சரிதானா?
- போரின் தோல்வியை ஆய்ந்தறிய இந்திய அரசு ஹெண்டர்சன் புரூக்ஸ்-பாகத் குழுவை நியமித்தது. குழுவினர் வெளியிட்ட ஹெஆர்பி அறிக்கை அரசால் வெளியிடப்படவில்லை. எனினும், 2014-ல் அதன் சில பகுதிகள் குறுகிய காலத்திற்கு இணையத்தில் காணக்கூடியவையாக இருந்தன. களத்தில் உள்ள ராணுவத்தினர் சீனாவை நேரிடுகிற நிலையில் நமது துருப்புகள் இல்லை என்பதை ராணுவத் தலைமைக்குத் தெரிவித்துவந்தனர் என்கிறது அந்த அறிக்கை.
- ஆனால் ராணுவத் தலைமை இதைப் பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கவில்லை. உளவுத் துறையும் சீனா நம்மை ஒருபோதும் தாக்காது என்று சொல்லி வந்தது. அதிகாரத்தின் காதுகளில் அது கேட்க விரும்பும் சங்கீதத்தை மட்டும் இசைப்பதில் பிரதமர் அலுவலகமும், உளவுத் துறையும், ராணுவத் தலைமையும் ஒன்றிணைந்து நின்றன.
- சுருக்கமாகச் சொன்னால் இரண்டு பக்கமும் இருந்த தவறான பார்வைகளே போருக்கு இட்டுச் சென்றன. திபெத் அரசியலில் இந்தியா தலையிடுகிறது என்று சீனா நம்பியது. அது தவறு. மறுபுறம் நேரு ஒரு தலைப்பட்சமாக எல்லைகளை முடிவுசெய்தார். சீனா அதை ஏற்கும் என்று மனபூர்வமாக நம்பினார். சீனா இந்தியாவை ஒரு போதும் தாக்காது என்றும் நம்பினார். அவரது நம்பிக்கைகள் தவறானவை என்று இடித்துரைக்க வல்லவர்கள் இல்லாத ஏமரா மன்னனாக இருந்தார் நேரு.
நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு
- போரின் கசப்பு மறைய கால் நூற்றாண்டு காலம் வேண்டி வந்தது. 1988-ல் பிரதமர் ராஜீவ் காந்தி சீனத் தலைவர் டெங்-சியோ-பிங்கைச் சந்தித்தார். புதிய உறவுகளுக்குத் தொடக்கம் குறிக்கப்பட்டது. அப்போது சூழல் மாறியிருந்தது. 1974-ல் திபெத் சீனாவின் வசம் வந்துவிட்டது. உலகமயம், தாராளமயம் முதலான சொற்கள் புழக்கத்திற்கு வந்திருந்தன. 1972-ம் ஆண்டிலேயே அமெரிக்க அதிபர் நிக்சன் சீனாவிற்கு விஜயம் செய்துவிட்டார். 1978-ல் சீனா தனது இரும்புக் கதவுகளைத் திறந்துவிட்டது. 1980-ல் டெங்-சியோ-பிங் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1960-ல் சூ-யென்-லாய் முன் மொழிந்த சமரசத்தை வழிமொழிந்தார். அதாவது அக்சை-சீன் சீனாவிற்கு அருணாச்சல பிரதேசம் இந்தியாவிற்கு!
- இந்திரா காந்தி, டெங்-சியோ-பிங் இருவரும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள். தேசியத்தைக் கட்டுப்படுத்தி உடன்பாட்டை எட்டியிருக்கக் கூடியவர்கள். எனினும் இரண்டாவது முறையாகவும் சமரசம் கை நழுவிப்போனது.
- 1974-க்குப் பிறகு சீனாவில் அந்நிய முதலீடு குவிந்தது. 1986-ல் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ‘காட்’டில் இணைந்தது சீனா. இந்தப் பின்னணியில்தான் 1988-ல் ராஜீவ்- டெங் சந்திப்பு நிகழ்ந்தது. எல்லைப் பிரச்சினைகளைத் தனியேப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும், வணிக உறவுகளை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றும் தலைவர்கள் முடிவுசெய்தார்கள். வணிகம் தழைத்தது.
- 1993-ல் பிரதமர் நரசிம்ம ராவ்- சீனப் பிரதமர் லீ பெங் இடையில் உருவான எல்லைச் சமாதான உடன்படிக்கையும் முக்கியமானது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக் கோடு என்பது இல்லை. 1959 முதலே சீனா, ‘நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control-LAC) என்றொரு சொற்றொடரைப் பயன்படுத்திவந்தது.
- யார் யாரிடம் எந்தெந்தப் பகுதிகள் உள்ளனவோ அவை அவரவரின் கட்டுப்பாட்டில் நீடிக்கும். அப்படியான பகுதிகளின் எல்லையைப் பிரிக்கும் கோடுதான் நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு. 1993 உடன்படிக்கையானது நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடே மறு தீர்மானம் வரும்வரை எல்லைக் கோடாக நீடிக்கும் என்று ஏற்றுக்கொண்டது. இந்தப் பகுதிகளில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.
- 2003-ல் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது முன்னர் இரண்டு முறை முறிந்துபோன சமரசப் பேச்சு வார்த்தை மீண்டும் முகிழ்த்தது. சீன அதிபர் ஹூ ஜின் டாவ்-இன் ஆதரவும் இருந்தது. ஆனாலும், இடை நின்று போனது. மூன்றாவது முறையும் சமரசம் கை கூடவில்லை.
உரசல்கள்
- நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு வகுக்கப்பட்டாலும் அதிலும் பல இடங்களில் கருத்தொற்றுமை இல்லை. இந்திய சீன எல்லைகளில் அவ்வப்போது உரசல்கள் நிகழவே செய்தன. பல உரசல்கள் சிறிய அளவிலானவை.
- பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, தற்போதையப் பதற்றச் சூழலுக்கு முன்னதாக நிகழ்ந்த உரசல்களில் மூன்று சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை. 2014-ல் கிழக்கு லடாக்கில் ச்சுமார் என்கிற இடத்தில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. படைகள் நேருக்கு நேர் நின்றன. 16 நாட்கள் நீடித்த இறுக்கம் ராஜீய, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தணிந்தது. 2015-ல் லடாக்கின் வடபகுதியில் புர்ட்சே என்கிற இடத்தில் சீன ராணுவம் அமைத்த குடில் ஒன்றை எல்லைப்புறக் காவல் படை அகற்றியதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் துருப்புகள் குவிக்கப்பட்டன. எனினும் களத்தில் உள்ள ராணுவ மட்டத்திலேயே நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பலன் இருந்தது. ஒரு வார முடிவில் படைகள் பின்வாங்கிக்கொண்டன.
- இந்த இரண்டு சம்பவங்களோடும் ஒப்பிடுகையில், 2017-ல் நிகழ்ந்த தோக்லாம் உரசல் தீவிரமானது. 73 நாட்கள் நீடித்தது. தோக்லாம் 100 சதுர கி.மீ. பரப்பளவு உள்ளது. பள்ளத்தாக்குகளும் சமதளங்களும் நிரம்பியது. இந்திய- சீன- பூடான் முத்தரப்பு எல்லையில் பூடான் பகுதியில் உள்ளது. இங்கே சீனா சாலை அமைக்க முயற்சித்தது. இந்தியா தடுத்தது. இரு தரப்பு வீரர்களும் கண்ணோடு கண் நோக்கும் தூரத்தில் நின்றுகொண்டனர். அந்தச் சூழலில்தான் பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜிங் பிங்கும் வுகான் நகரில் சந்தித்தனர். இப்போது கொரோனாவின் நதிமூலமாகப் பிரபலமாகியிருக்கும் வுகான், ஒரு பராம்பரியச் சிறப்புமிக்க நகரம். தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து படைகள் பின்வாங்கிக்கொண்டன.
- வுகான் சந்திப்பின் நட்புணர்வு 2019-ல் நடந்த மாமல்லபுரம் சந்திப்பிலும் தொடர்ந்தது. இந்தியா அப்படித்தான் நினைத்தது. ஆனால் சீனாவிற்கு வேறு திட்டங்களும் இருந்திருக்க வேண்டும்.
குருதிக் களம்
- 2020 ஏப்ரல் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா தனது பகுதியில் சாலைகள் அமைக்க முற்பட்டதுதான் இப்போதைய பதற்றத்தின் தொடக்கப்புள்ளி. சில நோக்கர்கள் 2019-ல் இந்தியா லடாக்கை ஒன்றியப் பிரதேசமாக மாற்றியபோதே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
- இப்போதையச் சூழல் முந்தைய உரசல் சம்பவங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது. கடந்த 45 ஆண்டுகளாக, இன்னும் தீர்மானமாக வரையறுக்கப்படாத இந்த எல்லைப் பகுதியில் வேட்டுச் சத்தம் கேட்டதில்லை, தீவிரவாதிகள் நுழையத் தலைப்பட்டதில்லை, குடியுரிமை இல்லோதார் தாண்டியதில்லை, குருதியால் நனைந்ததில்லை. கடைசியாகச் சொன்ன நற்பெயர்தான் 2020, ஜுன் 15-ம் தேதி இல்லாமலானது. அன்றிரவு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பு அரை நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்திராதது.
கால்வான் பள்ளத்தாக்கு
- கால்வான் பள்ளத்தாக்கு இமயமலைக்கும் கால்வான் ஆற்றுக்கும் இடையில் இருக்கிறது. கால்வான் ஆறின் பெரும்பகுதி சீனாவில் ஓடி, இந்தியப் பகுதியில் உள்ள ஷயாக் ஆற்றில் சங்கமிக்கிறது. 1962 போருக்குப் பிறகு இந்தப் பள்ளத்தாக்கைக் குறித்த உரிமைப் பிரச்சினைகளைச் சீனா எழுப்பியதில்லை. எனில், இப்போது ஷயாக் நதிச் சங்கமம் வரை உரிமை கொண்டாடியது. அதாவது நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தனக்குச் சாதகமாக இன்னும் தள்ளி வைக்க முயன்றது.
- கால்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய ‘பிபி14’ (Patrolling Point -PP14) எனும் இந்திய ரோந்து மையத்தைச் சீனா ஆக்கிரமித்திருந்தது. அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த மையத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ தூரம் இரு சாரரும் பின்வாங்கிக்கொள்வது என்று முடிவானது. ஜூலை 25, 2020 அன்று படைகள் பின்வாங்கின. அதாவது ஏற்கனவே இந்தியத் துருப்புகள் ரோந்து போய்க்கொண்டிருந்த ஒரு பகுதிக்கு இப்போது போக முடியாது. மேலும், இந்தக் கால கட்டத்தில் சீனா பான்காங் ஏரி, கோக்ரா ஊற்று, தெப்சாங் சமவெளி முதலிய இடங்களிலும் எல்லை தாண்டியிருந்தது.
பான்காங் ஏரி
- பான்காங் ஏரியில் சீனத் துருப்புகள் பிப்ரவரி 2021-ல்தான் பின்னகர்ந்தன. கடல் மட்டத்தைவிட 14,000 அடி உயரத்தில் இருக்கிறது பான்காங் ஏரி. 135 கிமீ நீளம். பூமராங் வடிவம். மையத்தில் 6 கிமீ அகலம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 40 பாகையாக இருக்கும். நீர் உறைந்துபோகும். அதன் மீது வாகனங்கள் போக முடியும். ஏரியின் வடக்குக் கரையில் மலைக் குருத்துகள் நீர்ப்பரப்புக்குள் விரல்களைப்போல் நீண்டிருக்கும். இப்படியான எட்டுக் குருத்துகள் உள்ளன.
- அவை ‘விரல்-1’, ‘விரல்-2’…’விரல்-8’ என்று அழைக்கப்படுகின்றன. நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடானது, விரல் 8-க்கு அப்பால் இருக்கிறது. சீனாவின் சோதனைச் சாவடி இன்னும் சற்று தள்ளியிருக்கிறது. இந்தியாவின் சோதனைச் சாவடி விரல் 3-க்கு அருகமையில் இருக்கிறது. விரல் 4-க்கும் விரல் 8-க்கும் இடையிலான பகுதிக்குச் சீனா உரிமை கோருகிறது. இந்தப் பகுதியில் இந்தியத் துருப்புகள் ரோந்து போய்க்கொண்டிருந்தன. கால்வான் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துக்கொண்டது.
- இதற்குப் பதிலடியாக 2020 ஆகஸ்ட் இறுதியில் ஏரியின் தெற்குக் கரை மலைச் சிகரங்களை இந்தியத் துருப்புகள் கைப்பற்றிக்கொண்டன. இந்தப் பகுதிக்குக் கைலாசம் என்று பெயர். இங்கிருந்து இந்தியத் துருப்புகளால் சீனத் துருப்புகளைக் குறிபார்க்க முடிந்தது. இது ஒரு நல்ல போர்த் தந்திரம் என்று சர்வதேச ராணுவ வல்லுநர்கள் கருதினர். பேச்சுவார்த்தைகளின் போது சீனா ஒரு கோரிக்கை வைத்தது. பான்காங்கின் வடகரையில் சீனத் துருப்புகளைப் பின்வாங்கிக்கொள்வதற்குப் பதிலீடாகத் தென்கரையில் கைலாசச் சிகரத்திலிருக்கும் இந்தியத் துருப்புகளும் பின்வாங்கவேண்டும். ஒன்பதாவது சுற்றில் இந்தியா இதற்கு இணங்கியது.
- அதன்படி 2021, பிப்ரவரி 10 முதல் 19க்குள் லடாக் பகுதியில் பான்காங் எனும் ஏரியின் கரைகளிலிருந்த இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கிக்கொண்டன. சீனா, எல்லை தாண்டி நிறுத்தியிருந்த ஆயிரக்கணக்கான பீரங்கிகளையும் கவச வண்டிகளையும் பின்திசை நோக்கி செலுத்தியது. தற்காலிகக் கூடாரங்களையும் காப்பரண்களையும் அகற்றியது. இந்திய ராணுவம் வெளியிட்ட காணொலிகள் சமூக ஊடகங்களில் காணக்கிடைத்தன. அப்போது இதை இந்தியாவின் வெற்றியாகக் கொண்டாடினர் ஒரு சாரர். பான்காங்கிலிருந்து பின்னேறிய சீனா, கோக்ராவிலும் முக்கியமாக தெப்சாங்கிலும் அதே வேகத்தில் பின்னகராது என்று சில அரசியல் நோக்கர்கள் அஞ்சினர். கைலாசச் சிகரம் எனும் துருப்புச் சீட்டை ஆட்டத்தில் இன்னும் சற்றுத் தாமதமாக இறக்கியிருக்கலாம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அவர்கள் அஞ்சியதுபோலவே ஆயிற்று.
கோக்ரா ஊற்று
- லடாக் பகுதியில் சீனா எல்லை தாண்டிய இன்னொரு இடம் கோக்ரா ஊற்று, கோக்ரா ஊற்றை ஒட்டிய இந்திய ரோந்து மையங்கள் இரண்டை (PP-17A, PP-15) சீனா ஆக்கிரமித்திருக்கிறது. 2021 ஜூலை 31-ம் தேதி நடந்த பனிரெண்டவது சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சீனா பின் வாங்க்கும் என்று இந்தியத் தரப்பில் நம்பப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
தெப்சாங் சமவெளி
- அடுத்தது, தெப்சாங் சமவெளி. 18,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மணல்பரப்பு. ராணுவரீதியாக முக்கியமானது. இந்தச் சமவெளியை அடைவதற்கு Y வடிவிலான ஒரு குறுகலான வழி இருக்கிறது. இது இந்தியப் பகுதிக்குள், நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சீன ராணுவம் இந்த வழியை அடைத்துவிட்டது. இதனால் இந்தியத் துருப்புகளால் ஐந்து ரோந்து மையங்களுக்கு ((PP-10, PP-11, PP-11a, PP-12, PP-13) செல்ல முடியவில்லை. இதன் மூலம் இந்தியப் படைக்கு 972 சதுர கிமீ பரப்பிற்கான வழி மறிக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
பதற்றமும் போரும்
- இந்தப் பதற்றம் போராக மாறுமா? போர் அழிவைத்தான் கொண்டுவரும். போர் எந்தக் கருத்து வேற்றுமையையும் களைந்ததாக வரலாறு இல்லை. மாறாக வேற்றுமைகள் அதிகமாகும். ஆகவே இரண்டு நாடுகளும் ஒரு முழு யுத்தத்தில் இறங்கிவிடாது என்றுதான் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே வேளையில் இந்தப் பதற்றம் உடனடியாக முடிவுக்கு வராது என்றும் அவர்கள் கருதுகின்றனர். இந்தியா இந்தச்சூழலை எதிர்பார்க்காமல் இருந்திருக்காலம்; ஆனால் சீனா நீண்ட காலமாகத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகிறது என்பதே அரசியல் விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது. ஏன் சீனா தாண்டத் தாண்ட கோடுகளைத் தள்ளிப் போட முயற்சிக்கிறது? சீனாவின் மாறிவரும் அணுகுமுறைதான் முக்கியக் காரணி.
- 1988-ல் டெங் சியோ பிங் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 21ஆம் நுற்றாண்டு இந்திய-சீன நூற்றாண்டாக இருக்கும் என்று கூறினார். இப்போதைய அதிபர் ஷி ஜிங் பிங் அப்படி நினைக்கவில்லை. அவர் 21-ம் நூற்றாண்டைச் சீனாவின் நூற்றாண்டாக நிறுவ முயற்சிக்கிறார். அவரது முன்னோடிகள் 1960 (சூ/மாவோ), 1980 (டெங்), 2003 (ஹூ) ஆகிய ஆண்டுகளில் ஆதரித்த சமரச முயற்சிகளை ஷி ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார். மாறாக இந்தியாவின் மீது தொடர்ந்து அழுத்தத்தைத் தருவது என்பது அவரது நோக்கமாகத் தெரிகிறது. எல்லையில் பதற்றம் நீடிப்பதால் இந்தியாவின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரித்தபடியே இருக்கும்.
இந்தியா என்ன செய்யலாம்?
சீனப் பொருட்களைப் புறக்கணிக்கலாமா?
- முதலாவதாக, எல்லைச் சிக்கல் நீடித்தால் அது வணிக உறவுகளைப் பாதிக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்திருக்கிறார். அதாவது எல்லைப் பிரச்சனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வணிக உறவுகளைத் தொடரலாம் என்கிற 1988 நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக்கொள்கிறது என்பது பொருள்.
- இந்திய அரசு பல சீனச் செயலிகளைத் தடை செய்துவிட்டது. ரயில்வே, தொலைத் தொடர்பு, கட்டுமானம் முதலான துறைகளில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதில் கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்திய வணிகமோ பல கட்டங்களில் சீனாவை நம்பியிருக்கிறது. மருந்து, ஆட்டோமொபைல், கணினி வன்பொருட்கள் முதலான இந்தியத் தொழில்களுக்கு அவசியமான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்துதான் வர வேண்டியிருக்கிறது.
- கடந்த தசாப்தங்களில், இந்தியா மட்டுமில்லை, உலக நாடுகள் பலவும் சீனாவின் உற்பத்தியையும் அதன் விநியோகச் சங்கிலியையும் அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. 2020-21 ஆண்டுகளில் எல்லைப் பிரச்சினையையும் பெருந்தொற்றையும் மீறி இந்தியாவின் சீன இறக்குமதி 16% ஆகியிருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 3% அதிகம். சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதும் அதன் மூலம் சீனாவைப் பணிய வைப்பதும் உடனடியாகச் சாத்தியமில்லை.
அமெரிக்க ஆதரவு உதவுமா?
- இரண்டாவதாக, சில அரசியல் நோக்கர்கள் இந்தியா, அமெரிக்கக் குழாமிற்கு மேலும் அணுக்கமாக வேண்டும் என்றும் அதன் மூலம் சீனாவை நேரிட வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். வேறு சிலர் சொல்வது இதற்கு நேர்மாறானது. இந்தியா அமெரிக்கக் குழாமிற்கு வெகு நெருக்கமாகத்தான் இருந்துவருகிறது; அந்தக் குழாம், இந்தியாவைச் சீனாவிற்கு எதிராக நிறுத்த முயல்கிறது; அதற்குச் சீனா ஆற்றிய எதிர்வினைதான் இது என்கிறார்கள் அவர்கள்.
- வங்காள தேச யுத்தம் 1971-ல் நிகழ்ந்தபோது பனிப்போர் உச்சத்தில் இருந்தது. உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் முறையே சோவியத் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவில் இயங்கின. காலம் மாறிவிட்டது. உலகம் முழுதும் ஒரே சங்கிலியால் இணைக்கப்படுகிறது. இந்தியா அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கலாம். ஆனால், இது இந்தியாவின் பிரச்சினை. இந்தியாதான் நேர்கொள்ள வேண்டும். எல்லா நாடுகளும் கொரோனாவை நேரிடுவதிலும் தத்தமது பொருளாதாரத்தைச் சீரமைப்பதிலும் கவனம் செலுத்திவருகின்றன. ஆகவே அந்நிய நாடுகள் உதவும் என்று இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
- ஆக, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலமும் அமெரிக்க உதவியை நாடுவதன் மூலமும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது.
எல்லை என்பது கோடுதான்
- மூன்றாவதாக, அரசு எல்லையில் உள்ள நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம். இதற்கு முன்பு இந்தியா சந்தித்த போர்களின் முடிவுகள் பலவிதமாக அமைந்திருக்கின்றன. 1962 சீனப் போரின் முடிவு இந்தியாவிற்குச் சிலாக்கியமாக இல்லை. 1965 பாகிஸ்தான் யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ளப்பட்டது. வங்காள தேசப் போரிலும் (1971), கார்கில் யுத்தத்திலும் (1999) இந்தியா வெற்றிக்கொடி நாட்டியது. முடிவுகள் எப்படியானாலும் எல்லாப் போர்க் காலங்களிலும் இந்திய மக்கள் ஒற்றைக் கட்டாக நின்றார்கள். இப்போதும் அப்படியான நிலையைக் கொண்டுவர வேண்டும். ஆகவே ராணுவ ராஜீய ரகசியங்கள் நீங்கலான பேச்சு வார்த்தைகளின் சாரத்தைப் பொதுவெளியில் வைக்கலாம். இது மக்களிடையே உரையாடலை ஊக்குவிக்கும்.
- எல்லைப் பிரச்சனையில் தேசியம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். நடைமுறைச் சிக்கல்களும் கள யதார்த்தங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அக்சை-சின் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலம். சீனா, அதன் நிலவியல் முக்கியத்துவத்திற்காக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஒரு முறை சொன்னார்: ‘கடந்த 200 ஆண்டுகளில் உலகின் எல்லா நாடுகளிலும் எல்லைக் கோடுகள் மாற்றி வரையப்பட்டிருக்கின்றன’. ஆகவே இந்தக் கோடுகளுக்கு புனிதத்துவம் கற்பிக்க வேண்டுவதில்லை. இந்தியா- சீனா இடையே ஒரு சமரசம் ஏற்பட்டால் அடுத்த நாள் என்ன நடக்கும்? எல்லாம் முந்தைய நாள் நடந்ததுபோலவே இருக்கும்.
- 1947-ல் பிரிட்டிஷார் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரைந்த எல்லைக் கோட்டையும் அதன் விளைவுகளையும் இந்த இடத்தில் நினைத்துப்பார்க்கலாம். எத்தனை லட்சம் இடப் பெயர்வுகள்? எத்தனை லட்சம் மரணங்கள்? எத்தனை எத்தனை வன்புணர்வுகள்? அதனுடன் ஒப்பிட்டால் அக்சை-சின் மனிதர்களைப் பாதிக்கிற பிரச்சினை இல்லை.
- பொதுவாக நாடுகளுக்கிடையில் எங்ஙனம் எல்லைகள் உருவாகின்றன? மலைச்சரிவுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரைகள் போன்ற நிலவியற் கூறுகளே இயற்கையான எல்லைகளாக அமையும். தமிழ்நாட்டின் எல்லைகளாகத் தெற்கே நீலத் திரைக்கடலையும் வடக்கே மாலவன் குன்றத்தையும் பாரதி குறிப்பது இந்தப் பண்பாட்டிலிருந்துதான். ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வரைந்த கோடுகளுக்குப் பின்னால் எல்லையை விஸ்திரிக்கும் பேராசை பொதிந்து கிடந்தது. அவை இயற்கைக் கூறுகளுக்கும் மனித வாழ்வியலுக்கும் கட்டுப்பட்டதல்ல. எல்லைகளைக் குறித்து உரையாடும்போது நாம் இவற்றையும் மனதில் நிறுத்த வேண்டும்.
பக்கத்து வீட்டு நண்பர்கள்
- நான்காவதாக, நாம் எல்லா அண்டை நாடுகளோடும் நட்பு பாரட்ட வேண்டும். வங்க தேசம், பூட்டான், மியன்மார், நேபாளம், இலங்கை முதலான அண்டை நாடுகளுடனும் நமக்கு கலாச்சார, வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. அவர்களோடு இணக்கம் பேணுவதன் மூலம் சீனாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் தர முடியும். இது சீனாவைச் சமரச மேசைக்கு வரவழைக்கிற நிர்ப்பந்தங்களை உருவாக்கும்.
இந்தியாவின் எழுச்சி
- கடைசியாக, நமது மனித வளத்தை முன்னிறுத்தி ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாக வேண்டும். பிரதமர் மோடியின் தற்சார்புக் கொள்கை 2020 ஜூன் 15-க்கு முன்னரே முன் வைக்கப்பட்டது. அதற்கான அடி வைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவாலும் உலகத் தொழில் அனைத்தையும் உவந்து செய்ய முடியும். அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்தியா மனித வளம் மிக்க நாடு. அந்த வளத்தில் கணிசமாக இளரத்தம் ஓடுகிறது. இந்த மக்கள் திரளுக்கு தரமான கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதன் மூலம் இந்தியாவால் ஒரு பெரிய உற்பத்திச் சக்தியாக வளர முடியும். அப்போது இந்தியா எழுச்சி பெறும். அது அமைதியான எழுச்சியாக இருக்கும். அந்த எழுச்சியின் கனிகள் நுகரப்படும்போது நம்மால் எல்லைப் பிரச்சனைகளை நேரிட முடியும்.
நன்றி: அருஞ்சொல் (22 – 10 – 2021)