TNPSC Thervupettagam

முடிவுக்கு வருமா போலி என்கவுன்ட்டர்

May 17 , 2023 557 days 420 0
  • உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் (அலகாபாத்) ஏப்ரல் 15-ஆம் தேதி அரசியல் தாதா அதிக் அகமதும், அவரது சகோதரர் அஷ்ரப்பும் காவலர்கள் கண்ணெதிரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். இது முக்கியமான பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
  • முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. என்ற அரசியல் தகுதிகளுடன், கொடிய குற்றங்களுக்கு முன்னோடியாக இருந்தவர், சமாஜவாதி கட்சியைச் சார்ந்த அரசியல் தாதா அதிக் அகமது. கொலைவழக்கில் சிறையில் இருக்கும் அவரையும் அவரது சகோதரரையும் கொலை செய்திருப்பது, குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காது என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. நமது சமூகத்தில் பரவிவரும் வன்முறை மனநிலையையும் இது பிரதிபலிக்கிறது.
  • இந்தக் கொலை வழக்கு அனைவரும் அறிந்தது. ஆனால் கொலைக்கான பின்னணியை யாராலும் கூற முடியாது. உத்தர பிரதேச மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை ஆணையம் இதுபற்றி விசாரிக்கிறது. இரண்டு மாதங்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை அளிக்குமாறு இந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக விசாரிக்க காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • இக்கொலை வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான போக்கு வளர்ந்து வருவதைக் கண்டிப்பதற்கான வாய்ப்பு இவ்வழக்கு என்பதை மறுக்க முடியாது. குற்றவாளிகளையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோரையும் நீதித்துறையின் எல்லையை மீறும் வகையில் கொன்றொழிக்கும் போக்கு நல்லதல்ல. இதனை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினர் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. அதைவிட ஆபத்து, இந்தப் படுகொலைகளை பெரும்பாலான மக்கள் பாராட்டி ஆதரிப்பதாகும்.
  • "என்கவுன்ட்டர்' என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் காவல்துறையினரின் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, "சிஎஸ்டிஎஸ்' என்ற தன்னார்வ அமைப்பு 22 மாநிலங்களில் எடுத்த ஆய்வில், 50%-க்கு மேற்பட்டோர் காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுன்ட்டர் வன்முறைகளை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
  • நமது அடிப்படை மதிப்பீடுகளை மறுசீரமைப்பு செய்தாக வேண்டிய காலம் இது என்பது புலப்படுகிறது. நமது அரசியலமைப்பு சட்டமும் சட்டத்தின் ஆட்சியும் நாட்டின் முன்னுரிமைகளில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டிய நேரம் இது. தகுந்த விசாரணையின்றி சட்டவிரோதமான முறையில் குற்றவாளிகளை ஒழிப்பது, நமது குற்றவியல் நீதி முறைமையை வலுவிழக்கச் செய்துவிடும்.
  • உத்தர பிரதேச மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 183 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் "குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்'. இதுவரை எந்த நீதிமன்றமும் இந்த சட்டவிரோதமான என்கவுன்ட்டர்களை எதிர்த்து காவல்துறையைக் கேள்வி கேட்கவோ, விசாரிக்கவோ இல்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை எவரும் அப்பாவியே என்ற உண்மை இங்கு செல்லாக்காசாகிவிட்டது.
  • பெரும்பாலான மக்கள் இந்த என்கவுன்ட்டர்களை ஆதரிப்பதும் பாராட்டி மகிழ்வதும் ஆபத்தின் அறிகுறிகள். யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்வதும், முறையான விசாரணையின்றி சுட்டுக் கொல்வதும், சர்வாதிகார நாசத்துக்கே நம்மை இட்டுச் செல்லும். அதன்பிறகு சட்டத்தின் ஆட்சியைத் தொலைத்துவிட்டு, ஜனநாயக நாடு என்று நாம் பெருமிதப்பட முடியாது.
  • ஜனவரி 2017 முதல் ஜனவரி 2022 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 655 என்கவுன்ட்டர் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் முதலிடத்தில் இருக்கின்றன; அஸ்ஸாம், ஜார்க்கண்ட், ஒடிஸா, மகாராஷ்டிரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. காவல்துறையினர் நடத்திய இந்த என்கவுன்ட்டர்களில் எத்தனை உண்மையானவை, எத்தனை போலியானவை என்பது யாருக்குத் தெரியும்?
  • இந்த என்கவுன்ட்டர்களின் பின்புலத்தை அனைவராலும் அறிய இயலாது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்தில் 2023 ஜனவரியில் நிகழத்தப்பட்ட என்கவுன்ட்டர் போலியானது என்று கண்டறியப்பட்டது; போலி மோதலை உருவாக்கி, இதுவரை குற்றப்பட்டியலில் இல்லாத ஒருவரை சுட்டுக் கொன்றதாக, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுவும் கூட அலகாபாத் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில், அப்பகுதி தலைமை நீதித்துறை நடுவரின் உத்தரவை அடுத்தே சாத்தியமானது.
  • ஜனநாயகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டிய சாபங்கள். இவை நீதிமன்றங்களின் கம்பீரத்தையும் நீதிவழங்கும் கடமையையும் மடை மாற்றுவதாகும். அரசியல் சாசனத்தின் 21-ஆவது பிரிவு, அனைத்து மக்களும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. இந்த நெறிமுறையை நாங்கள் மதிக்க மாட்டோம் என்று நீதித்துறையிடம் மாநில அரசுகள் சொல்வதாகவே, இதை நான் கருதுகிறேன்.
  • உண்மையில் இதனை உச்சநீதிமன்றம் கடுமையாகவே அணுகுகிறது. 2011-இல் விசாரிக்கப்பட்ட பிரகாஷ் கதம் (எதிர்) ராம்பிரசாத் விஸ்வநாத் குப்தா 2011(6) எஸ்சிசி189 வழக்கில், "என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் காவல் துறையினரின் நடவடிக்கை போலியானது என்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். அந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காகவே கையாள வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
  • ஓம் பிரகாஷ் (எதிர்) ஜார்க்கண்ட் மாநில அரசு (2012) 12 எஸ்சிசி 72 வழக்கிலும், "ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவரைக் கொல்வது காவல்துறையினரின் கடமையாகி விடாது' என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
  • 2014-இல் "மக்கள் குடியுரிமைக்கான ஒன்றியம்' என்ற தன்னார்வ அமைப்பு மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், காவல்துறையினரின் என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரிக்க 16 அம்ச நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிவித்தது. தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இதுதொடர்பாக 2014 செப்டம்பர் 23-இல் விரிவான உத்தரவைப் பிறப்பித்தது. அதில் "தனிமனிதனின் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
  • அப்போது நீதிபதிகள் அமர்வு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளில், என்கவுன்ட்டர் தொடர்பான ஆதாரங்களை பத்திரமாகப் பாதுகாத்தல், எந்தத் தாமதமுமின்றி என்கவுன்ட்டர் காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தல், குற்றப் புலனாய்வுத் துறையின் சுதந்திரமான விசாரணை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 176-ஆவது பிரிவின் கீழ் நீதிபதி தலைமையிலான விசாரணை, விசாரணையை விரைவாக நடத்தி முடித்து குற்றம் புரிந்தவர்களைத் தண்டித்தல் ஆகியவை அடங்கி இருக்கின்றன.
  • இந்த விஷயத்தில் சர்வதேச சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. மனித உயிர்களை மலிவாகக் கருதும் போக்கைத் தடுக்கும் விதியே சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களில் இன்றியமையாததாகக் குறிப்பிடப்படுகிறது. மனிதத் தன்மைக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதக் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச சட்ட விதிமுறை "ஜஸ் கோகன்ஸ்' எனப்படுகிறது. இந்த விதிமுறையை உலக நாடுகளிலுள்ள அரசுகள் தங்கள் தவறான செயல்பாடுகளால் இழிவுபடுத்தக் கூடாது என்பது சர்வதேச ஒப்பந்தங்களில் தவிர்க்க இயலாத அம்சமாகும்.
  • 2012-இல் கூடிய சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் பிரகடனத்தில் (பராகுவேவைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர் ஃபுளோரென்டினா ஒல்மெடா சமர்ப்பித்த அறிக்கை எண்: 1828 / 2008) ""அரசாங்கங்கள் தங்கள் பாதுகாப்புப் படைகளே தன்னிச்சையாக மக்களைக் கொல்வதைத் தடுப்பது அவசியம்'' என்று இதனை ஆமோதித்திருக்கிறது.
  • 2016-இல் இதனை ஏற்பதாக அறிவித்த ஐ.நா. சபை, சட்டவிரோதமான மரணங்களை விசாரிக்க நெறிமுறையையை உருவாக்கியது. அது "மினசாட்டோ நெறிமுறை' என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்துவிதமான சட்டத்துக்குப் புறம்பான மரணங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கூறுகிறது.
  • ஒருவரது சட்டத்துக்குப் புறம்பான மரணம் எந்த சூழ்நிலையில் நிகழ்ந்தது, அரசின் கவனமின்மை அல்லது புறக்கணிப்பால் அது நிகழ்ந்ததா, அரசின் விசாரணை அமைப்புகளின் கண்காணிப்புப் பிடியில் இருக்கும்போது அது நிகழ்ந்ததா என்றெல்லாம் விசாரிக்குமாறு "மினசாட்டோ நெறிமுறை' அறிவுறுத்துகிறது. அதாவது, ஒருவர் கொடூரமான குற்றவாளியாகவே இருந்தபோதிலும், அவரது உயிரைப் பாதுகாப்பது அரசின் கடமை என்கிறது "மினசாட்டோ நெறிமுறை'.
  • நமது திரைப்படங்களில் சித்திரிக்கப்படும் துப்பாக்கி கலாசாரமும், காவல்துறையினரை கதாநாயகனாக்கும் என்கவுன்ட்டர் காட்சிகளும் மக்களின் சிந்தனையில் சிதைவை ஏற்படுத்துகின்றன. அதுவே நாட்டைப் பாதுகாக்க இத்தகைய என்கவுன்ட்டர் கொலைகள் தேவை என்ற எண்ணத்தை மக்களிடையே விதைக்கின்றன.
  • இந்நிலை தொடருமானால், சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை நியாயப்படுத்துவது இயல்பான வழக்கமாகி விட்டால், சட்டத்தின் ஆட்சி என்பது நாட்டில் நிலைத்திருக்க இயலாது. இதனை மறந்தால், நமது அரசு நிர்வாகத்தையும், அரசியலையும் முறைப்படுத்தும் அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் நிச்சயமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.
  • எனவே, நாட்டில் நிகழும் சட்டத்துக்குப் புறம்பான உயிர்க்கொலைகளைக் கட்டுப்படுத்த, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த விவகாரத்தில் தவறிழைப்போருக்கு முன்மாதிரியான கடும் தண்டனைகளை அறிவிப்பதன் வாயிலாக இத்தகைய குற்றங்கள் தடுக்கப்படும்.

நன்றி: தினமணி (17 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories