முடிவே இல்லாத காதல்
- திருமணம், சேர்ந்து வாழ்தல் எதுவாயினும் இரு மனிதர்கள் வாழ்க்கையை மிச்சம் மீதி, ஒளிவு மறைவு ஏதும் இன்றிப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியங்களை அது அளிக்கிறது. இணையோடு வாழ்வதைத் தவிர்ப்பது ஓர் அசாதாரணமான முடிவுதான். எனினும் அந்த முடிவை எடுத்துத் தனித்தே வாழ்பவர்களும் சேர்ந்ததுதான் நம் சமூகமாக உள்ளது.
- இன்னொருவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளாதவர்கள் மனிதப் பிறவியாகப் பிறந்ததன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை என்கிற பரிவு நமக்குத் தோன்றலாம். அனைவரும் சேர்ந்து இவர்களைப் புறக்கணித்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சிகூட ஏற்படலாம். உரிமை இருக்குமிடத்தில் அவர்களோடு தயக்கம் ஏதும் இன்றி நம்மால் உரையாட முடியும். தனியாக வாழ்வது என்கிற முடிவை எடுக்க நேர்ந்தது குறித்த நம் கேள்வி அவர்களை ஒருவேளை வருந்த வைக்கலாம். அல்லது அவர்கள் அளிக்கும் பதில் நம்மை வருந்தச் செய்யலாம். இரண்டுக்குமான சாத்தியங்களை ஏற்றுக்கொள்ள முடிகிற உறவு இருக்கையில் அங்கே மனம் விட்டுப் பேச முடிகிறது. அப்படியோர் உரையாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வாய்த்தது. அந்த உரையாடலில் கேள்வி கேட்டவர் ஜெயகாந்தன்; பதில் சொன்னவர் தோழர் ஏ.எஸ்.கே.
ஏ.எஸ்.கே - சுருக்கமான வரலாறு:
- இவரது முழுப்பெயர் ஆவியூர் . சீனிவாசய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி. இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டமைத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவர். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த தமிழர். இந்திய விடுதலைக்காகப் போராடிக் கணிசமான காலத்தைச் சிறையில் கழித்தவர். சென்னையில் பல தொழிற்சங்கங்களை நிறுவியதில் ஏ.எஸ்.கேக்குப் பெரும்பங்கு உண்டு. இவர் பொதுவுடைமைக் கட்சிக்குப் பெருமளவில் நிதி திரட்டிக் கொடுத்தார். தனது சம காலத் தலைவர்களான பெரியார் ஈ.வெ.ரா மீதும் அண்ணல் அம்பேத்கர் மீதும் ஏ.எஸ்.கே. மிகவும் மதிப்பு கொண்டிருந்தார். டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா போன்றவை இவர் எழுதிய நூல்கள். தொடக்கத்தில் ஏ.எஸ்.கே. அய்யங்கார் என அழைக்கப்பட்ட அவர், பிற்காலத்தில் அந்த அடையாளத்தை அதிகாரபூர்வமாக அகற்றி விட்டார்.
- ஏ.எஸ்.கேயின் பேச்சும் செயல்பாடுகளும் ஜெயகாந்தனின் இளமைக்காலத்தில் ஈர்த்திருக்கின்றன. தன்னை விட வயதில் மூத்தவர்களோடுகூட மனத்தடைகள் இன்றிப் பேசும் இயல்பு ஜெயகாந்தனுக்கு உண்டு. அவர் சந்தித்த மூத்தவர் பலரைப் போன்றே ஏ.எஸ்.கேயும் அதை ரசிப்பவராக இருந்தார்.
ஜெயகாந்தனின் நினைவுகூரல்:
- ஜெயகாந்தன் போகிற போக்கில் ஒரு நாள்குறிப்பு போல எழுதியுள்ள பத்திகள் செறிவான அனுபவத்தைக் கொண்டிருக்கும். தனக்கோ, பிறருக்கோ ஏற்பட்ட மிக அரிதான அனுபவங்களை மிகச் சில வரிகளில் சொல்லி விடுகிற திறன் அவருக்கு உண்டு. ஏ.எஸ்.கே பற்றி அவர் எழுதிய பத்தி அதற்கு ஓர் உதாரணம். எழுபது வயது வரை வாழ்ந்த ஏ.எஸ்.கே. இறுதிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தது குறித்து ஜெயகாந்தனுக்குக் கேள்விகள் இருந்தன. அவர் உடனான உரையாடலை ஜெயகாந்தன் ஒரு வார இதழில் 1987-1988இல் எழுதி வந்த தொடரில் பதிவு செய்திருக்கிறார். அது ‘சிந்தையில் ஆயிரம்’ என்கிற நூலாக அக்காலக்கட்டத்திலேயே வெளிவந்தது.
ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?
- தொழிற்சங்க நிர்வாகி என்றவுடன், புன்னகைப்பதற்குக்கூட மறுக்கிற சில முகங்கள் நம் நினைவுக்கு வரக்கூடும். ஏ.எஸ்.கே. ஒரு விதிவிலக்கு. ‘ஏ.எஸ்.கே. தோற்றப்பொலிவில் ஒரு செல்வச் சீமானுக்கு இணையான கம்பீரத்தோடு விளங்குவார். அவர் கையில் புகைக்குழாயுடன் தொண்டர்களுக்குக் கட்டளையிடும்போது ஓர் ஆங்கிலேயருக்கு இந்திய வேஷம் போட்டது போலிருக்கும்’ - இது ஜெயகாந்தன் ஏ.எஸ்.கேவுக்கு எழுதிய வர்ணனை.
- எழுத்தாளரான ஏ.எஸ்.கே. கவிதைகளும் எழுதியுள்ளார். அவருக்கு ஆங்கிலத்தில் மிகுந்த தேர்ச்சி. ஊருக்கு உழைப்பதிலும் பயணிப்பதிலும் எழுதுவதிலும் வாழ்நாளையே செலவிட்ட ஒருவருக்குக் காதல் அனுபவம் இருந்திருக்கும் சாத்தியங்கள் அதிகம். நம்மைப் போல ஜெயகாந்தனும் அதை யூகித்திருக்கிறார்.
- “ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை?” என ஜெயகாந்தன் அவரிடம் ஒருநாள் கேட்டிருக்கிறார். “நீ ஏன் திருமணம் செய்துகொண்டாய்?’ - இது ஏ.எஸ்.கேயின் பதில் கேள்வி. “நான் காதலித்தேன். திருமணம் செய்துகொண்டேன்” என ஜெயகாந்தன் கூற, “நான் திருமணம் செய்துகொள்ளாததற்கும் அதுதான் காரணம்” என்கிறார் ஏ.எஸ்.கே.
- அவருக்குக் காதல் இருந்தது. அது கைகூடவில்லை. ஏ.எஸ்.கே. திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணம். திருமணத்தில் முடியாத காதல் பலருக்கு ஏற்படும் அனுபவம்தான். உரையாடலில் முத்தாய்ப்பாக அவர் சொன்னதுதான் கவனிக்கத்தக்கதாகிறது. “ நான் காதலித்தேன். அவள் திருமணம் செய்துகொண்டாள். அதன் பிறகு காதலிப்பவர்களை, திருமணம் செய்துகொள்பவர்களை எல்லாம் நான் காதலித்துக்கொண்டிருக்கிறேன். அதுதான் முக்கியம்” என்கிறார் ஏ.எஸ்.கே.
- ‘வாழ்க்கையைக் காதலிப்பவர்கள்தான் லட்சியத்துக்காகப் போராடுவார்கள்’ என ஏ.எஸ்.கே., நிறைவாகச் சொன்ன வார்த்தைகள் ஜெயகாந்தன் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. வாக்குமூலத்துக்கு நிகரான இக்கூற்றுக்கு நியாயம் செய்வதாக அத்தனை ஆண்டுகள் ஏ.எஸ்.கே. வாழ்ந்ததுதான், அதை ஜெயகாந்தனை எழுத்தில் பதிவு செய்ய வைத்திருக்கின்றன.
பரந்த காதலைப் பேசிய திரைப்படம்:
- அரிதாகச் சில கதைகளோ, திரைப்படங்களோ ஏ.எஸ்.கே. போன்றவர்களைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. இயக்குநர் பாலாஜி சக்திவேலின் முதல் படமான ‘சாமுராய்’இன் நாயகனிடம் இதே காதல் வெளிப்படுவதைக் காண முடிந்தது. பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றுபவனாகத்தான் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். நடிகர் விக்ரம், சிறிதும் ஆர்ப்பாட்டம் அற்ற நடிப்பால் அதற்கு உயிரூட்டியிருப்பார்.
- ஊழலுக்கு எதிராக வன்முறை சார்ந்த போராட்டத்தில் இறங்கும் நாயகனைக் காவல்துறை கைது செய்யும். விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்படுவான். அவனை வேனில் கொண்டுசென்று கொண்டிருக்கும்போது, மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடி காரணமாகச் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது கணவன், மனைவி, குழந்தை என ஒரு குடும்பம் இரு சக்கர வாகனத்தில் வேனுக்கு அருகில் காத்திருக்கும். “பாருடா...இந்தக் குடும்பம் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறது? நீயும் அப்படி இருக்க வேண்டியதுதானே” எனக் காவல்துறை அதிகாரி ஆத்திரப்படுவார். “அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் போராடுகிறேன்” என்பான் நாயகன்.அவன் நேசித்த கல்லூரித் தோழி மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்திருப்பாள் என்பதுதான் நாயகனின் முன்கதையாக இருக்கும். மக்கள் தொண்டுக்கே வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பலரை இயக்கிக் கொண்டிருக்கும் மனநிலையை இந்தக் காட்சி வெளிப்படுத்தியது.
- சமூகத்தொண்டுக்காக மட்டுமல்லாமல், கலை, ஆன்மிகம் போன்ற காரணங்களுக்காகவும் தங்கள் திருமணத்தையோ, சேர்ந்து வாழ்தலையோ விலக்கிக் கொண்டவர்கள் பலர். குடும்பப் பொறுப்புக்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அக்கா, அண்ணன்களும் நம்மிடையே உண்டு. எந்தக் காரணமாக இருப்பினும், ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து வாழும் இன்பத்தை இழக்க வேண்டுமா என்பது விவாதத்துக்கு உரியது. அது அவரவர் தேர்வு. அதில் பிறர் நுழைந்து தீர்ப்பு எழுதக் கூடாது. தனது மகிழ்ச்சிக்காக சக மனிதரின் உணர்ச்சிகளைச் சுரண்டாத எந்த வாழ்க்கை முறையும் ஏற்கத் தக்கதுதான்.
- நாம் ஒரு சமூகமாக இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிற பல நன்மைகளில் ஏ.எஸ்.கே போன்ற தீராக் காதலர்களின் உழைப்பு இருக்கிறது என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)